பெரியவர்களை விட குழந்தைகளைத் திருஷ்டி தோஷங்கள் நிறையவே பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலான குழந்தைகள் சுறுசுறுப்பாக ஆரவாரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மேல் இயற்கையாகவே பெரியவர்களுக்கும் உடல்நலம் குன்றியவர்களுக்கும் பொறாமை எண்ணங்கள் உருவாகி அவை திருஷ்டி தோஷங்களாக வளர்ந்து குழந்தைகளைத் தாக்குகின்றன.
இதனால்தான் முன் பின் தெரியாதவர்களிடம் குழந்தைகளைத் தரக் கூடாது என்று நம் முன்னோர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தனர். தற்காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்தால் அத்தகையோர் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டு விடும் முறை வெகுவாக வளர்ந்து வருகிறது. பெற்றோர்களைத் தவிர மற்றவர்கள் குழந்தைகளுக்கு ஊட்டும் உணவு நிச்சயமாக அவர்கள் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
இத்தகைய குழந்தைகளே எதிர்காலத்தில் பெற்றோர்கள் மேல் பாசம் என்பது என்னவென்று தெரியாமல் தான் தோன்றித்தனமாக வளர்ந்து தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி விடும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. பெற்றோர்கள் இதை நன்றாக ஆத்ம விசாரம் செய்து உரியமுறையில் செயல்பட வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
குழந்தைகள் வீட்டில் இருக்கும்போதும் வெளி இடங்களுக்கு அவர்களைக் கூட்டிச் செல்லும்போதும் கட்டாயம் குழந்தைகள் கன்னத்தில் ஒரு திருஷ்டி பொட்டு வைத்திருக்க வேண்டும். ஒரு நிமிடம் கூட குழந்தைகள் திருஷ்டி பொட்டு இல்லாமல் இருக்கக் கூடாது. இது பெற்றோர்களின் தலையாய கடமை.
கலியுக நியதியாக குழந்தைகள் மூன்று அல்லது ஐந்து வயது வரை தெய்வீகத் தன்மையுடன் விளங்குவதால் அவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளும் தங்கள் பெற்றோர்களுக்கு வரக் கூடிய துன்பங்களும், ஆபத்துகளும் முன் கூட்டியே தெரிய வரும். எனவே, முடிந்தவரை அக்குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு வரக் கூடிய துன்பங்களைத் தாங்களே எடுத்து அனுபவிப்பதால் பெரும்பாலான குழந்தைகள் அடிக்கடி நோய் வாய்ப்படுகின்றன. இதை அறிந்தால்தான் குழந்தைகளை தேவையில்லாமல் சபிப்பதோ, அவர்களை அடிப்பதோ, கடுஞ் சொற்களால் நிந்திப்பதோ எவ்வளவு தவறான செயல் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு இடுவதற்கு உகந்த திருஷ்டிக் கண் மையை பெற்றோர்கள் தாங்களாகவே வீட்டில் தயாரித்துக் கொள்தல் நலம். இந்த திருஷ்டிக் கண் மையை குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் பெரியவர்களின் திருஷ்டி நிவாரணத்திற்காகவும், கண் பாதுகாப்பிற்காகவும், பயன்படுத்தி பலன் பெறலாம்.
No comments:
Post a Comment