Friday 17 June 2016

தேவை அதிகரிப்பை சமாளிக்க மத்திய #BJPஅரசு... 5 ஆண்டில் 10,000 மின் உற்பத்தி நிலையங்கள்

இந்தியாவில் மின் தேவை கணிசமாக அதிகரித்து வருவதால், ஒருபுறம், 'மெகா' திட்டங்கள் மூலம் மின்சார உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம், சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கழிவு பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும், 10 ஆயிரம் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில், தொழில் வளர்ச்சி, புதிய கட்டமைப்புத் திட்டங்கள் போன்ற காரணங் களால், ஆணடுதோறும் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் மின் தேவையை, பெருமளவு, மரபுசார் மின் திட்டங்கள் நிறைவேற்றி வருகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மின் தேவை உயர்வை கணக்கில் கொண்டு, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கால தாமதம்: இவற்றிக்கு பெருமளவு முதலீடு தேவைப்படுவதும், நிலக்கரி, நீர் உள்ளிட்ட வளங்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு கிடைப்பதில் இடையூறு போன்றவற்றால், இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுகிறது.


மேலும், அனல் மின்நிலையங்கள் போன்றவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பிரச்னைகள் சர்வதேச அளவில் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. இதையடுத்து, மரபுசாராத வகையில், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்களை சிறிய அளவில் செயல்படுத்த மத்திய அரசுதிட்டமிடுகிறது.



தேசிய கொள்கை: குறிப்பாக, காற்றாலை, சூரிய ஒளி, கழிவு பொருட்களை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரிய திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், கிராமப்புறங்களில் உள்ளூர் தேவைக்கு ஏற்ப, அதிக அளவிலான சிறிய திட்டங்களையும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



இவை, சிறு மற்றும் குறு திட்டங்களாகவே இருக்கும். இதற்காக, புதுப்பிக்கத்தக்க முறையில் மின்சாரம் உற்பத்தி செய்வது தொடர்பாக, தேசிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப் புறங்களில், மிக குறைந்த மின் உற்பத்தி திறனுடன், சூரிய ஒளி, காற்றாலை, கழிவு பொருட்களை பயன்படுத்தி இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். 



அடுத்த, ஐந்தாண்டுகளில், 10 ஆயிரம் சிறு மற்றும் குறு மின் உற்பத்தி நிறுவனங்கள் ஏற்படுத்தப் படும். வர்த்தக பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, வீடுகளுக்கும், சிறு சிறு தொழில் நிறுவனங்களுக் கும் தேவையான மின் உற்பத்தி செய்யும் வகையில், இவை இருக்கும். கிராமப்புறங்களில் இந்த திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. 



குறைந்த முதலீடு

* சிறு மற்றும் குறு மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும்.
* ஐந்து ஆண்டுகளில், 10 ஆயிரம் மின் உற்பத்தி திட்டங்கள் ஏற்படுத்தப்படும்.
* உள்ளூர் பொருளாதார தேவைக்கு ஏற்ப மின்சாரம் தயாரிக்க திட்டம்.
* சிறு திட்டம் என்பதால், முதலீடு குறைவான அளவு போதும்.
* செலவு மற்றும் இழப்பும் குறையும்* தேவையை பொறுத்து, மின் உற்பத்தி செய்ய முடியும். 
* அரசின் முயற்சி மற்றும் தனியார் பங்களிப் புடன் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். 



மெகா திட்டங்கள்:


வரும், 2022ம் ஆண்டிற்குள், 175 ஜிகா வாட்அளவிற்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க, மத்திய அரசு ஏற்கனவே இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, மெகா திட்டங்கள் ஏற்கனவே செயலாக்கத்தில் உள்ளன. இதில், சூரிய ஒளியின் மூலம், 100 ஜிகா வாட் மின்சார உற்பத்திக்கும், இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. இதற்காக, 'சோலார் பார்க்' திட்டங்கள் பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


கிராமப்புறங்களே இலக்கு:சர்வதேச எரிசக்தி முகமையின், 2015ம் ஆண்டு, புள்ளி விவரப்படி, இந்தியாவில், 23.7 கோடி மக்கள், மின்சாரம் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு, 1,000 நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்படும் என, பிரதமர் மோடி, 2015ம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது உறுதியளித்தார். 


இதையடுத்து, 'தீனதயாள் உபாத்யாய் கிராம ஜோதி' திட்டத்தின் கீழ், மத்திய மின்துறை அமைச்சகம், அதிவேகமாக, மின் வழித்தடங்களை உருவாக்கி, மின் இணைப்பு வழங்கி வருகிறது. கிராமப்புறங்களை சார்ந்து, மின்சார உற்பத்தியும் அவசியமாகிறது. 




எனவே, மத்திய அரசின் புதிய மின் உற்பத்தி திட்டம், இதற்கு பெரிய அளவில் கைகொடுக்கும்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing