வாழ்வின் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தினமும் அல்லல்பட்டு உழன்றுவரும் நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது சில நாட்களாவது தூய மனத்துடனும் மெய்யான பக்தியுடனும் நல்ல சிந்தையுடனும் மனதைக் கட்டுப்படுத்தி நோன்பிருந்து பூஜைகள், அன்னதானங்களை இயன்றவரை சக்திக்கேற்ப செய்ய நாமாக மேற்கொள்ள சபரிமலை யாத்திரை நோன்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது.
எருமேலி மார்க்கமாக சபரிமலை யாத்திரை செல்வதில் மற்றொரு விசேஷம்; உடல் நலம் காக்கும் மூலிகைகளின் மணம் தாங்கி வரும் காற்றைச் சுவாசிக்கும் பேறு கிடைத்தற்கரிய ஒன்றாகும். ஆயுர்வேத சாஸ்த்திரப்படி மனித தேகத்தில் வாத, பித்த கபதாதுக்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் இருந்தால் தேகத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும்.
அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் வியாதிகள் உடலைத் தீண்டுகின்றன. இம்மூன்றின் தொல்லைகளைக் குணப்படுத்தும் மூலிகைகளை; எருமேலியிலிருந்து சபரிமலை வரையிலும் அதற்கப்பாலும் மண்டிக் கிடக்கின்றன. வாதரோகத்தை அடக்குவதற்கு கருங்குறிஞ்சி மூலிகை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
எருமேலியிலுந்து கல்லிடும் குன்று வரையில் முக்கியமாக அழுதாநதிப் பிரதேசத்தில் இம்மூலிகைகள் நிறைந்து இருக்கின்றன. கபரோகத்தைத் தீர்க்கும் மூலிகைகள் கல்லிடும் குன்றிலிருந்து கரிமலை ஆறாவது தட்டுவரை வளர்ந்து இருக்கின்றன. அங்கிருந்து புல்மேடுவரை உள்ள சபரிமலைப் பிரதேசத்தில் பித்தரோக சமனியான மூலிகைகள் மண்டிக் கிடக்கின்றன.
இம்மூன்று பிரதேசங்களிலும் தங்கிச் செல்பவர்கள் மேற்படி மூலிகைகளில் மணம் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதாலும், மூலிகைவளம் செறிந்த நீரை அருந்துவதாலும், மூலிகைகளை எரித்த சாம்பலைத் தரிப்பதாலும் ரோகங்கள் நீங்கி நல்ல ஆரோக்கியம் அடைகிறார்கள். சமவெளிப் பிரதேசமாகிய வயல் சூழ்ந்த நாட்டில் வாழும் நமக்கு படிகள் இல்லாத மலை ஏறும் வாய்ப்பு அதிகமாக கிடைப்பதில்லை.
ஆண்டுக்கொரு முறையாவது சபரிமலைக்கு எருமேலியிலிருந்து நடந்து பெருவழிப்பாதையாக சபரிமலை சென்றுவரும் பக்தர்களுக்கு மலையேறும் நல்வாய்ப்புக் கிடைப்பதனால் அவர்களின் இதயம் பலம் பெறுகிறது. இரத்தம் சுத்தமடைகிறது. நரம்புகளும், தசை நார்களும் உறுதி பெறுகின்றன. கெட்ட உணர்வுகள் பட்டுப்போகின்றன.
சபரிமலை யாத்திரையின்போது சாதி, சமய வேறுபாடுகள் சரணம் போட்டுப் பறக்கின்றன. ஏழை, பணக்காரர் என்ற பேதம் இல்லை. உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், பாமரர் என்ற வித்தியாசம் இல்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிரை என்ற உணர்வோடும், அன்போடும், பண்போடும் மேற்கொள்கின்ற யாத்திரையே இந்த சபரிமலைப் புனித யாத்திரை.
ஐயப்பனும் வாபர் சுவாமியும் இரண்டறக் கலந்து நின்று அருள் புரிவதைப் போலவே இஸ்லாம் மதத்தாரும் மாலை அணிந்து இருமுடிதாங்கி ஐயப்பசுவாமி கோயிலுக்குப் பெரும் திரளாக வந்திருந்து வழிபட்டு அருள் பெறுகிறார்கள்.
இதனால் இந்து, இஸ்லாம் இன ஒற்றுமை ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி வளர்கின்றது. எனவே இந்த யாத்திரையின் மூலம் ஒருமைப்பாட்டு உணர்வு வளர்கின்றது. சாதி, சமய வேறுபாடுகள் வேரறுக்கப்படுகின்றன. சமத்துவம் என்பது நடைமுறையில் நடத்திக் காட்டப்படுகிறது.
No comments:
Post a Comment