Friday 10 April 2015

கண்ணுக்குத் தெரிய வெளியில் திரியும் அந்தப் பாம்புகளை விட்டு விடு. உன் உள்ளே இருக்கும் அந்தப் பாம்பை தேட, அடக்க வழி தேடு

பாம்பாட்டிசித்தர் சித்தர்களில் போகர் எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிரபலமானவர், பாம்பாட்டி சித்தர். காரணப் பெயர்கள் சாதாரணமாக மனதைவிட்டு அகலவே அகலாது. அதிலும், படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால், ஒரு பிரமிப்போடு கூடிய பார்வை இந்த சித்தர் மேல் எல்லோருக்கும் உண்டு. தமிழ் மக்களுக்கு அதிகம் தெரிந்த சித்தர்களில் இவரும் ஒருவர். பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆடச் செய்து வேடிக்கை காட்டுவதே இவர் தொழில். எவ்வளவு பெரிய பாம்பானாலும் சரி ! எவ்வளவு கொடிய நாகமானாலும் சரி. பிடித்துவிடுவார். அவற்றின் விஷத்தைக் கக்க வைத்துச் சாதாரணமான தண்ணீர்ப் பாம்பு போல் ஆக்கிவிடுவார். விஷத்தை முறிக்கும் மூலிகைகளையெல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்தார். விஷ வைத்திய ஆராய்ச்சியாளர் என்றே அவரைக் கூறலாம். மருத மலையில் விஷ வைத்திய ஆய்வுக் கூடமே நடத்தினார். ஒரு நாள் மலைமேல் பெரிய நவரத்தினப் பாம்பைக் கண்டு, அதைப் பிடிப்பதற்கு விரைந்தார். பாம்பைப் பிடிக்கப் போகும்போது, சட்டைமுனியைக் கண்டார். சட்டைமுனி, பாம்பாட்டிக்கு உபதேசம் செய்தார். காடுகளில் பாம்புகளைப் பிடித்து நாடு நகரில் சென்று அவற்றை ஆட்டிக் கொண்டு, பிழைத்துக் கொண்டிருந்த பாம்பாட்டி ஞானப்பால் உண்டு நானிலம் மெச்சும் சித்தராகி விட்டார். நா.கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதியில் பாம்பாட்டிச் சித்தரைப் பற்றிக் கூறிய கருத்தினைக் காணலாம்.

“இவர் திருக்கோகர்ணத்தைத் தமக்குச் சன்மஸ்தானமாக (பிறந்தவூர்) உடைய ஒரு சித்தர், இவர் காலம் நன்கு புலப்படாத தாயினும் சமீப காலத்தவர் என்பது எளிதில் துணியப்படும். இவர் ஆடு பாம்பே எழுந்தாடு பாம்பே என்று பாம்பை முன்னிலைப்படுத்திப் பாடல் பாடியுள்ளமையால் இவருக்குப் பாம்பாட்டிச் சித்தர் என்றும் பெயர் வழங்கி வருகிறது. இவர் பாடல், கூத்தர் பாடல் போல் வெள்ளையாயிருப்பினும், தத்துவார்த்தங்களின் மேலதாகிய அற்புத ஞானக் கருத்தை உட்கொண்டிருக்கும். இவர் பாம்பு என்று கூறுவது பாம்புருவாக மண்டலமிட்டுக் கிடக்கும் குண்டலினி சக்தியை. 
அதை எழுப்புதல் யோகிகளுக்கு அவசியமாகும். அதனால் எழுப்புவாராயினார்”. பாம்பாட்டிச் சித்தர் ஜோகி என்னும் வகுப்பைச் சார்ந்தவர்.

"கானலை மான் நீரெனவே கண்டு செல்லல் போல் 
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பர் 
மேனிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார் 
மேய்யன்பதம் நாடுவாரேன்று ஆடுபாம்பே!" 
"தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே - சிவன் 
சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே! 
ஆடு பாம்பே! தெளிந்து ஆடு பாம்பே சிவன் 
அடியினைக் கண்டோம் என்று ஆடு பாம்பே" 
- பாம்பாட்டிச் சித்தர் - 

பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருக சீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றும், சட்டை முனியின் சீடர் என்றும் போகர் தனது போகர் 7000 என்னும் நூலில் குறிப்பிடுகிறார். மூலாதரத்தில் இருக்கும் குண்டலினியை உறங்கிக் கிடக்கும் பாம்பு என்று சித்தர்கள் சொல்வர். இந்த குண்டலினி சக்தியானது சுழிமுனை நோக்கி ஏறுவதை, பாம்பு புற்றிலிருந்து ஏறுவது போல என குறியீடாக சொல்வர். இதையே கருத்தாக கொண்டு குண்டலினி சக்தியை மேல் எழுப்புவதை பற்றிய பாடல்கள் பல பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். இவரின் பல பாடல்களில் ஆடு பாம்பே என குண்டலினியை விளித்து பாடியதை அவதானிக்கலாம். 

பாம்பாட்டி சித்தர் பாடல் 
சித்தரா ரூடம் 
பாம்பாட்டி சித்தர் வைத்தியம் 
ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது. 

இவர் தவம் செய்த குகை மருதமலையில் இன்றும் காணப்படுவதாக சொல்லப் படுகின்றது. இவர் விருத்தாசலத்தில் சமாதியடைந்ததாகவும் சொல்லப் படுகிறது. பாம்பாட்டிசித்தர் வாழ்க்கை குறிப்பு இவரின் தொடக்கம் மிகச் சாதாரணமானது. ஜோகியர் என்னும் மலைக் குடியர் இவர். பளியர், ஜோகியர், படுகர், வடுகர், வட்டகர், என்று அந்த நாளில் மலைகளில் வசிப்பவர்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவர்களில் ஜோகியர்கள் பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள். இன்றைய இருளர்களுக்கு ஜோகியர்களே முன்னோடிகள். ஒருமனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்பவே அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கருமம் சார்ந்ததே. பாம்பாட்டி சித்தரும் கர்மப்படி ஜோகியராய்ப் பிறந்து பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். இவர் காலத்திலும், நாகரத்தினங்களுக்காக பாம்புகளைத் தேடுவோர் இருந்தனர். பல ஆண்டுகாலத்திற்கு ஒரு பாம்பானது ஒருவரையும் தீண்டாது வாழ்ந்திட, அந்த விஷமானது கெட்டிப்பட்டு கல் போலாகி அந்தப் பாம்பிற்கே அது வினையாகும். அந்தக் கல், அதற்கு வேதனை தரும். எனவே அது அந்த விஷக்கல்லை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். அப்படி சிரமப்படும் பாம்புகளை கவனித்துக் கண்டறிந்து, கெட்டியான கல்போன்ற அந்த விஷத்தை எடுத்து, அதை நாகமாணிக்கமாகக் கருதி அதிக விலைக்கு விற்பார்கள். சிலர் இந்த மாணிக்கத்தை ஒரு தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் கட்டிக் கொள்வர். இதனால் எதிர்மறை துன்பங்கள் நேராது என்பது நம்பிக்கை. பாம்பாட்டி சித்தரும் பாம்பு பிடிப்பதில் சூரராக இருந்தபோது அவருக்கும் நாகமாணிக்கத்தை தலைமேல் வைத்திருக்கும் பாம்பைத் தேடுவது ஒரு பெரும் லட்சியமாகவே இருந்தது. ஆனால் அந்த மாதிரி பாம்புகள், அவ்வளவு சுலபத்தில் வசப்பட்டுவிடாது. 

ஒரு நாள், அப்படி ஒரு பாம்புக்காக புற்று புற்றாக கையை விட்டுக் கொண்டிருந்த ஜோகியாகிய பாம்பாட்டி, ஒரு புற்றில் கையைவிட்டபோது, விக்கித்துப் போனார். உள்ளே, ஒரு சித்த புருஷர் தவமியற்றிக் கொண்டிருந்தார். அவர்மேல் பாம்பாட்டியின் கை பட்டுவிட, அவரது தவம் கலைந்தது. முதலில் கோபம் வந்தாலும், ஜோகியர் பிழைப்பே பாம்பு பிடிப்பதுதான் என்பதால், அது உடனேயே தணிந்தது. ‘‘நீ யாரப்பா...?’’ சித்த புருஷன் கேட்டார். ‘‘ஜோகிங்க சாமி...’’ ‘‘அரவம் பிடிப்பதுதான் உன் தொழிலா?’’ ‘‘ஆமாங்க... பாழாப் போன தொழிலுங்க.. நாகமாணிக்கப் பாம்பு ஒண்ணு சிக்குனா கூட போதும். இந்தப் பொழப்ப விட்றுவேன்.. ’’ ‘‘ஓ... மாணிக்கக் கல்லுக்காக பாம்புகளை வேட்டையாடுபவனா நீ?’’ ‘‘இல்லீங்க... கல்லு கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டுங்க. ஊரே பயப்பட்ற பாம்புகளை தைரியமாப் பிடிச்சு, அதை மகுடி ஊதி ஆடவைக்கறது எனக்கு ரொம்ப பிடிக்குங்க... அதுல ஒரு பரவசம் இருக்குங்க!’’ ‘‘அற்ப பாம்புகளைப் பிடித்து விளையாடுவதில் உனக்கு ஒரு பரவசமா?’’

‘‘அட என்னங்க நீங்க... புத்துகட்னது கூட தெரியாம உக்காந்து ஏதோ மந்திரம் சொல்லிகிட்டு இருக்கற உங்களுக்கு, மந்திரம் சொல்றதுல பரவசம்னா, எனக்குப் பாம்பை ஆட்டி வைக்கறதுல பரவசங்க. என் தைரியம் உங்களுக்கு உண்டா?’’ ‘‘பகலில் வெளியே வர பயந்து கொண்டும், இரவில் இரை தேடியும், கரையான் புற்றுக்குள்ளும், துவாரங்களிலும் புகுந்து கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளும் பயத்தின் சொரூபமான பாம்புகளைப் பிடிப்பதும் ஆட்டிவைப்பதுமே உனக்கு ஒரு பெரிய பரவசத்தையும் ஆர்வத்தையும் தருமானால், எனக்குள் இருக்கும் குண்டலினி என்னும் பாம்பை, நினைத்த பொழுதெல்லாம் ஆட்டி வைத்து, மலப்பைக்கு நடுவில் கிடக்கும் அந்தக் குண்டலினியை முதுகுத் தண்டு வழியாக உச்சந்தலையாகிய சகஸ்ராரத்திற்குக் கொண்டு சென்று சதாசர்வ காலமும் நித்ய பரவசத்தில் திளைத்தபடி இருப்பவனான நான், எவ்வளவு கர்வம் கொள்ளலாம் தெரியுமா?’’ அவர் கேள்வி, அந்த ஜோகிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது. ‘உங்களுக்குள் ஒரு பாம்பா?’ _ இது முதல் கேள்வி. ‘குண்டலினியை எழுப்பி சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதில் அவ்வளவு பரவசம் உள்ளதா?’ _ இது அடுத்த கேள்வி... அவரும், ‘‘அனுபவித்தால்தானே தெரியும்? சர்க்கரை என்று சொன்னால் இனித்துவிடுமா?’’ என்று திருப்பிக் கேட்க... ஜோகிக்கும் அவருக்கும் இடையே நெருப்பு பற்றிக் கொண்டது.

‘‘நீங்க சொல்றது ஏத்துக்க முடியாததுங்க சாமி... பாம்பு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உயிர் போகற வாழ்க்கைங்க....’’ ‘‘அப்படியா... யோகிக்கு அதெல்லாம் ஒரு விஷயமில்லையப்பா... உடம்பை ஆட்டிப் படைக்கத் தெரிந்த யோகிகளை, எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது... பார்க்கிறாயா?’’ அவர் கேள்வியோடு பக்கத்துப் புற்றில் கையை விட்டு நாகனையும், சாரையையும், கட்டு விரியனையும் வாலைப்பிடித்தெல்லாம் இழுத்து மேனி மேல் விட்டுக் கொண்டார். அவைகளும் அவரிடம் குழந்தை போல விளையாடின. ஜோகிக்கு வியப்பு தாளவில்லை. அந்த நொடி, ஜோகிக்கு தன் தைரியம், பரவசம் எல்லாம் ஓர் அற்பமான எண்ணமே என்பது விளங்கி விட்டது. ‘‘சாமி.... நான் உங்கள மாதிரி சாமியாருங்கள, என்னவோ ஏதோன்னு நினைச்சேன். ஆனா உண்மையில, என்னை நானே இவ்வளவு நாளா ஏமாத்திகிட்டு வந்திருக்கேன். சாமி... நான் இனி வெளிய இருக்கற பாம்பைப் பிடிச்சு அதை இம்சை பண்ணமாட்டேன். எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா?’’ ‘‘அது அவ்வளவு சுலபமல்ல... மன உறுதி, வைராக்யம் இரண்டும் வேண்டும்...’’ 

‘‘என்கிட்ட அது நிறையவே இருக்குங்க... சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?’’ ஜோகி கேட்க, சிஷ்யனாக ஏற்பது போன்ற கனிவான பாவனையில் அவரும் பார்க்க, அந்த நொடியே அவருக்கு அந்த ஜோகி சிஷ்யனானான். சில வருஷத்திலேயே குருவை விஞ்சும் சிஷ்யனாகி விட்டான். குருவின்மேல் ஒரு கம்பளிச் சட்டை கிடந்தது. அழுக்கேறிய சட்டை. ஆனால், அது அவர் உடல் சூட்டை ஒன்றே போல் வைக்க உதவிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால், சட்டை முனி என்று அழைக்கப்பட்டார் அவர். சிஷ்யன் ஜோகியோ குண்டலினிப் பாம்பை ஆட்டிவைக்க வெகுவேகமாகக் கற்றதால், பாம்பாட்டி சித்தர் ஆனார். ஒரு சித்து உள்ளே வருவதுதானே கடினம்! அப்படி வந்துவிட்டால், அது வந்த அதே வழியில்தான் வரிசையாக எல்லா சித்துக்களும் வந்துவிடுமே? பாம்பாட்டி சித்தரும் ஜெகஜ்ஜால சித்தரானார். எச்சில் உமிழ்ந்து, அந்த உமிழ் நீரில் தங்கம் செய்வதிலிருந்து, குப்பென்று ஊதி, ஊதிய வேகத்தில் காற்று விசையால் ஒருவரைக் கீழே விழவைப்பதுவரை அவரது சாகசங்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போயிற்று. ஆனாலும், அவர் அவைகளைப் பெரிதாகக் கருதாமல், குண்டலினி யோகத்தைத்தான் பெரிதாகக் கருதினார். உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார். ‘இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையாய் இருப்பினும் அந்த சூளை அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!’ _ என்று உடல் பற்றி சொன்னாலும் சரி, உள்ளம் பற்றி சொன்னாலும் சரி... அதை குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார். 

ஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர். அந்த நொடியில், உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார். செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று. அரசர் எப்படிப் பிழைத்தார்? அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது? போன உயிர் எப்படித் திரும்பி வரும்? என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்?’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, 
‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா? இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..!?’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர். அப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார். பின்னர், மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் என்பார்கள். கார்த்திகை மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்ததாக இவர் பற்றி தெரியவருகிறது.இவர் சித்தாருடம் என்னும் நூலை எழுதியுள்ளார்.

இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண 
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை 
அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை 
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே ! 

- என மனித உடலின் நிலையற்ற தன்மையை அனைவரும் வியப்புறும் படி பாடியவர்தான் -- பாம்பாட்டிச் சித்தர். 

பாம்புகளைக் கண்டு பயப்படாமல் காடு, மலையெல்லாம் அஞ்சால் பாம்புகளைத் தேடி திரிந்த இளைஞர்தான் பாம்பாட்டிச் சித்தர். ஒருநாள் பாம்பாட்டிச் சித்தரிடம் சிலர் வந்து “தம்பி, உன்னுடைய அசாத்திய துணிச்சல் எங்களை பிரமிக்க வைக்கிறது. நவரத்தின மயமான உடலினை கொண்ட குட்டையான பாம்பு ஒன்று இந்த மலைக்காடுகளில் சுற்றித்திரிகிறது. அதன் தலையில் மாணிக்கம் ஒன்று இருக்கிறது. அந்தப் பாம்பு இரவில் மட்டுமே உலவிடும். மருந்தாக அதன் விஷம், மாணிக்கம் எங்களுக்கு தேவைப்படுகிறது.அந்த விஷப் பாம்பை எப்படியாவது பிடித்து கொடு....” என்றனர். பாம்புகளைப் பிடிக்க புற்றை இடிப்பது, படமெடுத்து ஆடச் செய்வது, வேடிக்கைக் காட்டுவது இவையெல்லாம் பாம்பாட்டி சித்தரின் விருப்பமான விளையாட்டு, இனிமையான பொழுது போக்கு.எவ்வளவு பெரிய பாம்பாக இருந்தாலும், எவ்வளவு கொடிய விஷ நாகமானாலும் அதனைப் பிடித்துஅதன் விஷத்தைக் கக்கவைத்து விடுவார். அதனால்தான் அந்த வைத்தியர் பாம்பாட்டிச் சித்தரிடம் அந்தக் கோரிக்கையை முன் வைத்தார். எவராலும் பிடிக்க முடியாத அந்த நவரத்தினப் பாம்பை எப்படியேனும் பிடித்தாக வேண்டும் என்ற வேட்கையில் வெறி பிடித்தாற் போல் காடுகளில் அலைந்து திரிந்தார். ஒரு புற்றிலும் அவர்கள் கூறிய நவரத்தின் பாம்பு இல்லாமல் போனதைக் கண்டு மிகவும் மனம் நொந்தார். இப்படி மென் மேலும் அலைந்து, திரிந்த சமயம், திடீரென்று காடே அதிர்வது போன்ற ஒரு சிரிப்பொலி கேட்டது. பாம்பாட்டி சித்தர் நாலாபுறமும் திரும்பிப் பார்த்தபோது, ஓரிடத்தில் அவருடைய விழிகள் குத்திட்டு நின்றன. அங்கே ஒளி வீசும் திருமேனியுடன்* சட்டைமுனி* எனும் புகழ் பெற்ற சித்தர் நின்று கொண்டிருந்தார்.

சிங்கள நாட்டு தேவதாசின் வயிற்றில் பிறந்தவர்தான் சட்டை முனிவர் எனும் இந்த சித்தர். இவர் பிறந்த பின் இரவது தாயாரோடும், தந்தையாரோடும் தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறினார். 

சட்டைமுனி, கோவில் வாசலில் தட்டை ஏந்திக்கொண்டு யாசகம் பெற்றுத் தம் தாய் தந்தையருக்கு உதவி வந்தார். 

இளையரான சட்டைமுனி ஒருநால் கோவிலில் யாசகத்திற்கு நின்று கொண்டு இருந்தபோது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட தவசி ஒருவரைக் கண்டார். அவரைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே அவரால் கவரப்பட்டு அவருடனேயே புறப்பட்டு போய் விட்டார். அந்தத் தவசியுடனே காடு-மலை என சுற்றியலைந்தார். அப்படி அலைந்து திரியும் போதுதான் போக முனிவரை சந்திக்கும் பேறு பெற்றார். அன்று முதல் அவர் போக சீடரானார்.

அப்போது கொங்கணவர், கருவூரார் ஆகிய சித்தர்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்த அபூர்வ சித்தர்களிடமிருந்த அனைத்து சித்தர் நெறிகளையும் சட்டை முனி கற்றுத் தெளிந்தார். தாம் கற்றவற்றை எல்லாம் உலகத்தார்க்குத் தெரியப்படுத்த அற்புத நூல்களாக எழுதினார். பொதுவாக சித்தர்களின் சித்த நெறியும் அற்புத இரகசியங்களும் வெளிப்படையாக எழுதப்பட்டால் கொடியவர்களின் தீய ஆயுதமாகிவிடும் என்பதால்தான் அவற்றையெல்லாம் பசிபாஷையாக எழுதப்படும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால், சட்டை முனி அதற்கு எதிர்மாறாக, விளக்கமாக வெளிப் படையாகவே சித்த இரசியங்களை எழுதியதால், திருமூலர் அந்நூலை கிழித்தெறிந்தார். உரோம ரிஷியும் கடுங் கோபம் கொண்டு சட்டை முனியை விமர்சனம் செய்தார். 

சட்டை முனிக்கும் உரோம ரிஷிக்கும் இடையே பகைமை ஏற்பட்டது. இதனால் சட்டை முனி தனது அரிய நூட்களை அகிழித்துதெறிந்து விடுவார் என அஞ்சி அந்நூட்களை காகபுஜண்டரிம் கொடுத்தார். 

அவர் அந்நூட்களை தமது காக்கைச் சிறகுகளினடியில் மறைத்துக் கொண்டார். 
பின்னர் அவற்றை பத்திரமாக அகத்தியரிடம் கொடுத்துவிட்டார்.
அதன்பின் சட்டைமுனி இரசவாதம் முதலான வேதியியல் மர்மங்களை அறிய சதுரகிரி மலை சென்று அளவற்ற ஆற்றலைத் தரும் இரசமணியை தாயரித்து அளப்பரிய செயல்களை நிகழ்த்தினார். 

திருவரங்கநாதன் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார் சட்டை முனி கால் நடையாகவே அரங்கனை காண கால்நடையாகவே சென்றார். ஆனால், அவர் வந்து சேர்வதற்குள் நள்ளிரவு பூஜையும் முடிந்து நடையையும் சாத்திவிட்டார்கள். 
திருவரங்கனை எப்படியும் தரிசித்து விடவேண்டும் என்று பைத்தியம் பிடித்தார் போல் பூட்டிய கோவிலுக்கு வெளியே நின்றுகொண்டு “அரங்கா அரங்கா” என்று மூன்று முறை கூவினார். 

தாபம் பொங்க அவர் கூவியதும் கோயில் மணிகள் முழங்க மேளதாளங்கள் ஒலித்தன.முரசுகள் அதிர்ந்தன. கோவில் கதவுகள் தாமாகத் திறந்தன.ஊர் மக்கள் ஒன்றும் விளங்காதவர்களாய் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது சட்டை முனி அரங்கன் அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டனர். 

சட்டை முனி இருந்த கோலம் திருவரங்கன் அணிந்திருந்த சங்கு சக்கரம் ஆபரணங்கள் அவர் மேலிருந்தது. சட்டை முனி நிச்சியம் கள்வனாகத்தான் இருக்க வேண்டும் எண்ணி கோவில் பட்டர்கள் அவரை அரசன் முன்னிறுத்தினர். அரசனும் சட்டை முனி கள்வனெ குற்றம் சுமத்திய போது அவர் “அரங்கனே அனைத்தும் அறிவார்” என கூறினார். கோவில் வாசலுக்கு வந்ததும் “அரங்கா” என்று மூன்று முறை கூவி அழைத்தார். அப்போது சட்டை முனியின் அருகில் திருவரங்கன் காட்சி தந்தார். அந்த தெய்வீக காட்சியைக் கண்டு மெய் மறந்த நின்ற வேளையில் சட்டை முனி இறைவனோடு இரண்டறக் கலந்தார். அந்த சட்டை முனிதான் இப்போது காட்டில் ஒளி வீசும் திருமேனியுடன் பாம்பாட்டிச் சித்தருக்கு காட்சியளித்தார். ஆனால், பாம்பாட்டிச் சித்தருக்கு அவர் யாரென்று அறியவில்லை. ஆகையால் சட்டை முனியைப் பார்த்து, “யார் நீங்கள் ’’ என்று பாம்பாட்டிச் சித்தர் கேட்டார். “ நீ எதற்காக அலைந்து கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உலகத்திலுள்ள அத்தனை பாம்புகளையும் பிடித்து ஆட்டக்கூடிய திறமைசாலி என்றும் அறிவேன்.ஆனால், உன் உடம்புக் குள்ளேயே ஒரு பாம்பு ஒளிந்திருக்கிறதே அது தெரியுமா உனக்கு. எல்லோரும் அறியாதது போலவே நீயும் அதனை அறியப்படவில்லை.அதை ஆட்டுபவந்தான் அறிவாளி.அதனை அடக்கி ஆள்பவர் தாம் சித்தர்கள்.அடக்கத் தெரியாதவர்கள் பைத்திக்கார மனிதன். எனவேதான் சொல்கிறேன்.கண்ணுக்குத் தெரிய வெளியில் திரியும் அந்தப் பாம்புகளை விட்டு விடு. உன் உள்ளே இருக்கும் அந்தப் பாம்பை தேட, அடக்க வழி தேடு..” “ சாமி, இந்தக் காடெல்லாம் பாம்பு தேடி அலைந்து கொண்டிருந்தேன். எனக்குள் ஒரு பாம்பு இருப்பதை இது நாள் வரை அறியவில்லை. இதைப்பற்றி இது வரை யாரும் என்னிடம் கூறியதுமில்லை. தயவு செய்து தாங்கள் எனக்கு அதனைத் தெரிவிக்க வேண்டும்..” என்று பணிந்து நின்றார் பாம்பாட்டி சித்தர்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing