திருமணங்களில் முக்கியச் சடங்கு “அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது”.
இதில் அருந்ததி யார்? நாம் ஏன் அருந்ததியை பார்க்க வேண்டும்? என்ற
கேள்விக்கு விடை தேடலாம்…. ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும்
மிகச்சிறந்த “பிரம்மரிசிகள்”(முனிவர்கள்) ஏழுபேரும் (சப்த-_ஏழு) வானில்
நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள். ஏழு நட்சத்திரங்களில் ஆறாவதாக
இருப்பவர் (நட்சத்திரம்) வசிஷ்டர். இவரின் மனைவிதான் அருந்ததி. வசிஷ்டர்
அருந்ததிக்குமான தனிச்சிறப்பு உண்டு. என்னவென்றால் மற்ற ரிஷிகள் சபலத்தால்
ரம்பா, மேனகா, ஊர்வசி போன்ற வானதேவதைகளிடம் நிலை தடுமாறியவர்கள். இவர்களின்
மனைவிமார்களும் தேவேந்திரனைப் பார்த்து தன்னிலை மறந்தவர்கள். இதில்
வசிஷ்டரும், அருந்ததியும் விதிவிலக்கானவர்கள். எனவே அவர்கள் இணைந்தே
இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து வாழ்க்கையில் இணைபிரியாது வாழவேண்டும்
என்பது ஒரு புராணக்கதை, இரவு நேரத்தில் வடக்கு வானில் மிக எளிதாக அடையாளம்
காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று சப்தரிசி மண்டலம்”. இந்த
நட்சத்திரத் தொகுதிக்கு (தொகுதி என்பது நம் கண்களுக்கு தொகுப்பாக தெரிகிறது
என்பதால் மட்டுமே. உண்மையில் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில்
உள்ளவை) ஒவ்வொரு நாட்டிலும் வேறுவேறு பெயர்கள் உண்டு. உலகத்தின் ஒவ்வொரு
பகுதியிலும் வெவ்வேறான வடிவங்களில் தெரிவதால் பெரும்கரண்டி, கலப்பை என
மேலைநாடுகளில் அழைப்பர். இந்தியாவில் பொதுவாக இதனை சப்தரிசி (ஏழு
முனிவர்கள்)என அழைக்கின்றனர். இதில் உள்ள ஏழு நட்சத்திரங்களுக்கும்
இந்தியாவில் ஏழு முனிவர்களின் பெயர்கள் உண்டு. அவை கிரது, புலஹ, புலஸ்த்ய,
அத்ரி, அங்கிரஸ், வசிஷிட, மரீசி என்பனவாகும். இந்த ஏழு நட்சத்திரங்களில்
ஆறாவதாக உள்ள வசிஷ்ட நட்சத்திரத்தின் அருகில் சற்று கூர்ந்து கவனித்தால்
மங்கலான வெளிச்சத்தில் தெரிவதுதான் அருந்ததி நட்சத்திரம். இவை
இரண்டுக்குமான விஞ்ஞானப் பெயரும் உண்டு. வசிஷ்ட நட்சத்திரம் மிஸார் எனவும்,
அருந்ததி அல்கோர் எனவும் அழைக்கப்படுகிறது. வசிஷ்டரும், அருந்ததியும்
இரட்டை நட்சத்திரங்கள் அல்ல. ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனியே இரட்டை
நட்சத்திரங்கள். அதிலும் மிஸார் என அழைக்கப்படும் வசிஷ்ட நட்சத்திரம்தான்
வானவியல் வரலாற்றில் முதலில் கண்டுபிடிக்கப்ட்ட இரட்டை நட்சத்திரம். 35,000
மில்லியன் மைல்கள் இடைவெளியில் மிஸார்_ எ,மிஸார்_பி என்ற
இருநட்சத்திரங்களும் ஒற்றை ஒன்று சுற்றிக் கொள்கின்றன. சப்தரிசி
மண்டலத்தில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் ஒரே தன்மை உள்ளவை அல்ல. துபே,
அல்கெய்ட், மிஸார் மேராக், ஃபெக்டா, மெக்ரஸ்,வரிசையில் ஒன்றைவிட ஒன்று
மங்கலானது. துபே சற்று ஆரஞ்சு நிறம் கொண்ட 5000 டிகிரி செல்சியஸ் வெப்பம்
கொண்டதாகும். மற்றவை வெண்மை நிறமுடைய 18,000 டிகிரிக்கும் மேலான வெப்பம்
உள்ளவை. சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் வெவ்வேறான
திசைகளில் அதிவேகமாக பயணம் செய்கின்றன. அதனால் சப்தரிசி மண்டலம் தற்போதுள்ள
தோற்றத்தில் ஒருலட்சம் ஆண்டுகளுக்கு முன்னிருந்ததில்லை. ஒரு லட்சம்
ஆண்டுகளுக்கு பின் தற்போதைய தோற்றத்தில் இருக்கபோவதில்லை.(படம் 1ல்
சப்தரிசிமண்டலத்தின் முன்று நிலைகளும் காட்டப்பட்டுள்ளது. முதல் நிலை
1லட்சம் ஆண்களுக்கு முந்தையது, நடுவில் இருப்பது தற்போதைய நிலை, அடுத்ததாக
இருப்பது 1லட்சம் ஆண்டுகளுக்கு பின் ஏற்படப் போகும் நிலை) சப்தரிசி
மண்டலத்தின் முதல் ,இரண்டாவது நட்சத்திரமான துபே, மெராக்கும் காட்டிகள்” என
அழைக்கப்படுகின்றன. ஏன் என்றால் இந்த இரு நட்சத்திரங்களிலிருந்து அமையும்
கற்பனைக்கோடு தற்போதுள்ள துருவ நட்சத்திரமான போலாரிஸ்க்கை காட்டும்.
(இதற்கான விளக்கப் படம் 2)பூமியின் தற்சுழற்சி அச்சு தற்போது இதனை நோக்கித்
தான் அமைந்துள்ளது. இதனால் மற்ற நட்சத்திரங்கள் பூமியின் நகர்வுக்கு ஏற்ப
இடம்மாறினாலும் துருவநட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்கும். அருந்ததி –
ஒரு குறியீடு. முற்காலங்களில் அரசர்களுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள்
(தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள்) இருந்தாக புராணங்கள் கதை கூறுகின்றன. இது
தவிர போரின் வெற்றியாக பிறன்மனைவி கவர்தல்(எதிரியின் மனைவியை கவர்ந்து
வருதல்) என்பதை சங்ககாலப் பாடல்களில் கூறப்படும் செய்தி. அருந்ததியைப்
பார்க்கும் பழக்கம் எப்பொழுது ஏற்பட்டது என்பது தனியான ஆய்வுக்குரியது.
ராமாயணத்தில் ராமனும், சீதையும் லட்சிய தம்பதிகளாக சொல்லப்படும் கதையும்,
சிலப்பதிகாரத்தில் முறைதவறிய கணவனை திருத்தி கணவனுக்காக மதுரையை எரித்த
கண்ணகி, கோவலன் கதைகளும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதியை
நிலைநாட்டுவதற்காக வரலாறு நெடுக தனிச்சொத்துடமை கருத்தாக்கத்தை உருவாக்க
சொல்லப்பட்டு வரும் கதைகளாகும். திருமணத்தின் போது நல்லநாள், பிறந்த
நட்சத்திரங்களின் பொருத்தம், நல்ல நேரம், ஜாதகப்பெருத்தம் பார்பதைவிட
தம்பதிகளின் மனப்பொருத்தம், மருத்துவ ரீதியான சோதனைகள் பார்ப்பது
தம்பதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.
No comments:
Post a Comment