Tuesday 3 February 2015

ஆதரவற்ற பிணங்களுக்கு ஆலங்குடி கணேசன்

குதிரைகளை வைத்து செய்யும் அஸ்வமேதே யாகம் செய்பவர்களுக்கு மிகவும் புண்ணியம் உண்டு .இப்படி ஆயிரம் அஸ்வமேதே யாகம் செய்வதற்கு இணயான புண்ணியம் ஒரு ஆதரவற்ற பிணத்தை எடுத்து அடக்கம் செய்யும்போது கிடைக்கும்...-காஞ்சி மகா சுவாமிகள்.

ஒரு ஆதரவற்ற பிணத்தை எடுத்து அடக்கம் செய்வதற்கே இவ்வளவு புண்ணியம் என்றால் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்தவருக்கு எவ்வளவு புண்ணியம் சேர்ந்திருக்கும்.


ஆனால் வாழ்க்கை போகிற போக்கில் அவர் இதைச்செய்கிறாரே தவிர புண்ணியத்தை எண்ணி செய்யவில்லை.

அவர்தான் ஆலங்குடி கணேசன்

சீவாத நரைத்த தலை காவிக்கறைபடிந்த பற்கள் பட்டன் போடாத அழுக்கான சிலுக்கு சட்டைக்கு சொந்தக்காரர்தான் ஆலங்குடி கணேசன்.

இப்போது 62 வயதாகும் கணேசன் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்து வருவது எல்லாம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில்தான்.

குடும்ப சூழ்நிலை காரணமாக எட்டாம் வகுப்பிற்கு மேல்படிக்க முடியாதவர் பழைய இரும்புகளை வாங்கிவிற்கும் வியாபாரம் செய்வதை பழகி இன்றுவரை அதைத்தான் செய்துவருகிறார்.

42 வருடத்திற்கு முன் ஒரு சம்பவம்.

இறந்துபோன தனது கணவரின் பிணத்தை வீட்டிற்கு எடுத்துச்செல்ல வழியில்லாமல் ஒரு பெண் ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரி முன் அழுது கொண்டிருந்தார்.

அந்தகாலகட்டத்தில் 108 கிடையாது, அந்த ஆஸ்பத்திரியில் அப்போது ஆம்புலன்சும் கிடையாது ஊரில் இரண்டே வாடகை கார்கள்தான் இருந்தன. பிணத்தை ஏற்றினால் பிறகு வேறுயாரும் அந்த காரில் பயணிக்கமாட்டார்கள் என்பதால் வாடகை கார்களும் பிணத்தை ஏற்ற வரவில்லை.

பிறகு கைவண்டியில் வைத்து அந்த பெண் தனது கணவரின் பிணத்தை கொண்டு செல்வதை பார்த்த கணேசன் அந்த கணமே முடிவு செய்தார், பிணத்தை ஏற்றி செல்வதற்காகவே ஒரு கார் வாங்குவது என்று.

கையில் இரும்பு வியாபாரத்திற்கு வைத்திருந்த 17 ஆயிரம் ரூபாயை வைத்து செகண்ட்ஹாண்ட் கார் வாங்கிதானே ஒட்டப் பழகிக்கொண்டார்.

''எனது கடையருகே காரை நிறுத்திவைத்திருப்பேன் அப்போது போன் எல்லாம் கிடையாது ஆஸ்பத்திரியில் இருந்தோ போலீஸ் நிலையத்தில் இருந்தோ தகவல் வந்தால் கடை வியபாரத்தை அப்படியே போட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி போய் பிணத்தை வாங்கி காரில் ஏற்றிக்கொண்டு சம்பந்தபட்டவர்களின் வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிடுவேன். அவர்கள் பார்த்து ஏதாவது டீசல் காசு என்று கொடுத்தால் வாங்கிக்கொள்வேன் இல்லாவிட்டால் திரும்பிவிடுவேன்.

இதைத்தாண்டி ஆஸ்பத்திரியில் இறந்துபோய் கேட்பாரற்று அனாதை பிணம் என்ற அடைமொழியோடு கிடக்கும் ஆதரவற்ற பிணத்தை எடுத்துக்கொண்டுபோய் நானே பிணத்தின் உறவாய் மாறி அடக்கம் செய்யஆரம்பித்தேன். கடந்த 44 ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்திருப்பேன். இது போக அவசர பிரசவத்திற்கு மற்றும் விபத்தில் அடிபட்டவர்களுக்கு எல்லாம் இலவசமாக சென்றுவந்தேன்.

சாதாரண சிறிய ஒடுவேயப்பட்ட வாடகைவீட்டில்தான் குடியிருக்கிறேன். இதுவரை பல கார்கள் மாற்றிவிட்டாலும் இன்னமும் முதல்முதல் வாங்கிய 515 கார் எண்தான் எனக்கு அடைமொழியாகிவிட்டது, 515 கணேசன் என்றால் ஆலங்குடியில் தெரியாதவர்கள் யாரும் கிடையாது.

எனக்கு ஐந்து மகள்கள் நான்கு பேருக்கு திருமணமாகிவிட்டது ஐந்தாவது மகள் படித்துக்கொண்டு இருக்கிறார் வீட்டு விஷயத்தையும் என்னையும் சேர்த்து பார்த்துக்கொள்வது என் மணைவி தெய்வானைதான் 'நீ உன் மனசுக்கு பிடிச்சதை செஞ்சுகிட்டே இருய்யா' என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்துபவர் அவர்தான்.

இப்போது எப்போது பிரசவதேதி என்று கேட்டு முந்தைய நாளே போய் ஆஸ்பத்திரியில் சேர்ந்து கொள்கின்றனர். விபத்து மற்றும் இறந்தவர்களுக்கு உதவ 108 மற்றும் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் இருக்கிறது, என் வண்டி ஆதரவற்றவர்களுக்காக மட்டும் ஒடிக்கொண்டிருக்கிறது. நான் ஒடும்வரை ஒடிக்கொண்டே இருக்கும்.

ஆலங்குடி கணேசனிடம் பேசுவதற்கான எண்:98656 71486.(வயது முதிர்வின் காரணமாக வார்த்தை தெளிவில்லாமல் இருப்பது போல தோன்றலாம் கொஞ்சம் பொறுமையாக பேசவேண்டும், மிஸ்டுகால் பார்த்து பேச தெரியாது ஆகவே அவருடன் பேசவேண்டும் என்று முடிவு செய்தால் திரும்ப திரும்ப முயற்சி செய்துதான் பேசவேண்டும். 

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing