கபாலத்தை கையில் ஏந்தியவர் கபாலி.
யாருடைய கபாலத்தை ?.
பிரம்மாவின் கபாலத்தை.
ஏன் ஏந்தினார் ?.
சிவனைப் போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார்.
பிரம்மா ஒவ்வொரு யுகம் அழியும் போது அழிந்து விடுவார். மீண்டும் புது யுகம் உண்டாகும் போது, புதிதாக ஒரு பிரம்மா படைக்கப் படுவார். ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார்.
சிவபெருமானோ ஆதியும், அந்தமும், பிறப்பும் இறப்பும் இல்லாது யாவருக்குமாகிய தலைவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்த சிவபெருமான், அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக் கொண்டார்.
எனவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார்.
தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது. திருமயிலை அல்லது மயிலாப்பூர் என்பதும் இத்தலத்திற்கு வேறு பெயர்கள்.
பிரமனின் தலையைக் கொய்த செயல் சிவபெருமானிம் எட்டு வீரச் செயல்களில் ஒன்று.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் திருக்கண்டியூர் இந்த அட்ட வீரட்ட தலமாக உள்ளது. சுவாமியின் திருநாமம் பிரமசிரக்கண்டீஸ்வரர்.
பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு.
சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று.
அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.
இக்கோவில்களுக்கு சென்று பிறப்பில்லாத பிஞ்ஞகனைத் தொழுது அருள் பெறுவோம். நமசிவாய.
No comments:
Post a Comment