Friday 3 August 2018

#ஆதார் எதிர்ப்பு #ரகசியம்

.           ஆதார் எதிர்ப்பு ரகசியம்.
    ஆதார் அட்டை அறிமுகப்படுத்தி ஒன்பது வருடங்கள் ஆகி விட்டது.
      ஆதார் அறிமுகப்படுத்த அரசியல்வாதிகள் பலப்பல காரணங்களை சொல்லலாம். ஆனால் உண்மையான காரணம் வடகிழக்கு மாநிலங்களில் வங்க தேசத்தவரின் ஊடுறுவல் தான்.
       அசாம், மேற்கு வங்கம், மேகாலயா
போன்ற மாநிலங்களில் கள்ளத்தனமாக ஊடுறுவிய வங்க தேசத்தவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போக, அவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காமல் அங்கிருக்கும் பூர்வ குடிகளுடனும் மத ரீதியான மோதல்களில் ஈடுபட்டனர்.
       ஓட்டு வங்கி அரசியலுக்காக இது நாள் வரை ஆண்ட காங்கிரஸ் அரசு அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டது. இது நிலமையை இன்னும் மோசமாக்கி சில இடங்களில் அவர்கள் மெஜாரிட்டியானார்கள். பல இடங்களில் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிற்கு பெருகி விட்டனர்.
         இது இந்திய அரசு மீது கடுமையான விமர்சனத்தை வைத்ததோடல்லாமல் நாடு முழுவதும் எதிர்ப்பு அலை உருவாக ஆரம்பித்தது.
          கண்துடைப்பிற்காகவாவது ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிலையில் காங்கிரஸ் அறிவாளிகளால் பிப்ரவரி 2009 ல் ஆரம்பிக்கப்பட்டது தான் ஆதார்.
       பிரச்சனையை ஒத்திப்போடவும் மக்களை சமாதானப்படுத்தவும் பெயரளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆதார் தான் இப்போது பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
----------------
          இந்திய குடிமகனை அடையாளம் கான்பதற்காக என்ற அளவில் மட்டுமே முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது.
         காங்கிரஸ் அரசு மாறியதும் அந்த அட்டை தான் அவர்களுக்கே சரியான ஆப்பாக இன்று பா.ஜ அரசால் செருகப்படுகிறது.
        ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே அதை கடுமையாக எதிர்க்க காரணம் என்ன....?
        மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அதில் இருப்பதால் திருட வாய்ப்பு உள்ளது, மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசு கண்காணிக்கிறது என்ற இரண்டு முக்கியமான குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
       உண்மையில் பார்க்கப்போனால் இதெல்லாம் சும்மா லுல்லுல்லாயி.....
     ஆதார் மூலமாக அரசியல் கொள்ளையர்களின்  அடிமடியிலேயே பிரதமர் மோடி கை வைக்கிறார் என்பதால் தான் இப்படி கதறுகின்றனர்.
      ஒரு விசயத்தை கவனித்துப் பார்த்தால் உங்களுக்கு புரியும்.
       ஆதார் அட்டையுடன் வங்கி கணக்கு இணைப்பு, பான் கார்டு இணைப்பு, சமையல் எரிவாயு மானியம், உர மானியம் என அனைத்தையும் ஒவ்வொன்றாக இணைத்தனர். ஒன்பது ஆண்டுகளாக அப்போதெல்லாம் எழாத எதிர்ப்பு இப்போது ஏன் எழுகின்றது....?
            சொத்துக்களை ஆதார் எண்ணுடன் இணைக்க சொன்ன பிறகு தான் அரசியல் கொள்ளையர்கள் கதறி ஒப்பாரி வைக்கின்றனர்.
         சொத்துக்களை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கும் அரசியல் வாதிகள் கத்தி கூச்சலிடுவதற்கும் என்ன சம்பந்தம் என கேட்பது புரிகிறது. அதையும் பார்க்கலாம்.
-------------------
          முப்பது வருடத்திற்கு முன்பு பிட்பாக்கெட் அடித்து, கள்ள சாராயம் விற்று வயிற்றை கழுவிய இன்றைய அரசியல் வாதிகள் பல ஆயிரம் கோடிகளை குவித்து வைத்து வெள்ளையும் சொள்ளையுமாக இறக்குமதி செய்யப்பட்ட காரில் பறக்கின்றனர்.
         இந்த பணமெல்லாம் எங்கிருந்து வந்தது..? உழைத்தா சம்பாதித்தார்கள்...? கட்சியில் சேர்ந்து பதவிகளை பெற்று லஞ்ச, ஊழல்களினால் சம்பாதித்து வந்தது.
           பத்து லட்சம், இருபது லட்சம் என்றால் வீட்டிலேயே கூட பதுக்கி வைத்து கொள்ளலாம். பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடிகளை எங்கு கொண்டு போய் மறைத்து வைப்பது...?
      இதற்கு கைகொடுப்பது தான் பினாமி பெயரில் சொத்து வாங்குவது.
     ஒரு அமைச்சர்.... பொதுப்பணித்துறை அமைச்சர் என வைத்துக் கொள்ளலாம். மாநிலத்தில் அந்த துறையில் நடக்கும் எந்த ஒப்பந்தத்திலும் குறைந்தது 10% கமிஷன் அவர் பங்காக போய் விடும். வருடத்திற்கு ஐந்தாயிரம் கோடிகள் என்பது குறைந்த பட்ச கணக்கு.
        இவ்வளவு பணத்தை வீட்டில் வைத்து சிக்கன் மசாலா, சிக்கன் மஞ்சூரியன் போல ரூபாய் மசாலா, ரூபாய் மஞ்சூரியன் செய்து அவித்தெல்லாம் சாப்பிட முடியாது.
          தங்கம் வாங்கலாம். வருடத்திற்கு ஐந்தாயிரம் கோடிக்கு தங்கம் வைரம் வாங்கி எத்தனை டன் பதுக்கி வைப்பது. எவனாவது திறமையாக ஆட்டைய போடவும் வாய்ப்புள்ளது. அல்லது ரெய்டில் மாட்டினால் அமைச்சர் பதவியே காலியாகி விடும். அதை எவனிடமாவது கொடுத்து வைத்தாலும் ஆட்சி மாறினால் அதிகாரம் போய் விடும். அதிகாரம் போய் விட்டால் கொடுத்து வைத்தவன் திரும்ப கொடுப்பான் என்பது உறுதி இல்லை.
       சரி, ஊரை அடித்து சேர்த்த பணத்தை என்ன தான் செய்வது...? இதற்கு ஒரே தீர்வு பினாமி சொத்து.
        எவனாவது அல்லக்கை, சொந்தக்காரன், சாதிக்காரன், வைப்பாட்டி பெயர்களில் சொத்து வாங்கி அமைச்சரும், அவரது குடும்பமும் அனுபவிக்கும். அந்த பினாமிக்கு நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல அமைச்சரால் சில சலுகைகள் கொடுக்கப்படும்.
------------------
       இப்போது விசயத்திற்கு வருவோம். லஞ்ச ஊழல் பணத்தில் யார் எவர் பெயரில் சொத்து வாங்கியிருக்கிறார் என்பது இது வரை தெரியாமல் இருந்தது.
       இதற்கு காரணம் சொத்து பரிமாற்றம் என்பது பத்திர பதிவு அலுவலகத்தோடு முடிந்து விடும். அதை பற்றிய தகவல்கள் அரசுக்கு தெரியாது. எவராவது போட்டு கொடுத்தால் மட்டுமே அரசுக்கு தெரியும்.
      இந்த ஓட்டையை வைத்து தான் ஊழல் பெருச்சாளிகள் இது வரை புகுந்து விளையாடினர்.
         ஆட்டையாம்பட்டியில் பரோட்டா கடை நடத்தி வரும் குப்பன் பெயரில் ஊட்டியில் ஆயிரம் ஏக்கர் எஸ்டேட்டை அமைச்சர் தனது ஊழல் பணத்தில் வாங்கி குடும்பத்துடன் சொகுசு அனுபவிப்பார்.
       இப்போது இதற்கு தான் வேட்டு வைத்துள்ளார் பிரதமர் மோடி.
         ஒரு சொத்தை வாங்கி பதிவு செய்யும் போது ஆதார் எண் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சொத்துக்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டு விட்டது.
    வாங்கும் சொத்து, ஏற்கனவே வாங்கிய சொத்துக்களில் ஆதார் எண்ணை இணைத்தால் என்ன ஆகும்...?
        அதையும் பார்க்கலாம்.
----------------------
        இனி குப்பன் பெயரில் எந்த சொத்து வாங்கினாலும் ஆதார் எண்ணை இணைப்பதால் குப்பன் வாங்கிய சொத்து, என்ன விலைக்கு வாங்கினார் என்ற விபரம் தானாகவே பத்திர பதிவு அலுவலகத்திலிருந்து வருமான வரித்துறைக்கு போய்விடும்.
         ஊட்டியில் ஆயிரம் ஏக்கர் சொத்து வாங்க குப்பனுக்கு பணம் எப்படி வந்தது என்று குப்பனுக்கு வருமான வரித்துறையிலிருந்து கேள்வி கேட்டு ஓலை பறக்கும்.
      அது மட்டுமல்ல அவரின் ஆதார் எண்ணை கணிணியில் தட்டியதும் ஏற்கனவே அவர் பெயரில் உள்ள சொத்துக்கள், வாங்கிய தொகை, வாங்கிய நாள் எல்லாம் வந்து விழும். அனைத்திற்கும் சேர்த்து குப்பன் பதில் சொல்ல வேண்டும்.
      என்ன பதில் சொல்ல முடியும்...? பரோட்டா விற்ற பணத்தில் ஐந்தாயிரம் கோடி கொடுத்து ஆயிரம் ஏக்கர் எஸ்டேட் வாங்கினேன் என்று சொல்ல முடியுமா...?
      ஒரு வேளை அப்படி சொன்னால் அடுத்தடுத்த  கேள்விகள் இப்படி வரும்.
1. ஐந்தாயிரம் கோடி லாபமாக மட்டும் கிடைத்தது என்றால் ஒரு வருடத்தில்  குறைந்தது இருபத்தியைந்தாயிரம் கோடிக்கு
வியாபாரம் நடந்திருக்க வேண்டும். இருபது லட்சத்திற்கு மேல் போனாலே GST வரி கட்ட வேண்டும். GST செலுத்திய விபரம் எங்கே...?
2. பரோட்டா விற்று ஐந்தாயிரம் கோடி லாபம் எனில் அந்த பணத்திற்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்து அதற்கான வருமான வரி கட்ட வேண்டும். ஏன் கட்டவில்லை....?
         பினாமி குப்பனுக்கு பதிலும் சொல்ல முடியாது, கணக்கு காட்டாத கருப்பு பணத்திற்கு விதிக்கப்படும் அபராதத்தை கட்டவும் வழியிருக்காது.
         பிறகு என்ன....? வரி, அபராதம் கட்டாததால் குப்பனின் பெயரில் பினாமியாக வாங்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் எஸ்டேட் ஏலத்திற்கு போக வேண்டியது தான்.
-----------------------
      இது குப்பனோட நிற்காது. அமைச்சர் தன்  வைப்பாட்டி தளுக்கு சுந்தரிக்கு ஊழல் பணத்தில் வாங்கி கொடுத்த பங்களா, பென்ஸ் கார் அனைத்திற்கும் தளுக்கு சுந்தரி வருமானம் வந்த வழியை கணக்கு காட்ட வேண்டும். தவறினால் கார், பங்களா அம்போ தான்.
          இதெல்லாம் தெரிந்து தான் அரசியல் கொள்ளையர்கள் சப்பை காரணங்களை சொல்லி ஆதார் அட்டை கூடாது என்கிறார்கள்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing