Wednesday, 9 December 2015

வெள்ளத்தில் இருந்து மீண்டவர்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் வராமல் தடுக்க அரசு மருத்துவமனைகள், மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஆகியவற்றிலும், பொது சுகாதார குழு வரும் போதும் பொதுமக்கள் சுகாதார அறிவுரைகளை பெற்றுக் கொள்ளலாம்.காயமடைந்த நபர்களுக்கு அனைத்து மருத்துவ முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஜன்னி ஊசி போடப்படுகிறது. பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய பிளீச்சிங் பவுடர் ஆகியவை வழங்கப்படுகிறது.

வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வராமல் தடுக்க பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட,கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துதல் நலம். சோப்பு போட்டு அடிக்கடி கைகளை நீரினால் கழுவ வேண்டும்.காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகமான நபர்களுக்கு ஏற்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனை, நடமாடும் மருத்துவக் குழு மற்றும் பொது சுகாதார கட்டுப்பாட்டு மையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் (தொலைபேசி எண்கள் 044-24350496, 044-24334811, 9444340496, 9361482899).
மூழ்கிய ஆழ்துளை கிணறுகள், தரைமட்டகுடிநீர் தொட்டிகள், திறந்த வெளி கிணறுகள், ஆகியவைகள் சுத்தம் செய்ய பின்னரே குடிநீரை சேகரிக்க பயன்படுத்த வேண்டும். தரைமட்ட குடிநீர் தொட்டிகள், மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட வேண்டும்.பிளீச்சிங் பவுடரைக் கொண்டு தரைமட்ட குடிநீர் தொட்டிகள், மேல் நிலைகுடிநீர் தொட்டிகளை நன்கு தேய்த்து கழுவிவிட வேண்டும்.
குழாய்களில் அசுத்தம் வெளியேற அசுத்தக் கூறுகள் வெளியில் செல்ல ஏதுவாக எல்லா குழாய்களிலும் தண்ணீரை திறந்துவிட்டு ஐந்து நிமிடங்கள் கழித்த பின்னர் பயன்படுத்த வேண்டும்.இதே போன்று, கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளும் கிருமி நீக்கம் செய்யப்படவேண்டும். முகாம்களில் உள்ள மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், முகாமில் வழங்கப்படும் குடிதண்ணீரை மட்டுமே அருந்த வேண்டும்.பொதுமக்கள் கழிவறை வசதிகளை பயன்படுத்த வேண்டும்.
குப்பை மற்றும் அழுகிய பொருட்களில் ஈக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குப்பை மற்றும் அழுகிய பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த இடங்களை பிளீச்சீங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றைக் கொண்டு கிருமி நீக்கம் செய்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.
இறந்து போன விலங்குகள் மற்றும் பறவைகளை காண நேர்ந்தால் உடனடியாக நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும். அவைகளை ஆழப்பள்ளம் தோண்டி புதைத்து, புதைத்த இடத்தில் பிளீச்சிங் பவுடரை தூவ வேண்டும். பொதுமக்கள் மருத்துவ உதவிகள் பெற, 24 மணி நேர மருத்துவ உதவி தொலைபேசி எண் '104'-ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing