ஒரு பசுவின் சாபம்...!!!
புணர்வதற்குக் காளை தேவை.!
உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல். பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்துகொள்வது எனக்குத் தெரியும்.
நான் கன்று ஈன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் எனக்கு உடலுறவுகொள்ள வேண்டிய தேவை உருவாகிவிடும். இப்போதே எனது முலைகளில் பால் சுரப்பு குறைகிறது, முலை மடி இறுகத் துவங்கிவிட்டது, பிறப்புறுப்பு அவ்வப்போது துடிக்கத் துவங்கிவிட்டது. இந்த அறிகுறிகளை எல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டிய நிலையில் நானும் என்போன்ற மாடுகளும் இருக்கிறோம்.
பால் சுரப்பு நிற்கும் காலத்தில் எங்கள் அடிவயிறு பிசையும் உணர்ச்சி அதிகரிக்கும். அவ்வாறான உணர்ச்சி நிலைகளில் எங்களை அறியாமல் அடி வயிற்றிலிருந்து கத்தத் துவங்குவோம். பசியில் கத்துவதற்கும் காமத்தில் கத்துவதற்கும் எங்கள் குரலில் வேறுபாடுகள் இருக்கும். காமம் மிகும்போது எங்கள் கண்கள் வெறித்து, வால் மயிர்கள் சிலிர்த்து, பிறப்புறுப்பு புடைத்து இருப்பதை உங்களில் எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்களோ தெரியவில்லை.
சில காலம் முன்புவரை இவ்வாறான அறிகுறிகளைப் பார்த்ததும் எங்களை வளர்ப்பவர்கள் எங்களை ஏதேனும் ஒரு காளையிடன் ஓட்டிச் செல்வார்கள். காமம் தீரத் தீர எங்களுக்கு புணர்ச்சி கிடைக்கும்.
காடுகளில் மேயும்போது கிடைக்கும் புணர்ச்சிகள் இன்னும் சிறப்பானவை. பசுக்களாகிய எங்கள் குரலில் எழும் காமம் மனிதர்களிடன் உதவி கேட்பதற்கானது அல்ல, காளைகளை சுண்டி இழுப்பதற்காக என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இப்போதெல்லாம் எங்களுக்குக் காமம் மிகுந்தால் காளைகளிடம் ஓட்டிச் செல்வதில்லை; மருத்துவர்களிடம் கூட்டிச் செல்கிறார்கள். மருத்துவர்கள் மெத்தப் படித்தவர்கள், அறிவாளிகள், நாகரிகம் தெரிந்தவர்கள், விலங்கியல் பயின்றவர்கள், மேதைகள். காமம் எனும் உணர்வு, கன்று போடுவதற்காக மட்டுமே தோன்றுகிறது என்ற அதி புத்திசாலித்தனமான புரிதல் மருத்துவர்களுக்கு உள்ளது.
மருத்துவர்கள் எங்கள் காமத்தில் இரசாயனக் கழிவுகளைக் கொட்டி அழித்துவிட்டு, விந்தணுக்களை பிறப்புறுப்பில் பீச்சிவிடுகிறார்கள். காளை செய்ய வேண்டிய வேலையை மருத்துவர்கள் செய்கிறார்கள். ஆனாலும் காளையைப் போன்ற வேலையை அவர்கள் செய்வதில்லை, செய்யவும் முடியாது.
அந்தக் காளைகளுக்கு பசுக்களின் யோனி மறுக்கப்படுகிறது. பசுக்களாகிய எங்களுக்கு காளைகளின் ஆண்குறிகள் மறுக்கப்படுகின்றன. இவ்வாறு ஆண்குறி, பெண்குறிகளுக்கிடையில் கூட அறிவியலைப் புகுத்தும் நாகரிக மனிதர்களின் காலத்தில் பிறந்ததை எண்ணி நானும் என் சக மாடுகளும் அவமானமும் துக்கமும் கொள்கிறோம்.
எங்கள் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டு, நீங்கள் மட்டும் நன்றாக வாழ்ந்துவிடலாம் என நம்புகிறீர்கள்.
ஆண்குறி நுழையாத எங்கள் யோனிகளின் சாபம், முலைக்காம்புகளில் வழியும் பாலின் வளத்தைச் சீரழித்துக்கொண்டுள்ளது. காளையைப் புணர்ந்து பெற்ற கன்றுக்காகச் சுரக்கும் பால் வேறு, மருத்துவர் செலுத்தும் விந்துவில் பிறக்கும் கன்றுக்கான பால் வேறு.
பிறப்புறுப்பு மரத்துப் போன பசுக்களின் எண்ணிக்கைதான் இப்போது அதிகம். அவற்றின் பாலைத்தானே அருந்திக் களிக்கிறீர்கள். அவற்றில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்று ஆய்வு செய்து முடித்தாயிற்று அல்லவா. அவற்றில் உயிர் உருவாக்கும் ஆற்றல் இருக்கிறதா எனப் பாருங்கள் மேதைகளே. சத்தியமாகச் சொல்கிறேன், காய்ந்த யோனிப் பசுக்களின் பாலில் உயிராற்றல் இருக்காது.
புணர்ச்சி என்பது பிள்ளை பெறும் ‘வேலை’ அல்ல. மனங்கள் கூடிக் களித்து, உடலுக்குள் மழை பொழிந்து, கருப்பை நனைந்து, உயிர் வளரும் படைப்புத்தொழில். அந்தப் படைப்புத் தொழிலில் குறுக்கிட்டு விந்தணுக்களை பீச்சிவிட்டால் கன்று பிறக்கும். அந்தக் கன்று இயற்கையான உடல் வலுவுடன் வாழாது, அக்கன்றுக்காகச் சுரக்கும் பாலில் உயிர் ஆற்றல் இருக்காது. இவ்வாறு பிறக்கும் கன்றுகள் யாவும் மருத்துவமனைகளையும் இரசாயன தீவனங்களையும் நம்பித்தான் வாழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் எப்படி மருத்துவமனைகளையும், இரசாயனம் கலந்த உணவுகளையும் நம்பி வாழ்கிறீர்களோ அதேபோல, செயற்கைக் கன்றுகள் வாழ்கின்றன.
எங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை உங்களுக்கும் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் புத்திசாலிகள் என்பதால் உங்களுக்கு இந்தத் தகவல் வந்து சேரவில்லை. இப்போதும்கூட உங்களில் பலர் இந்தத் தகவலை நம்பப்போவதில்லை. உங்களுக்கு ஆய்வறிக்கைகள் தேவை, சோதனைகள் தேவை. எங்களுக்கோ காளைகளின் விறைத்த குறிகள் தேவை.
பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு மேதாவிக் கூட்டம் காளைகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. காளைகளுடன் மனிதர்கள் ஆடும் விளையாட்டுகளைத் தடை செய்தது அக்கூட்டம். இப்போது காளைகளை வளர்ப்பது தேவையற்ற செயலாக மாறிவிட்டது.
ஒருபக்கம், விந்து ஊசிகள் மறுபக்கம் காளை விளையாட்டுகளுக்குத் தடை.
பசு என்றால், உயிர் என்றும் பொருள். மாடு என்றால், செல்வம் என்றும் பொருள். உயிரின் ஆதி, செல்வத்தின் உருவம் நாங்கள்தான். காளை என்றால் உயிர்களின் குறியீடு. காளை மீது இறைவன் அமர்கிறான் என்பது, எல்லா உயிர்களையும் அடக்கி ஆள்பவன் என்ற விரிந்த கருத்தின் உருவகம்.
உங்களில் மனசாட்சியை விற்றுவிடாத ஒரு சிலரை நோக்கி இக்கடிதம் வழியாக நான் உதவி கேட்கிறேன்.
காளை மாடுகள் யாவும் இப்போது இறைச்சிக்காக விற்கப்படுகின்றன.
ஏர் இழுத்த எங்கள் காளைகள், மலைமலையாகக் குவிந்த நெல்லைப் போர் அடித்த எங்கள் காளைகள், செக்குகளை இழுத்து எண்ணெய் வளம் பெருக்கிய எங்கள் காளைகள், வண்டிகளை இழுத்து கோடானு கோடி மக்களுக்கான வாகனங்களைத் தந்த எங்கள் காளைகள், ஏறு தழுவலில் ஓடி விளையாண்டு இன்புற்ற எங்கள் காளைகள், காடுகளில் எங்கள் மீது ஏறி விழுந்து தடித்த குறிகளால் எங்கள் யோனிகளை விரித்துப் புணர்ந்து பெருமழை பெய்த எங்கள் காளைகள், இப்போது கசாப்புக்கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
மாட்டிறைச்சி உண்பதும் உண்ணாததும் உங்கள் கொள்கை, உங்கள் உரிமை. பசுக்களாகிய நாங்கள் பால் கறப்பதால் தப்புகிறோம். காளைகளுக்கென வேலை ஏதும் உங்கள் நாகரிக சமூகத்தில் இல்லை. ஆகவே, ஆணாகப் பிறக்கும் எல்லா மாடுகளும் கறிக் கடைகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றன. ஒருகாலத்தில், உழைத்துக் களைத்து இளைத்த மாடுகளைக் கறிக்கு வெட்டினார்கள். இப்போது கொழுத்துத் திரியும் காளைகளாகத் தேடித் தேடி வெட்டுகிறார்கள்.
உங்கள் சமூகத்தின் மேதைகளுக்கு பசுக்கள் வேண்டும், காளைகள் வேண்டாம். மாடுகளாகிய எங்களுக்கோ புணர்வதற்குக் காளைகள் வேண்டும். இதில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைக்கிறீர்களா?
இன்னும் சில நாட்களில் எனக்குப் புணர்ச்சி தேவைப்படும். நான் வாழும் ஊரில் காளைகள் இல்லை, மருத்துவர்கள் இருக்கிறார்கள். எனக்குக் காளையுடன் புணரும் வேட்கை எழுகிறது, மருத்துவர்களின் விந்து ஊசிகள் மீது வெறுப்பு மிகுந்துகொண்டுள்ளது.
என்னை வளர்ப்பவர் என்னிடம் இது பற்றிப் பேசினார். எ்ப்படியாவது காளை தேடித் தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக அவர் இறையிடம் வேண்டிக் கொண்டும் இருக்கிறார். என்னைப் புணர்வதற்காகவேனும் ஒரு காளை மாட்டை விலைக்கு வாங்கவும் அவர் தயாராக இருக்கிறார்.
என்னைப் போன்ற பசுக்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கெல்லாம் புணரும் உரிமை வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தின் வழியாக நான் உரையாடுகிறேன்.
இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாத காலம் மிக அதிகம். மாடுகள் இல்லாத காலம் மிகக் குறைவு. நேரடியாகச் சொல்வதானால், பூமிக்கு மனிதர்களைவிட மாடுகளை அதிகம் பிடிக்கும்.
உங்கள் மலம் கூட புழுக்களுக்கு உணவாகாத வகையில், இரசாயனத்தில் கழுவி புதைக்கிறீர்கள். எங்கள் சாணத்தில் ஒவ்வொரு நாளும் கோடானு கோடி புழுக்கள் வாழ்ந்து மடிகின்றன.
புணராத கோழிகளிலிருந்து முட்டைகள் பெறுகிறீர்கள், மலட்டு விதைகளைத் தூவி பழங்கள் அறுக்கிறீர்கள், விதையற்ற பயிர்களை உணவாகக் கொள்கிறீர்கள். உங்களோடு பழகும் எல்லா உயிர்களிடமிருந்தும் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டீர்கள்.
எல்லா உயிரினங்களின் அடி வயிற்று சூட்டிலிருந்து கூறுகிறேன், ‘இதற்கெல்லாம் நீங்கள் அனுபவிப்பீர்கள்’
இப்போதும் அனுபவித்துக்கொண்டுதானிருக்கிறீர்கள். படும்பாடுகளுக்கெல்லாம் நாம் செய்த பாவம்தான் காரணம் என்று உணராமல், அனுபவிக்கிறீர்கள்.
இப்போதும் உங்களால் மாற முடியும். மலட்டுத் தன்மை கொண்ட எல்லா உணவுகளையும் நிராகரியுங்கள். விந்து ஊசிகளுக்கு எதிராகப் பேசுங்கள், செயலாற்றுங்கள். காளைகளைப் பாதுகாக்க ஏதேனும் செய்யுங்கள். பசுக்களை மட்டும் பாதுகாப்போரின் எண்ணிக்கை உயர்கிறது, காளைகளைக் காப்பவர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். காளைகளைப் பாதுகாப்பதற்கென கூடிப் பணியாற்றுங்கள்.
உங்கள் புள்ளிவிவரங்களை விட எங்கள் உணர்ச்சிக் குமுறலுக்கு வலிமை அதிகம்.
நாங்கள் அப்படி என்ன பெரிதாகக் கேட்கிறோம்? எங்களுடன் புணர்வதற்குக் காளை வேண்டும் என்கிறோம். கேவலம், நாங்கள் மாடுகள்தானே!
No comments:
Post a Comment