
"காயத்ரிக்கு நிகரான ம்ந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; 
காசியை மிஞ்சிய தீர்த்தமுமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமுமில்லை!" என்பது 
ஆன்றோரின் அருள்வாக்கு.
 கிருஷ்ண பரமாத்மா ‘மாதங்களில் தான் 
மார்கழியாய் இருப்பேன்’ என்கிறார். அதனால் வைணவத் தலங்களில் மார்கழி 
மாதத்திற்கு என தனிச்சிறப்பு உண்டு. உலகிற்கெல்லாம் படியளக்கும் பரந்தாமன் 
வீற்றிருக்கும் வைகுண்டத்தின் கதவுகள் திறந்து வைகுண்டநாதனின் தரிசனம் 
கிடைப்பதும் இம்மாதத்தில்தான் என்பதால் மார்கழி மாதம் வைணவர்களுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 
 நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகிறது. அதில் தை முதல் 
ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாதங்களும் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடிய 
உள்ள ஆறு மாதங்களும் ஒரு இரவு என்றும் கணக்கிடப்படுகிறது. மார்கழி 
மாதத்தில் அதாவது தேவர்களின் இருட்டுப் பொழுதில்  உஷக் காலம் எனும் அதிகாலை
 நேரத்தில் நான்கு மணி முதல் ஆறு மணி வரை உள்ள முகூர்த்த வேளையில் வைகுந்த 
வாசல் திறக்கப்படுகின்றது. அச்சமயத்தில் ஆலயங்களில் 
திருப்பள்ளியெழுச்சியும், திருப்பாவையும் படித்து மகாவிஷ்ணுவிற்கு பொங்கல் 
பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம். தேவர்களின்  அதிகாலை நேரத்தில் வைகுந்த
 வாசல்கள் திறந்தே இருந்தாலும் அரங்கன் அவ்வழியாக வெளியே வந்து தரிசனம் 
தரும் நாள் வைகுண்ட ஏகாதசி. தெற்கே பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் 
அரங்கன் அதிகாலையில் சொர்க்கவாசல் எனும் வடக்கு வாசல் வழியாக வருகின்றார். 
இந்த வைபவத்தை தாம் நாம் சொர்க்க வாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகின்றோம். 
ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் 
விரதமிருப்போர் வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் 
ஏகாதசி விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட 
ஏகாதசியில் மட்டுமாவது விரதம் அனுஷ்டிப்பது மேலானப் பலன்களைத் தரும். 
 அதெல்லாம் சரி. ஏகாதசிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்புகள் என்று 
கேட்கிறீர்களா? ஒரு இலையை அசைப்பதற்கு கூட ஆயிரம் அர்த்தங்களை 
வைத்திருக்கும் அந்த பரம்பொருள் ஏகாதசி விரதத்திற்கு தகுந்த காரணம் 
இல்லாமல் வைத்திருப்பாரா என்ன? முரன் என்ற அசுரன் தேவர்களையும் 
முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று 
முறையிட்டனர்.  அதனால் விஷ்ணு முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார். 
பின்னர் ஒரு குகையில் சென்று படுத்துக் கொண்டு ஓய்வெடுக்கலானார். அச்சமயம் 
அவரைக் கண்ட முரன்  பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, அவர் தன் 
உடலிலிருக்கும் ஆற்றல் சக்தியை ஒரு பெண் வடிவத்தில் தோற்று வித்தார். அவள் 
முரனுடன் போரிட்டு  அவனை வென்றாள்.  முரனை வென்ற பெண்ணுக்கு "ஏகாதசி' என்று
 அரங்கன் பெயர் சூட்டினார். அவள் அசுரனை வென்ற நாள் ஏகாதசி என 
அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப் பதவி 
அளிப்பதாகவும் வரமளித்தார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் 
கொண்டாடப்படுகிறது. சக்தி இரவெல்லாம் தூங்காமல் இருந்து விழிப்புடன் 
செயலாற்றி பரந்தாமனில் அருளைப் பெற்றதுப் போல நாமும் ஏகாதசித் திருநாளில் 
இரவெல்லாம் கண்விழித்து அந்த பரம்பொருளை தியானித்து சகல சௌபாக்கியங்களையும்
 பெறுவோம்.
No comments:
Post a Comment