Tuesday 21 July 2015

அரைஞாண் கயிறு

என் வயதையொத்தவர்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் அரைஞாண் கயிறுதான் எங்களின் இடைவார் (BELT) ஆகப் பயன்பட்டது. எங்கள் பகுதிகளில் இந்தக் கயிறை அருணாக்கயிறு என்றும் பட்டுக்கயிறு என்றும் சொல்வதுண்டு. அரைக்கால் சட்டைக்கு (HALF TROUSER) மேலே இந்தக் கயிறைத்தான் பாதுகாப்புக்காக அணிவதுண்டு. அரைஞாண் கயிறு இறுக்கமாக இல்லாமல் கொஞ்சம் தளர்வாக இருந்தால் அரைக்கால் சட்டை தரையில் விழுந்து விடும் அபாயமும் உண்டு.


அரைஞாண் கயிறு, கருப்பு, சிவப்பு என்று இரண்டு நிறங்களில் உண்டு. வயல்வெளிகளில் விவசாயிகள் உழும் போதும், நாற்றுப் பறிக்கும் போதும் அரைஞான் கயிற்றில் சிறிய துண்டைக் கோமணமாக அணிந்து கொண்டு வேலை பார்ப்பதுண்டு. சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் ஏரிகளில் குளிக்கும் போது அரைஞாண் கயிற்றில்தான் சிறிய துண்டை கோமணமாகக் கட்டிக் கொண்டு குளிப்பது வழக்கம். குறும்பான சிறுவர்கள் ஏரிக்குள் நீச்சலடிக்கும் மற்ற சிறுவர்களின் கோமணங்களை உருவி விட்டு கெஞ்ச வைப்பதும் நடக்கும்.

அரைஞாண் கயிறு அணியாத சிறுவர்களை, மற்ற சிறுவர்கள் "டேய் இங்கே பாருடா பொம்பளைப் பிள்ளை" என்று கேலி பேசுவார்கள். ஏனென்றால் அரைஞாண் கயிறு ஆண் குழந்தைகள் மட்டுமே அணிவது வழக்கம். காரணம், ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண் கயிறு ஒரு நோய்த் தடுப்பு முறை ஆகும். ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறுஅணிவதாக எண்ணப்படுகிறது. பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறு அணிவதில்லை.

அரைஞாண் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்கள், குழந்தைகள் இடுப்பில் அணியும் ஒரு கயிறு ஆகும். ஓரிரு ரூபாய் மதிப்புள்ள எளிய கயிறு முதல் விலை மதிப்புடைய வெள்ளி, மற்றும் பொன் கயிறுகள் வரை அவரவர் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப இக் கயிற்றை அணிவர். பெரும்பாலான தமிழ் இந்துக்கள், கிறிஸ்த்தவ ஆண்கள், குழந்தைகள் இதை அணிந்திருப்பதைக் காணலாம். சிற்றூர்களில் உள்ள இசுலாமியர்களிடமும் இதை அணியும் பழக்கம் உண்டு.

அரைஞாணைப் பெரும்பாலும் ஆடைக்குள் மறைவாகத்தான் அணிந்திருப்பர். இப்படி அணிவதே கண்ணியமாகக் கருதப்படுகிறது.

இடையில் அணியப்படும் வேட்டி, கோவணம் போன்ற ஆடைகளை இறுக்கிக் கட்ட இது பயன்படுகிறது. என்றாலும், இடுப்புவார் போன்றவற்றை பயன்படுத்துவோரும் சமய நம்பிக்கை, சமூகப் பழக்க வழக்கங்கள் சார்ந்த காரணங்களுக்காக இதை அணிகிறார்கள். இந்து சமயத்தில் ஒருவர் இறக்கும் போதே அரைஞாணை அகற்றுகிறார்கள் என்பதால், ஒருவர் அரைஞாணை அணியாமல் இருப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவதில்லை. தவிர, அரைஞாண் உடலை இரண்டாகப் பகுத்துக் காட்டி, உடை போல் செயல்படுவதால் அரைஞாண் மட்டும் அணிந்தோர் அம்மணமாக இருப்பதாகவும் கருதப்படுவதில்லை. அரைஞாண் அணியாமல் உடையும் இல்லாமல் இருப்பவர்களை "முழு நிர்வாணமாக" இருப்பதாகக் குறிப்பிடுவதையும் காணலாம்.

உடை, சமயம் சார் தேவைகள் போக, நடைமுறைக் காரணங்களுக்காகவும் இதை அணிகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, கிராமப் புறங்களில் நீச்சல் பழக்கி விடுபவர் அரைஞாணில் சேலை, வேட்டியைக் கட்டிப் அதைப் பிடித்து நீச்சல் பழக்கி விடுவார்கள். நீச்சல் அறியாத குழந்தைகள் நீர் நிலைகளில் மூழ்க நேர்ந்தாலும், பற்றி இழுப்பதற்கு ஏதுவாக அரைஞாண் உதவுகிறது. சாவிக் கொத்து, முள்வாங்கி போன்றவற்றை கோர்த்து வைத்துக் கொள்ளவும் அரைஞாண் உதவுகிறது.

அரைஞாண் அணிவது இனம் சார்ந்த பண்பாட்டு வழக்கமாகப் பார்க்கப்பட்டாலும், இந்து, கிறித்தவ, இசுலாமிய நம்பிக்கைக்குட்பட்டு பெறப்பட்டும் தாயத்துக்களை கோத்து வைக்கவும் அரைஞாண் பயன்படுகிறது. இதனால் அரைஞாண் அணிவது மூடப்பழக்கம் என்று சிலரால் விமர்சிக்கப்படுவதும் உண்டு. எனினும், இத் தாயத்துக்களை மணிக்கட்டு, கழுத்து, முழங்கைக்கு மேல் தனிக்கயிற்றிலும் கட்டிக் கொள்ளலாம் என்பதால், அரைஞாண் அணியும் வழக்கம் மூடப்பழக்கம் என்றோ அதை ஊக்குவிக்கிறது என்றோ சொல்ல இயலாது.
மகாபாரதத்தில் அரைஞாண் கயிறு...!

மகாபாரதம் காவியத்தில் திருதராட்டிரன் பிறவிக் குருடர் என்பதால் கணவனின் மீது கொண்ட பக்தியின் காரணமாக காந்தாரி தனது கண்களைக் கட்டிக் கொண்டே வாழ்ந்தார். இவரது உயர்ந்த பதிபக்தியின் காரணமாக இவர் பல சக்திகள் பெற்று இருந்தார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில், துரியோதனன் உடல் வலிமையைக் காந்தாரி தன் பார்வை சக்தியால் அதிகப்படுத்த எண்ணி துரியோதனனை ஆடையின்றி வருமாறு கூற, அவ்வாறு துரியோதனன் வரும் வழியில் கிருஷ்ணன் குறுக்கிட்டு 'பெற்ற தாயே ஆனாலும் முழு ஆண்மகன் இப்படியா முழு நிர்வாணமாகச் செல்வது எனப் பரிகாசம் செய்து சூழ்ச்சியுடன் இடையில் சிறு கயிற்றைக் கட்டச் செய்தார், காந்தாரி தன் பார்வையைத் துரியோதனன் தலையிலிருந்து கீழாக இறங்கி வர இடையில் அரைஞாண் கயிற்றால் தடைபட்டது. இதுவே குருட்சேத்திரப் போரில் துரியோதனனை பீமன் கதாயுதத்தால் தலை,மார்பு ஏனைய உறுப்புகளில் தாக்கியும் வீழ்த்த இயலவில்லை, கிருஷ்ணரின் சமிக்ஞையால் பீமனால் துரியோதனன் தொடை பிளந்து கொல்லப்பட்டான் என்கிறது இந்த மகாக் காவியம்...!


இவ்வளவு பெருமை கொண்ட அரைஞாண் கயிறு, காலப்போக்கில் நாகரீகம் எனக் கருதி, அரைஞாண் கயிறு அணியும் வழக்கம் கிராமங்களில் கூட படிப்படியாக இல்லாமல் போய் விட்டது. இனி அடுத்த தலைமுறையினர் புகைப்படங்களில் மட்டுமே அரைஞாண் கயிற்றைக் காண இயலும். நம் முகநூல் நண்பர்களில் எவராவது இன்றளவிலும் அரைஞாண் கயிறு அணிபவர்கள் எவரும் இருந்தால் கையைத் தூக்குங்கள்...! 





உங்களுக்குப் பாராட்டு விழா நிச்சயம் உண்டு....!!! அட.... வெட்கப்படாமல் சும்மா சொல்லுங்கப்பு....!!!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing