மிதமிஞ்சிய கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஹாஸ்டலில் சேரும் போது சுதந்திரத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். தறிகெட்டுப் போகிறார்கள்.
அப்படி ஒரு பையன் கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு நாசமாகிக் கொண்டிருந்தான். விடுமுறைக்கு வந்த அவனுக்கு அப்பா அறிவுரை, அறிவுரை எல்லாம் வழங்கவில்லை. கண்டிக்கவோ, தண்டிக்கவோ இல்லை.
அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “கண்ணா!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”
பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் “நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”.
அப்பா சொன்னார், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”
பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.
“ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே!. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்றார்.
மகன் யோசிக்கத் தொடங்கினான்.பையன் அதற்குப் பிறகு எந்தக் கெட்ட விஷயங்கள் பக்கம் போகும் போதெல்லாம் அவனே உணரத் தொடங்கினான்.
அதன் பிறகு கெட்ட செய்கைக்கு அவன் போகவில்லை.
பிள்ளைகளை மனம் புரிகிற மாதிரி கண்டிக்க வைக்க வேண்டும்.
மனதை காயப் படுத்தி எதுவும் ஆகப் போவது இல்லை.
அன்பு மனமே மகிழ்விக்கும்.அதற்காக தப்பை கண்டு கொள்ளாமல் உற்சாகமூட்டப் படும் பிள்ளைகளும் நன்றாக வாழத் தெரியாமல் போய் விடும்.
அன்பான கட்டுப்பாடு அவசியம்.
No comments:
Post a Comment