Wednesday, 10 January 2018

ஜப்பான் ஜோடிக்கு மதுரையில் இந்து முறைப்படி திருமணம்

*🚩🛑தமிழர் கலாச்சாரத்தால் கவரப்பட்ட ஜப்பான் ஜோடிக்கு மதுரையில் இந்து முறைப்படி திருமணம்: வேஷ்டி, சேலை அணிந்து உறவினர்கள் உற்சாகம்*

*மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட ஜப்பானை சேர்ந்த யூடோ, சிகாரு ஜோடி.*

தமிழர் கலாச்சாரத்தால் கவரப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த இளம் ஜோடி, மதுரையில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

ஜப்பான் தலைநகரான டோக்கியோவைச் சேர்ந்தவர் யூடோ நினாகா. பிஎச்டி படித்த இவர், அங்குள்ள கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பெண் சிகாரு ஒபாதா. இவர் எம்ஏ படித்துவிட்டு, அங்குள்ள தனியார் விமான போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிகிறார். தமிழை தங்கு தடையின்றி அழகாக பேசும் சிகாருவும், யூடோவும் கடந்த ஏப்ரலில் ஜப்பானில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் தமிழால் ஈர்க்கப்பட்ட சிகாரு-யூடோ தம்பதி ஏற்கெனவே பதிவு திருமணம் செய்திருந்தாலும், தமிழர் கலாச்சார பின்னணியில் இந்து முறைப்படி மதுரையில் திருமணம் செய்யத் திட்டமிட்டனர். இதையடுத்து ஜப்பானில் தனக்கு தமிழ் பேச கற்றுத் தந்த தோழி மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த வினோதினியிடம் சிகாரு தெரிவித்துள்ளார்.

அவரது ஏற்பாட்டில் மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து ஜப்பான் ஜோடி மற்றும் அவர்களது உறவினர்கள் மதுரை வில்லாபுரம் வந்து தங்கினர்.

நேற்று காலை ஹோட்டலுக்கு சென்றனர். திருமண விழாவில் பங்கேற்க சிகாருவின் பெற்றோர் கெய்ஜி ஒபாதா, நஓமி ஒபாதா, யூடோவின் 2 சகோதரர்களும் வந்திருந்தனர். அனைவரும் தமிழர் கலாச்சாரப்படி வேஷ்டி, சேலை அணிந்திருந்தனர். தமிழ், ஜப்பான் மொழிகளில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது.

முகூர்த்த நேரத்துக்கு முன் மணமக்கள் அருகேயுள்ள கோயிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். மணமகனுக்கு பட்டு வேஷ்டி, சட்டை, மணமகளுக்கு பட்டுச்சேலை அணிவித்திருந்தனர். மேடையில் காப்பு கட்டுதல் முகூர்த்தக்கால் உள்ளிட்ட சடங்கு முறைகள் நடைபெற்றன. பின்னர் காலை 11.30 மணியளவில் மணமகன் யூடோ, மணமகள் சிகாருவின் கழுத்தில் தாலி கட்டினார்.

இதுபற்றி மணமகள் சிகாரு கூறியதாவது: ஜப்பானில் வினோதினி மூலம் தமிழ் கற்றபோது, அம் மொழியை கற்க ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின், ஜப்பான், தமிழ் மொழிகள் பற்றி பிஎச்டி ஆய்வு மேற்கொள்ள முடிவெடுத்தேன். இதற்காக 4 ஆண்டுகளுக்கு முன் சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு வந்து, தமிழ் தொடர்பான பல்வேறு தகவல்களை திரட்டினேன். தற்போது தமிழில் சரளமாக பேசினாலும், இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பி எனது கணவரின் அனுமதியுடன் மதுரையில் திருமணம் நடைபெற்றது. இது மறக்க முடியாத சந்தோஷம் என்றார்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing