விதியை மதியால் வெல்ல முடியுமா?’ என்ற கேள்வி பல காலமாகக் கேட்கப்பட்டு வருகிறது.
‘விதிப்படிதான் வாழ்க்கை’ என்று ஒரு சாராரும், ‘மதிப்படிதான் வாழ்க்கை; விதியும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. சோம்பேறிகளின் சௌகரியமான தப்பித்தல், விதி’ என்று ஒருசாராரும் சொல்கிறார்கள்.
மூன்றாவதாக, இன்னொரு கோஷ்டி உண்டு. ‘முயற்சியும் இருக்கணும்; அது பலனளிக்க நல்ல விதியும் இருக்கணும்’னு சொல்வாங்க. ‘விதிச்சது நடக்கும்; விதிக்காதது நடக்காது’என்று தீர்மானமாக சொல்கிறார் ரமண மகரிஷி.
‘
விதியை மதியால் வெல்ல முடியாது. ஜென்மத்தில் குரு; ராமர் வனவாசம். பத்தில் குரு வந்ததால், பரமசிவனும் பிச்சையெடுத்தார். அவதாரப் புருஷர்களே அப்படியென்றால், நாம் எம்மாத்திரம்?’ என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
‘உங்களிடமிருந்து எடுக்கப்பட வேண்டியவையும், உங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியவையும் என்றோ நிச்சயிக்கப்பட்டுவிட்டன’ என்கிறது, கிறிஸ்துவத்தின் புனித நூலான பைபிள்.
‘
இந்த உலகில், இறைவன் கொடுத்ததை எவராலும் பறிக்க முடியாது; இறைவன் மறுத்ததை எவராலும் கொடுக்க முடியாது’ என்கிறது, இஸ்லாம் மிகத் தெளிவாக.
சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் ஜோதிடம் பொய் எனக் கூறி, அண்ணன் செங்குட்டுவனை அரியணையில் அமர்த்துகிறார். அப்படிப்பட்டவரே, சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் கூற்றாகச் சொல்லும்போது…
‘
ஏசா சிறப்பினிசை விளங்கு பெருங்குடி
மாசாத்து வணிகன் மகனையாகி
ஊழ்வினை துறத்த சூழ்கலன் மன்னா…
நின்னகர் புகுந்து இங்கு என் காற்சிலம்பு ஆற்றி நிற்ப…’
என்று ஊழ்வினை பற்றிக் குறிப்பிடுகிறார்.
நம் தெய்வப்புலவர் திருவள்ளுவரும்,
‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்’ என்கிறார்.
அதாவது, ‘விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ, வேறு ஒரு வழியிலேயோ அது மீண்டும் நம்முன் வந்து நிற்கும். விதியை விட, வேறு எவை வலிமையானவை?’ என்கிறார் வள்ளுவர்.
‘‘வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது’’ என்றும் கூறுகிறார்.
அதாவது, கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம் என்பது பொருள்.
விதியும் மதியும் உடலும் உயிருமாகச் செயல்படுகின்றன. விதி வழியே மதி செல்கிறது.
எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னாய் நீங்கியொரு
வார்த்தை யேனும் மாற்றிடுமோ,
அழுத கண்ணீர் ஆறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ ・என்பது உமர்கய்யாம் பாடல்.
சரி… விதிப்படிதான் வாழ்க்கை என்றால் முயற்சி எதற்கு? மதிப்படிதான் வாழ்க்கை என்றால் கடவுள் எதற்கு?
இந்தக் கேள்விகள் பலருக்கும் வரலாம்
நியாயமான கேள்விகள்தான் இவை.
இதற்கெல்லாம் பகவான் கிருஷ்ணர் , மகாபாரதத்தில் விடை சொல்கிறார்.
பாரதப்போர் முடிந்த பிறகு, கிருஷ்ணரைச் சந்திக்கும் அவரின் பால்ய நண்பரான உத்தவன், தனக்கு எழுந்த சந்தேகங்களைக் கேட்கிறார். அது, eஉத்தவ கீதை’ எனத் தனியாகவே தொகுக்கப்பட்டுள்ளது.
அதில்…
உத்தவன்: “சூதாட்டத்தின்போது தர்மருக்கு நீங்கள் ஏன் உதவவில்லை?”
கிருஷ்ணன்: “தனக்குப் பதிலாக தன் மாமா சகுனி விளையாடுவார் என்று கூறினானே துரியோதன்… அந்த விவேகம் ஏன் தர்மரிடம் இல்லை?”
உத்தவன்: “ ஆனாலும், தர்மர் உன் பக்தன் அல்லவா? அவருக்கு உதவ வேண்டியது உங்கள் கடமை அல்லவா?”
கிருஷ்ணன்: “பக்தனா விவேகியா என்றால், பக்தனைவிட விவேகிக்குதான் முன்னுரிமை கொடுப்பேன்!”
ஆகவே, உங்களின் அனுபவ அறிவாலும், கல்வி கேள்விகளில் சிறந்தவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட பாடங்களாலும் கிடைத்த ஞானத்தைக் கொண்டு, உங்கள் மதி சொல்கிறபடி வாழ்க்கையை நடத்துவதே சிறந்தது.
பக்தி மார்க்கம் என்பது துயரங்களில் துவண்டுவிடாமலும், ஏமாற்றங்களால் சோர்ந்துவிடாமலும், eஏற்றதொரு கருத்தை என் மனம் ஏற்றால், எவர் வரினும் அஞ்சேன் நில்லேன்f என கவியரசு கண்ணதாசன் சொன்னதுபோல் எதையும் ஏற்று, எதிர்கொள்ளும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தருவது.
மதியால் விதியை வெல்ல முடியுமோ, முடியாதோ… ஆனால், எப்பேர்ப்பட்ட விதியையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சாதுர்யம் மதிக்கு உண்டு.
ஒரு கதை சொல்வார்கள். மிகப் பெரும் தனவந்தனாக இருந்த ஒருவன் அடுத்த சில நாட்களில் அனைத்துச் சொத்துக்களையும் இழந்து, மரம் வெட்டிப் பிழைப்பான் என்று அவனது விதி சொல்லியதாம்.
முதலில் தளர்ந்துபோனாலும், சாதுர்யமாக அவன் ஒரு முடிவெடுத்தான். அதன்படி, அவன் வழக்கம்போல் தனவந்தனாகவே தொடர்ந்தது மட்டுமல்லாமல், முன்பைவிடவும் அதிக செல்வந்தனானான்.
அப்படி என்ன அவன் செய்தான்? மரம் வெட்டிப் பிழைக்க வேண்டும் என்பதுதானே அவன் விதி? அதனால், காட்டுக்குச் செல்வான். அங்கே கண்ட கண்ட மரங்களையும் வெட்டாமல், சந்தன மரம் இருந்தால் மட்டுமே வெட்டுவான்.
இல்லையென்றால், அன்றைய தினம் பொழுது சாய்வதற்குள் அவன் கண்களில் எப்படியாவது ஒரு சந்தன மரம் தட்டுப்பட்டுவிடும். ஆமாம், மரம் வெட்டிப் ‘பிழைக்க’ வேண்டும் என்பது அவன் விதியாயிற்றே!
அதுவும் ரொம்பவும் சிரமப்பட்டெல்லாம் உடல் வருத்தி வெட்டமாட்டான்.
இரண்டு அல்லது மூன்று வெட்டுக்கள் போட்டதுமே, மரம் சாய்ந்துவிடும். எடுத்துப் போய் ஊரில் நல்ல விலைக்கு விற்க அவனுக்கு ஆள் பலம் அம்பு எல்லாம் உண்டு!
அப்புறம், அவன் வளத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன?
ஆகையால், விதி எழுதிச் செல்கிறபடி செல்லட்டும். அதை எதிர்கொள்கிற பக்குவத்தையும், அதிலிருந்து மீள்கிற புத்தி சாதுர்யத்தையும், மதிநுட்பத்தையும் கடவுள் பக்தி நமக்குத் தரட்டும்.
Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Sunday, 28 August 2016
வாழ்க்கை…விதிப்படியா ?மதிப்படியா ?-ஒரே குழப்பமாய் இருக்கா ?
Subscribe to:
Post Comments (Atom)
Excuse
Note: Dear Friends….Excuse any mistake in my writing
No comments:
Post a Comment