அரச மர நிழலும், வன்னி மர நிழலும் ஆனைமுகன் விரும்பி அமரும் இடங்கள். இவை மட்டுமின்றி, மேலும் பல்வேறு மரங்களின் கீழும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை, வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வன்னிமரப் பிள்ளையார்:
அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.
புன்னை மரப் பிள்ளையார்:
ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக் கசப்பு நீங்கும்.
மகிழ மரப் பிள்ளையார்:
இந்தப் பிள்ளையாருக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால், பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.
மாமரப் பிள்ளையார்:
இந்தப் பிள்ளையாருக்கு கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு, ஏழை சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால், கோபம், பொறாமை, பகைமை மாறி, பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும்.
வேப்ப மரத்து விநாயகர்:
உத்திரட்டாதி நட்சத்திர நாளில், தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னியருக்கு மனம் போல் மாங்கல்யம் கிட்டும்.
ஆலமரப் பிள்ளையார்:
ஆலமரத்தின் கீழ், வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு, நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னங்களை நிவேதனம் செய்து, தானமளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வில்வ மரப் பிள்ளையார்:
சித்திரை நட்சத்திரத்தன்று, இவ்விநாயகருக்கு வழிபாடு செய்து ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் அளித்து, வில்வ மரத்தைச் சுற்றி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.
அரச மரப் பிள்ளையார்:
பூச நட்சத்திரத்தன்று இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்தால், விளைபொருள் மற்றும் பூமியால் லாபம் கூடும்.
பிணம் மீட்ட பிள்ளையார்:
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் குங்கிலியக்கலயநாயனார். இவர் மகன் இறந்து விட்டான். அவனது உடலை தகனம் செய்ய எடுத்துச் செல்லும் போது விநாயகப் பெருமான் வழி மறித்து, நாக கன்னிகை தீர்த்தத்தில் நீராடிச் செல்லுமாறு, கட்டளையிட்டார். பிறகு அவர்கள் வீடு வந்து சேர்ந்ததும், இறந்த மகன் உயிர் பெற்று வந்தான். கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 20 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பனந்தாள் திருத்தலத்தில் இந்த பிணம் மீட்ட விநாயகரை, தரிசிக்கலாம்.
No comments:
Post a Comment