Friday 10 April 2015

யாருக்கு எப்போது என்ன தர வேண்டும் என்பது கடவுளுக்குத் தெரியும்

அவனுக்குத்தான் தெரியும் ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்!

லட்சுமியும், சரஸ்வதியும் ஓரிடத்தில் இருப்பதில்லை என்பார்கள். திருவாரூரில் நடந்த சம்பவத்தைக் கேட்டால் இந்த உண்மை புரியும். 

திருவாரூர் தியாகராஜரின் முன் நடனமாடும் கமலம் என்பவள், தீட்சிதர் ஒருவரிடம் பாட்டு கற்று வந்தாள்.

தீட்சிதரின் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடியது. செய்வதறியாத தீட்சிதரின் மனைவி, கமலத்திடம் வருந்தியதோடு, "உன்னால் உதவ முடியுமா?'' என்று கேட்டாள். கமலம் தன் தங்க வளையலை அடகு வைத்து கொடுப்பதாக ஆறுதல் சொன்னாள்.

இருவரும் பேசிக் கொண்டது தீட்சிதர் காதில் விழுந்தது. 

அதிர்ச்சியுடன், ""அம்மா! நீ வளையலை விற்றுத் தந்தாலும் பிரச்னை தீராது. மேலும், ஒரு மாணவியின் வளையலைப் பறித்தவன் என்ற கெட்ட பெயரும் எனக்கு உண்டாகும்! 
நம் அனைவரையும் காப்பவர் நம்மூரில் குடியிருக்கும் தியாகராஜர் தான்! அந்தப் 
பெருமானிடம் முறையிடுகிறேன். அவர் என்னை கைவிட மாட்டார்,'' என்று சொல்லி கோயிலுக்குப் புறப்பட்டார்.

மனம் உருகி தியாகராஜரைப் பாடி விட்டுத் திரும்பினார். 

வீட்டு வாசலில் ஆச்சரியம் காத்திருந்தது. ஆட்கள் மளிகைச் சாமான்களை வண்டியில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தனர். 

அவர்களிடம் விசாரித்த போது, " ஐயா! தஞ்சாவூரில் இருந்து அரசு அதிகாரி ஒருவர் திருவாரூர் வர இருந்தார். அவருக்கு விருந்து அளிக்க அதிகாரிகள் மளிகைப் பொருட்கள் வாங்கினர். ஆனால், அவரது வருகை ரத்தாகி விட்டது. உத்தமரான உங்களுக்கு அதைக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் கொடுத்தனுப்பினர்,'' என்றனர்.

""தியாகராஜப் பெருமானே! எல்லாம் உன் மகிமை!'' என்று மனம் உருகினார் தீட்சிதர்.

அவரே சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர். 
யாருக்கு எப்போது என்ன தர வேண்டும் என்பது கடவுளுக்குத் தெரியும்!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing