Thursday 29 January 2015

சூரியநமஸ்காரம் அற்புதங்களை நிகழ்த்தும்


 தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது. அதை சூரியநமஸ்காரம் என்று அழைப்பதிலேயே பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சக்திப் பகுதி. சூரிய நமஸ்காரம் உங்கள் நாடிகளைத் திறந்து, உங்களுக்குள் இருக்கும் சூரியனை தூண்டிவிடுகிறது, இதன் மூலம் நீங்கள் மிகவும் துடிப்பாக, உயிர்ப்புடன் இருக்க முடியும். மெதுவாக 100 சூரியநமஸ்காரங்கள் செய்யும் நிலைக்கு வந்துவிட்டால், நீங்கள் ஒரு தடகள வீரரைப் போல ஆகிவிடுவீர்கள். இன்னொரு விஷயம் என்னவென்றால், உங்களை பேணிப் பாதுகாக்கின்ற சூரியனுக்கு தினமும் காலையில் செய்யும் ஒரு வழிபாடாகவும் அது இருக்கிறது. உங்களுக்கு இந்த உடல் இருப்பதன் காரணமே சூரியன்தான், இல்லையா? இந்தக் கலாசாரத்தில் வழிபாடு செய்வதென்றால் சில சடங்குகளைச் செய்வதோ அல்லது சில மந்திரங்களை முணுமுணுப்பதோ அல்ல. உங்கள் முழு உடலையுமே வழிபாடாக ஆக்குவதுதான் இங்கு வழிபடும் முறை.

சூரிய நமஸ்காரத்தின் பலன்கள்:
போதுமான அளவு சூரியநமஸ்காரம் செய்தால், உங்களுடைய தூங்கும் நேரம் மிகவும் குறைந்து, எப்போதும் ஒரு உயர்ந்த நிலையிலேயே இருப்பீர்கள். நீங்களாக எந்த முயற்சியும் செய்யாமலேயே உங்கள் தூக்கம் 4 அல்லது 41/2 மணி நேரமாக மிகச் சுலபத்தில் குறைந்துவிடும். சில வாரப் பயிற்சியிலேயே உங்கள் உற்பத்தித் திறனும், செயல்திறனும் மேம்பட்டுவிடும். யோகப் பயிற்சி செய்வதால், ஒருவர் நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு, மூட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுதலை பெற முடியும். அது தன்னளவில் ஒரு முழுமையான பயிற்சியாகும். அதற்கு எந்தவிதமான கருவிகளும் தேவையில்லை. அது ஒரு வரம், ஏனென்றால் நீங்கள் பயணம் செய்து கொண்டிருந்தாலும், உங்களது பயிற்சிகளைத் தொடர முடியும். சூரியநமஸ்காரத்தைத் சரியாக செய்து பாருங்கள்; உங்கள் உடலில் இருக்கும் அத்தனை பகுதிகளும் நீண்டு, மடங்கி, அவற்றுக்குத் தேவையான உடற்பயிற்சி கிடைத்துவிடும். இதைத் தவிரவும், உங்கள் சக்தி நிலைகளும் உயர்ந்த நிலையை அடைவதால், வாழ்க்கையின் மேடு, பள்ளங்களை பெரிய சிரமங்கள் இல்லாமல் எதிர்கொள்ள முடியும். அதை ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வோடு செய்பவருக்கு சூரியநமஸ்காரம் அற்புதங்களை நிகழ்த்தும். தியானத் தன்மைக்குள் நுழைவதற்கு இது மிக எளிமையான ஒரு வழி. யோகப் பயிற்சி செய்வதால், ஒருவர் நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு, மூட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுதலை பெற முடியும். ஆனால் யோகா என்பது ஒரு சிகிச்சை முறை அல்ல. நீங்கள் யோகாசனங்களை பயிற்சி செய்து வந்தால், அதற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பது வேறு விஷயம். ஆனால் இதை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தக் கூடாது. ஒரு சிகிச்சை முறை என்றால், உங்களுக்கு ஒரு உடல் கோளாறு ஏற்பட்டால், நீங்கள் மருத்துவரிடம் செல்கிறீர்கள், அவர் உங்களுக்கு மருந்து கொடுக்கிறார். நீங்கள் எத்தனை காலம் அந்த மருந்தை சாப்பிடுவீர்கள்? உங்களுடைய பிரச்சனை நீடிக்கும் வரை அந்த மருந்தை உட்கொள்வீர்கள். பிரச்சனை முடிந்தவுடன், மருந்துக்கு எந்த அவசியமும் இல்லை. யோகாசனத்தையும் இப்படி எண்ணக் கூடாது. நீங்கள் யோகாசனங்கள் செய்ய ஆரம்பித்தவுடன், அவற்றை உங்கள் வாழ்க்கையின் ஒரு ஒழுக்கநெறியாகவே கடைபிடிக்க வேண்டும். அதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால் அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறது. அதிலிருந்து உங்களுக்கு கணக்கிலடங்காத பலன்களைப் பெற முடியும். யோகாசனங்களை அணுக இதுதான் சரியான வழி. ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட பலனுக்காகவும் யோகாசனங்களைச் செய்யாதீர்கள். அது அப்படி வேலை செய்யாது.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing