ஒரு மூலிகையின் நோய் நீக்கும் தன்மையானது, பின்வரும் குறிகளைக் கொண்டே சித்தர்களால் உணரப்பட்டது. ஒரு பொருளின் வடிவம், நிறம், சுவை, தன்மை போன்ற நான்கு அம்சங்களைக் கொண்டு, இந்த மூலிகையானது இந்த நோயைத் தீர்க்கும் என்று சித்தர்களால் குறிப்புகள் வரையப்பட்டன.
முள்ளங்கி:
உதாரணத்துக்கு, முள்ளங்கியை எடுத்துக்கொள்வோம். முள்ளங்கி, இந்த உலகில் மனிதர்களுக்கு உணவாகப் பயன்படும் ஒரு பொருள்.
அதன் வடிவம் – நெட்டை
அதன் நிறம் – வெள்ளை
அதன் சுவை – கார்ப்பு (துவர்ப்பு)
மருத்துவத்தன்மை – நீர்ப்பெருக்கி
மேற்கண்ட முறைப்படி ஒரு பொருளைப் பகுத்தறிந்து, அதை மனித உடலோடு ஒப்பிட்டு, அதை மருந்தாக மாற்றி அமைத்தனர். அதாவது, மனிதனுடைய உடலில் முள்ளங்கியைப் போல் நீண்ட தோற்றம் உள்ள எலும்புகள் சார்ந்த குறைபாட்டு நோய்களுக்கு முள்ளங்கியை மருந்தாகக் கண்டறிந்தனர். முதுகுத்தண்டுவட வலி, மூட்டுகள் தேய்வு, கை, கால் எலும்புகளில் உண்டாகும் வலிகளுக்கு முள்ளங்கியை மருந்தாக்கும்போது, உண்மையிலேயே மேற்கண்ட குறைபாடுகள் விரைவாகவும், முழுமையாகவும் தீர்வதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
இன்றைய நவீன மருத்துவத்தில் கூட கண்டுகொள்ளப்பட்ட உண்மையான ஓர் விசயத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒருவர் அடிக்கடி பயணம் மேற்கொண்டால் அல்லது சிறுநீரை அடிக்கடி அடக்கினால் அல்லது குறைவான அளவில் தண்ணீர் குடித்துவந்தால் அல்லது கார உணவுகளை அடிக்கடியும் அதிகமாகவும் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் தொற்றுநோய் (Urinary Infection) ஏற்பட்டு சிறுநீரில் யூரிக் அமிலத்தின் (Uric Acid) அளவு அதிகரித்துவிடும். அப்படி, யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது நமது எலும்புகளில் தொற்று (Infection) ஏற்பட்டு, கை, கால் மூட்டுகளில் கடுமையான வலியை உண்டாக்கும். இதற்கு, யூரிக் அமிலத்தின் அளவு குறைவான மருந்து எடுத்துக்கொண்டால் ஒழிய, பின்னாளில் சிறுநீரகம் செயல் இழப்பதைத் தடுக்க இயலாமல் போய்விடும்.
இப்போது, மறுபடியும் முள்ளங்கியைப் பற்றிய விசயத்திற்க்கு வருவோம். முள்ளங்கியைச் சாறாகவோ அல்லது பிற உணவுகளுடன் சேர்த்தோ சாப்பிடும்போது, நமது எலும்புகளில் உள்ள நோய்த்தொற்றின் அளவு குறைக்கப்படுகிறது. முள்ளங்கியின் நிறம் வெள்ளை. அதில் உள்ள திரவநிலை சுண்ணாம்புச்சத்தைப் பிரதிபலிப்பதால், புண்களை ஆற்றும் வல்லமை முள்ளங்கிக்கு வந்துவிடுகிறது. முள்ளங்கியின் சுவை – துவர்ப்பு. இந்தச் சுவையால், தளர்ந்த நரம்புகள் இறுகும். முக்கியமாக, உணர்வு நரம்புகள் வலுவடையும். ஆக மொத்தத்தில், கண், காது, மூக்கு, மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உணர்வு உறுப்புகளைப் பாதுகாக்கும் பாதுகாவலனாக முள்ளங்கி செயல்படுகிறது.
முள்ளங்கியின் தன்மை:
முள்ளங்கியின் தன்மை சிறுநீர் பெருக்குவதாக இருப்பதை அறிவோம். முள்ளங்கியின் நீர் பிரிக்கும் தன்மையால் சிறுநீரகம் தனது பாதிப்பில் இருந்து மீள்கிறது. புராஸ்டேட் கிளாண்ட் (Prostate Gland) உறுதியாகிறது. உடலில் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டால் மூளை, கல்லீரல், இதயம் சார்ந்த நோய்கள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கிவிடும். ஆக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது பகல் நேர உணவில் அடிக்கடி முள்ளங்கியைச் சேர்த்துக்கொண்டு வர வேண்டும். இதில் இருந்து, முள்ளங்கியின் வடிவம், நிறம், சுவை, மருத்துவத் தன்மை அடிப்படையில், சித்தர்களின் மருத்து கண்டறிந்த விதம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment