Wednesday, 10 January 2018

மார்கழி குளிருக்கு பயந்து இரவில் கோலமிடுவது சரியா?


இரவில் கோலமிடுவது சரியா?
❄ மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் சூரியன் குருவின் வீட்டில் (தனுசு) இருப்பார். இதன் காரணமாக சூரியக் கதிர்கள் பரவுவதற்கு முன் ஒரு தனி சக்தி உண்டாகும்.

❄ இதன் காரணமாகவே அதிகாலையில் எழுந்து கோலமிட வேண்டும். அப்போது பெய்யும் பனிப்பொழிவானது நள்ளிரவில் பெய்யும் பனியைவிட மென்மையானதாக, தாக்கம் குறைந்ததாக, விஷத்தன்மையற்றதாக இருக்கும்.

❄ எனவே, சூரியக்கதிர் பரவுவதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடும் போது மார்கழி மாத தட்பவெப்ப நிலைக்கு உடல் ஒத்துப்போகும். பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். மாறாக பனிப்பொழிவுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் உடல்நலம் மேம்படாது.

❄ சீதோஷண நிலையை வாழும் சூழலுக்கு தகுந்தாற்போல் அமைத்துக் கொள்ளவே, வாசலில் கோலமிட்ட பின்னர் விளக்கு வைத்து வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விளக்கு வைப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் வீட்டை கதகதப்பாக வைக்க உதவும். சீதோஷண நிலையும் சமனடையும்.

❄ மார்கழிப் பனியில் மண்ணும் குளிரும் தைப் பனியில் தரையும் குளிரும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, வாசலில் கோலமிட்டு சாணத்தில் பூசணிப்பூவை வைப்பதன் மூலம் பனியால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

❄ நமது வழிபாடுகள் அனைத்துமே இயற்கையுடன் ஒத்துப்போகும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மார்கழி, தை மாதங்களில் வீட்டிற்கு அருகிலேயே பூசணிப்பூ, பரங்கிப்பூ, செம்பருத்தி உள்ளிட்ட பூ வகைகள் கிடைக்கும். அவற்றை சாணத்தின் மீது வைத்தால் நீண்ட நேரம் வாடாமல் இருக்கும்.

❄ சாணத்தின் மீது வைக்கப்படும் பூசணிப்பூ, பரங்கிப்பூ ஆகியவை வெளியேற்றும் வாசனை பனிக்காற்றில் கலந்து சிறந்த கிருமி நாசினியாகத் திகழும் என்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

❄ எனவே, இரவில் கோலமிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாலையில் ஓசோன் வாயுக்கள் அதிகம் வெளியேறும். அந்த நேரத்தில் கோலமிடுவதால், சுவாசப் பிரச்சனைகள் தீரும்.
புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing