Wednesday 3 January 2018

ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற கல்பதரு

**ஜெய குரு தேவ் **

*யார் என்ன செய்திருந்தாலும் என்னிடம் சரணாகதி அடைந்தால் அவர்களுக்கு எந்த பயமும் இல்லை*

*ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற கல்பதரு*

ஜனவரி 1, புத்தாண்டு தினத்தில் பலர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வர். ஆனால் *ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களோ கல்பதரு தினமான அன்று குருதேவரின் கருணையில் திளைப்பது வழக்கம்.*

கல்பதரு தன்னிடம் வந்து யாசிப்பவனுக்கு அவன் கேட்பது எதுவாயினும் தந்துவிடும்; அது கேட்டவனுக்கு நன்மை தருமா, தீமை தருமா என ஆராய்வதில்லை. ஆனால் *கலியுக கல்பதருவான குருதேவரோ, நமக்கு நன்மை தரக்கூடியதையே அருள்வார்.*

ஆண்டவனை ‘அர்தி கல்பன்’ என்பர் பெரியோர். ‘வேண்டுபவனுக்கு (அர்தி) வேண்டுவதைத் தரும் கல்பதரு’ என்பது இதன் நேர்ப்பொருள்.

இதைவிட ஓர் உயர்ந்த பொருளையும் பெரியோர் காட்டியுள்ளனர். ‘அர்தி ச அசௌ கல்பச் ச’ என்று பிரித்துக் காட்டி, அதை விளக்கியும் உள்ளனர்.

அதாவது, இறைவன் கல்பதரு போல தன்னிடம் வருபவனுக்கு மட்டும் வழங்குவதில்லையாம். தானே பக்தர்களிடம் சென்று ‘வேண்டுபவை அனைத்தும் தர வல்லவனான என்னிடம் யாசியுங்கள்’ என்று தன்னிடம் அவர்களை வரவழைக்கிறானாம்.

அர்திகளுக்கு (கேட்பவர்களுக்கு) வழங்க, இறைவன் அர்தியாகவும் கல்பதருவாகவும் தானே ஆகிறானாம். தன்னிடம் வந்து உயர்கதியைப் பெற மனிதனுக்கு விருப்பத்தையும் நம்பிக்கையையும் தருகிறான்.

இதனால்தான் *நம்மாழ்வார் ‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’ என்கிறார்.*

*ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற ‘அர்தி கல்பன்’ 1.1.1886 அன்று தம்மைத் தாமே வெளிப்படுத்தி பக்தர்களுக்கு அபயம் தந்ததால் அவரை கல்பதரு என்கிறோம்.*

ஆஹா, அந்த நிகழ்ச்சி எவ்வளவு அற்புதமானது!
காசிப்பூர் தோட்ட மாளிகையில் தொண்டைப் புண் சிகிச்சைக்காகத் தங்கியிருந்த ஸ்ரீராமகிருஷ்ணர் அன்று மிக உற்சாகத்துடன் இருந்தார்.

பிற்பகல் 3 மணி. தோட்டத்தில் சற்று உலாவி வர வெளியே வந்தார். நீண்ட நாட்களாக வெளியே வராதவர் அப்படி வந்ததும், ஆங்காங்கிருந்த பக்தர்கள் ஓடி வந்து அவரைச் சூழ்ந்து கொண்டு வணங்கினர்.

ஸ்ரீராமகிருஷ்ணர் திடீரென்று கிரீஷ் பாபுவைப் பார்த்து, ஆமாம் கிரீஷ், *நீ என்னைப் பற்றி எல்லோரிடமும் இவ்வளவு தூரம் (நான் ஓர் அவதார புருஷர் என்று) கூறி வருகிறாயே, அப்படி என்னிடம் என்ன அதிசயத்தைக் கண்டுவிட்டாய்?”* என்று கேட்டார்.

கிரீஷ் பாபு பல பாவங்களைச் செய்து பகவானிடம் அடைக்கலம் புகுந்தவர்.

அப்படிப்பட்ட கிரீஷ்பாபு குருதேவர் முன்பு மண்டியிட்டுக் கரம் கூப்பி,
*நான் என்ன கூறுவேன்? வால்மீகியும் வியாசருமே உங்கள் பெருமையைக் கூற வார்த்தைகள் அற்றுப் போன நிலையைப் பார்க்கிறேன்; அப்படிப்பட்டவரைப் பற்றி நான் என்ன கூற முடியும்?”* என்றார்.

மிகுந்த உணர்ச்சியுடன் கூறப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டதும் *குருதேவர் மனமிளகி, நான் இன்னும் கூற என்ன உள்ளது? உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கிறேன்; நீங்கள் எல்லோரும் ஆன்மிக விழிப்பு பெறுங்கள்” என்று ஆசீர்வதித்தார்.*

இப்புனிதமான வார்த்தைகளைக் கேட்டு பக்தர்கள் ஆனந்தப் பெருக்குடன் உணர்ச்சி மேலிட்டவர்களாய் அவர் முன் வீழ்ந்து வணங்கினார்கள்;

ஒவ்வொருவரையும் குருதேவர் தொட்டு ஆசீர்வதித்தார். அவரது ஸ்பரிசத்தால் அன்று பக்தர்களின் மனங்களிலிருந்த குழப்பங்கள் நீங்கின. ஒவ்வொருவருக்கும் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.

நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் ஒவ்வொரு புத்தாண்டிலும் லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற கல்பதருவை நினைத்துப் புது நம்பிக்கை பெறுகிறார்கள்.

குருதேவரின் இந்த வாக்குறுதியை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சிகள் பல.

அவற்றுள் ஒன்று இதோ:

*ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருமுறை தம்மைப் பற்றி, ‘அமி கர்மநாசா, ஃபராஸிடாங்கா’ என்றார். ‘அமி கர்மநாசா’ என்றால் வங்கமொழியில் ‘என்னைச் சரண் புகுகிறவர்களின் கர்மவினைகளைப் போக்கி விடுவேன்’* என்று பொருள்.

‘ஃபராஸிடாங்கா’ என்பது ஆங்கிலேய ஆட்சியில்லாத பிரெஞ்சுப் பகுதியைக் குறிக்கும்.

நான் பிரெஞ்சுப் பகுதி போன்றவன். ஆங்கில ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள், பிரெஞ்சுப் பகுதியான சந்தன் நகர் சென்று தப்பித்துக் கொள்வார்கள்.

*அதுபோல் யார் என்ன செய்திருந்தாலும் என்னிடம் சரணாகதி அடைந்தால் அவர்களுக்கு எந்த பயமும் இல்லை” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.*

*சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரை கபால மோசனர் – தலையெழுத்தையே மாற்றி எழுத வல்லவர் என்று கூறுகிறார்.*

தம்மை இறைவனின் பக்தனாக, தாசனாகக் கருதிய ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பொதுவாக தம்மைப் பற்றிப் பிறர் கூறும் குரு, பாபா, கர்த்தா ஆகிய வார்த்தைகள் பிடிக்காது.
என்றாலும்...

*அவர் தாமே ‘அமி கர்மநாசா’ என்று கூறியது ‘ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி’ – ‘பக்தனே! உன்னை நான் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்’ என்ற ஸ்ரீகிருஷ்ணரின் வார்த்தைகளின் வங்க மொழியாக்கம் போலுள்ளது.*

சாரமாக, *ஸ்ரீராமகிருஷ்ணர் நமக்கு அளிக்கும் அபய வார்த்தை “மனிதா! நீ உன் கர்மவினைகளைப் பார்க்காதே. என் கருணையைப் பார்” என்பதுதான்.*

குருதேவரின் இந்த அருளில் திட நம்பிக்கை கொள்ளாது, பலரும் தங்கள் பாவங்களையும் பலவீனங்களையும் பற்றி மட்டுமே எண்ணி மருகுகின்றனர்.

தாயினும் சாலப் பரிந்தூட்டும் குருதேவரின் அருளிருக்க, நிம்மதியைத் தேடி அங்குமிங்கும் அலைய வேண்டாம்.

*தூசி தீயில் விழுந்தால் பொசுங்கும்; அதைக் கண்ணில் வைத்துக் கொண்டால் கலங்கடிக்கும்

. அதுபோல பாவச்சுமையை மனதில் ஏற்றிக் கொண்டால் பெரும் துன்பம் தரும். ஆனால் இறைவனின் கருணை முன்பு நம் குற்றங்கள் அனைத்தும், ஆண்டாள் கூறுவது போல ‘தீயினில் தூசு’ ஆகிவிடும்; பாரதி கூறுவது போல ‘பரிதி முன் பனித்துளி’ ஆகிவிடும்.*

ஸ்ரீராமகிருஷ்ணர் இன்றும் *நம்மிடையே நமக்குத் தம்மையே தரும் கற்பகமாக விளங்குகிறார்.* அவரது கல்பதரு வாக்குறுதியை பக்தி மற்றும் தொண்டின் மூலம் நாம் விரைவில் உணரலாம்.

*நமக்கனைவருக்கும்  ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற நித்திய கற்பக விருக்ஷத்தின் நிழலில் இளைப்பாற ஓர் இடமுண்டு என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஸ்ரீராமகிருஷ்ண பக்தனும் உறுதியுடன் நிற்க வேண்டும்.*

இதுவே நமக்கு இன்று 01/01/2018 புத்தாண்டுச் செய்தியாக அமையட்டும், மேலும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆசியுடனும் இனி வரும் ஒவ்வொரு நாட்களும் நாம் சாதனை புரிய என்றென்றும் அவர் பெற்ற தாயினைப் போல் நம்முடன் இருந்து நல்லவை அனைத்தும் செய்துதருவார் என திட நம்பிக்கையுடன் வரும் காலங்களில் சாதனைகளைப் படைப்போம்.

*ஸ்ரீராமகிருஷ்ணரிடம்  சரணடை...*

குரு மஹராஜ் ஸ்ரீராமகிருஷ்ணர் நம்மை தொட்டு ஆசீர்வதிப்பது போலவே உணரலாம்.

இது தெவிட்டாத அமுதம்

*ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணாய நம:*

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing