Saturday 27 December 2014

மது ஏன் குடிக்க கூடாது?




 
மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகிறது. இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது.

இது மற்றொரு என்சை மான அசிட்டால்டிஹைட் டிஹைட்ரோஜீனேசை தூண்டுகிறது. இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால்டிஹைடை அசிட்டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த என்சைம் சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும். வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதிக்கப்படுவதாலும். விஷத்தன்மை மிக்க அசிட்டால்டிஹைட் மூளை ரத்தத்தில் சுற்றுவதாலும் வாந்தி ஏற்படும்.

மேலும் ஆன்டி டயூரிட்டி ஹார்மோன் சுரப்பையும் ஆல்கஹால் பாதிக்கிறது. இதனால் உடலின் நீர் சமநிலை பாதிக்கும். சிறுநீரகம் சிறுநீரில் உள்ள அதிகப்படியான தண்ணீரை மீண்டும் கிரகிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படும். இது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்கும்.ஆல்கஹால் காரணமாக கணயம் அதிக இன்சுலினை சுரக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும். இதனால் தலைவலி, வாந்தி ஏற்படும்.ஆல்கஹால் உட்கொள்வதால் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் இதய கோளாறுகள் ஏற்படும்.மேலும் உடல் வெப்பநிலையும் குறையும்.

குடித்த உடன் பேச்சுக்குளறல், தூக்கம், வாந்தி, பேதி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, சுவாசக்கோளாறு, காது கேளாமை, முடிவெடுக்க முடியாமை, சுய நினைவை இழத்தல், ரத்த சோகை உள்ளிட்டவை ஏற்படும். மேலும் அதிக ரத்த அழுத்தம், ஸ்டோக், இருதய கோளாறு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு, குடும்ப வன்முறை, அல்சர், வாய், தொண்டை கேன்சர் உள்ளிட்டவையும் ஏற்படும். இவ்வாறு ஆல்கஹால் செய்யும் கெடுதல்கள் பட்டியல் நீளமானது. ஆனால் நன்மை எதுவுமே இல்லை.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing