தினத்தந்தி, மாலைமலர் இதழ்களில்
பாலியல் குற்றங்கள் பற்றிய
செய்தி வெளியிடும் முறையை மாற்றிக்கொள்ளவேண்டி இம்மடல்
15-06-2014
ஆசிரியர்,
தினத் தந்தி மற்றும் மாலை மலர் ,
வேப்பேரி, சென்னை -07.
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம் .
தமிழகத்தின் சின்னஞ்சிறு கிராமங்களிலும், பெரு நகரங்களிலும் உள்ள வெகு ஜன மக்களிடம், பல்வேறு செய்திகளை, எளிய தமிழில் கொண்டு செல்லும் பாரம்பரியம் மிக்க பெரிய பத்திரிக்கைக் குழுமம் தங்களுடையது. நானும் தினத்தந்தியின்
வெகு நாளைய வாசகன். ஆயினும், தங்கள் இதழில் சில வார்த்தைகளைக்
கையாளும் முறை சற்று வருத்தமளிப்பதாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் சாதாரணமாகத் தோன்றும் சில அணுகுமுறைகள்,
இருபத்தோராம் நூற்றாண்டின்
இரண்டாவது பத்தாண்டின் இருக்கும் இன்றைய நவீன நாகரீகச் சூழலில் தவறானதாகவும்,
வினோதமாகவும், பிற்போக்குத்தனமாகவும் தோன்றுகிறது.
சிறுமிகளைக் கற்பழித்த
காமுகன்?
கற்பு என்பது பெண்ணிற்கு மட்டுமே வேண்டியது என்னும் அன்றைய சமூகத்தின் அணுகுமுறையை ஒதுக்கி, கற்பென்றால் அது ஆணுக்கும், பெண்ணுக்குமாக
இருவருக்கும் வேண்டியது என்று பேசுகின்ற காலம் இது. அப்படிப்பட்ட முற்போக்கு சிந்தனையை இன்னும் தீவிரமாக வளர்க்க வேண்டிய நேரம் இது. ஊடகங்கள் இப்படிப் பட்ட சமூக மாற்றம் வருவதற்கு பெரும்பங்கு ஆற்ற முடியும் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அப்படியிருக்க, தினத்தந்தியிலும்,
மாலைமலரிலும் ' சிறுமிகளைக் கற்பழித்த காமுகன்' என்று எழுதுவது நியாயமா ? அதிலும், 10, 11 வயதுடைய, பெண்மைப் பருவம் அடையாத சிறுமிகளிடம், என்ன கற்பை எதிர்பார்க்கிறோம்? சின்னஞ்சிறு குழந்தைகள் மீது, பாலியல் வன்முறையைத் தொடுக்கும் ஒரு சமூகக் குற்றவாளியை காமுகன் என்றும், அவன் குழந்தையின் கற்பை அழித்தான் என்றும் எழுதுவது, வாசிக்கும் சமூகத்திடம் தவறான கருத்தியலைக் கொண்டு திணிப்பதாகாதா ?
காதலியை நண்பர்களுக்கு விருந்தளித்த இளைஞன் ?
காதல் பற்றி ஏற்கனவே இளைஞர்களிடையே பல்வேறு தவறான பிற்போக்கான கருத்தியல்களை
சராசரி திரைப்படங்கள்
திணித்து வருகின்றன. அப்படியிருக்க, சமீபத்தில், தங்கள் நாளிதழில், 'காதலியை நண்பர்களுக்கு
விருந்தளித்த இளைஞன்' என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தீர்கள். 16 வயது சிறுமியிடம், கெட்ட நோக்கத்துடன்
பழகும் இளைஞன், ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுகிறான். இரண்டும் கெட்டான் வயதில் அந்த மாணவிக்கு குழப்பம் ஏற்படுவது இயல்பு தானே? பெண்ணின் திருமண வயது 18 என்று இருக்கும்போது, +2 படிக்கும் பள்ளி மாணவியை, 'காதலி' என்று எழுதுவதில் அர்த்தமுண்டா? கெட்ட நோக்கத்துடன் அந்த பள்ளி மாணவியை ஏமாற்றிக் கொண்டுவரும் இந்தக் குற்றவாளி, அம்மாணவியை, அவனது கூட்டாளிகளைகொண்டு மனிதாபிமானம்
சற்றும் இல்லாமல் கூட்டு வன்புணர்வு செய்யத்தூண்டிய கொடிய குற்றத்தை, 'விருந்து' என்று எழுத தங்கள் பத்திரிக்கைக்கு எப்படி மனம் வருகிறது?
காலம் காலமாக பெண்களும் குழந்தைகளும் இந்த வக்கிரம் பிடித்த சாதியமும் ஆணாதிக்கமும் இணைந்த மோசமான சமூகத்தில் அடிமைப்பட்டு வன்முறைக்கு இலக்காகி வந்த நிலையில், இன்றைய பொருளாதாரச் சந்தை, தனது இலாப வெறிக்காக, பெண்களை போதை தரும் நுகர்வுப் பொருளாகவே இடைவிடாது காட்டிவருகிறது. விளம்பரம், வியாபாரம், சர்குலேஷன் போன்றவற்றைத் தக்கவைத்துக்கொள்ள
வேண்டிய அழுத்தம் இருந்தாலும், செய்தியையே, பரபரப்பு விளம்பரமாக்கி, கூட்டு வன்முறைக்கு ஆளாகும் அப்பாவி பள்ளி மாணவியை, எதோ ஐஸ் கிரீம், மிட்டாய், தலப்பாக்கட்டி
பிரியாணி, விஸ்கி போன்று 'விருந்து' என்று தலைப்பிட்டு வாசகர்களின் 'ருசிக்காக்கவும் ',
'மலிவான கிளர்ச்சிக்காகவும்' எழுதுவது எந்தவிதத்திலும்
நியாயப்படுத்த முடியாத, சமூக மாற்றம் விரும்பும் ஆர்வலர்களால் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. 16 வயது பள்ளி மாணவியை, போதை தலைக்கேறிய ரவுடிகள் சாராயம் குடித்துக்கொண்டே அள்ளி சாப்பிடுவதற்கு
வசதியாக ஒரு பெரிய தட்டில் பரிமாறப்பட்ட
சைட் டிஷ் என்று கருதுவதா ?
நம் வீட்டுக் குழந்தை மீது இப்படிப்பட்ட
கொடூரமான பாலியல் தாக்குதல் நடந்தால், அதனை 'விருந்து' என்று கூறுவோமா
? டில்லியில் நிர்பயா என்று ஊடகங்களால் பெயரிடப்பட்ட பெண்ணுக்கு நடந்த பாலியல் தாக்குதலுக்குப் பின், மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் குற்றவியல் சட்டம் திருத்தம் கொண்டுவரப்பட்டு
கடுமையாக்கப்பட்டது. அந்தச்சட்டத்தின்
பிரிவு 354C-படி, Voyeurism (அதாவது, மறைமுகமாக,ஒருவரின் விருப்பமில்லாமல் அவரது உடலைப் பாலியல் ரீதியாக, வக்கிர எண்ணத்துடன் கொச்சைப்படுத்துவது) எனும் வக்கிர செயல்பாடு என்பது 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கான குற்றம். வளர் இளம் பெண் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாவதை, விருந்து என்று எழுதுவதும், அதனை ருசிகரமாக அதீத கற்பனையுடன் படித்து ரசிப்பதும், இப்படிப்பட்ட வக்கிர செயல்பாடு அல்லவா? ஊடகங்களின் பாலியல் வன்முறை பற்றிய இப்படிப்பட்ட
வர்ணனைகளே, சமூகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு
ஒரு தூண்டுதலாக இருந்துவிடுமோ எனும் அச்சம் ஏற்படுகிறது.
தயவு செய்து, மேற்கூறிய கருத்துக்களில் உள்ள உண்மைத்தன்மையைப் புரிந்துகொண்டு, தங்கள் இதழின் வார்த்தைக் கையாளுவதையும்,
செய்தி சொல்லும் விதத்தையும் சற்று மாற்றியமைத்துக்கொண்டு, வாசகர்களிடம் பாலியல் குற்றங்கள் குறித்து, ஒரு தார்மீக கோபமும், சிந்தனையும் வளரும் விதமாகவும், ஆரோக்கியமான மன நிலை ஏற்படும் விதமாகவும் செய்திகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி, வாழ்த்துக்கள்!!
--
Best wishes
தோழமையுடன்
A.Narayanan
(9840393581)
அ .நாராயணன் (9840393581)
Director
இயக்குனர், மாற்றம் இந்தியா
CHANGEindia ( a centre
for advocacy and research) ஆசிரியர், பாடம் மாத இதழ்
& Editor,
paadam magazine on development politics (www.paadam.in)
2/628, Rapid Nagar,
Gerugambakkam, Chennai
- 602101.