பார்வையாளர்களை ஏமாற்றுகிறதா பிக்பாஸ்?
.............
பிக்பாஸ் முதல் சீசனை ஒரு நாள் கூட விடாமலும், இரண்டாம் சீசனை அவ்வப்போதும், தற்போதைய மூன்றாம் சீசனை எப்போதாவதும் பார்ப்பவன் என்ற முறையில் பிக்பாஸ் வீட்டைப்பற்றி சில சந்தேகங்கள் மனதில் தோன்றுகிறது. பிக்பாஸ் ஷோ பார்வையாளர்களை ஏமாற்றுகிறதோ? என்ற எண்ணம் ஏற்படுகிறது.
அங்குள்ளவர்களே சமைத்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை உள்ளதாகக்கூறப்பட்டது. ஆனால் அங்குள்ள எல்லோரும் அவர்களே சமைத்து சாப்பிடுவார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. ஏதோ நமக்கு காண்பிக்கும் காட்சியில் மட்டும் ஏதோ கொஞ்சம் காட்டி விட்டு மற்றபடி வீட்டின் பின்புறம் ஹைகிளாஸ் கிச்சன் அமைத்து அவர்களுக்கு சமைத்து வழங்குகிறார்கள் எனத்தோன்றுகிறது.
உடைகளை அவர்களே வாஷ் செய்து உலர்த்தி பயன்படுத்துவது போல் ஒன்றும் தெரியவில்லை. ஒரு முறை பயன்படுத்தி விட்டு அப்புறப்படுத்துகிறார்களா? அல்லது அவர்களுக்காக வாஷ் டீம், வாஷ் செய்து அனுப்புகிறதா? எனத்தெரியவில்லை.
எல்லோருடைய மேக்கப்பிலும் தரம் வெளிப்படுகிறது. இவ்வளவு நேர்த்தியாக சுயமாக இவர்களால் மேக்கப்போட முடியுமா? என்பது சந்தேகமே. தினமும் மேக்கப் செய்து விட மேக்கப் மேன் அல்லது மேக்கப் உமன்கள் அங்கே இருக்கலாம் என்பது எனது அனுமானம்.
செல்போன் இவர்கள் பயன்படுத்தி இவர்கள் நண்பர்கள், உறவினர்களிடம் பேசுவார்கள் என்றே நினைக்கிறேன்.
சவுகார் ஜானகியின் மறு அவதாரமாக ஒருவர் எப்போதும் அழுதபடி உள்ளே உலாவருகிறார். சேரன் தான் அந்த வேலையை செய்வார் என்று நினைத்திருக்க அந்த வேலையை அந்த பெண்மணி செய்கிறார்.
விஜயகுமாரின் புத்திரி வனிதா மேடம் (?!) உள்ளே போகும்போதே இது வில்லங்க கேஸ் என்று கூறினார்கள். நமது நினைப்பை ஏமாற்றாத படி வனிதா செய்யும் அலப்பறைகள்...டண்டணக்கா டணக்குணக்கா ரகம்.
தேன்னடை மதுமிதா கொஞ்சம் கலகல; பரவாயில்லையே என சொல்ல வைக்கிறார்.
இன்னொரு விஜயகாந்தாக பார்க்கப்பட்ட சரவணன், மோகன் ஆகியோர் இயல்பாக தங்கள் வேலையைப்பார்த்துக்கொண்டுள்ளனர்.
சிலர் சொன்ன சொந்த கதையைக்கேட்டேன். பெரும்பாலும் மனதை வேதனைப்படுத்தும் நிகழ்வுகள். எமோஷனலை அதிகப்படுத்தி, ஆறுதல் என்ன,பாசம் என்ன ? என்ன என போடவைத்து டிஆர்பியை எகிற வைக்கும் டெக்னிக் என நன்றாகத்தெரிகிறது.
நடந்த நிகழ்வுகளை கமலஹாசன், பாத்திமாபுவிடமும், அந்த இலங்கை செய்திவாசிப்பாளரிடமும் செய்தி பாணியில் சொல்லக்கூற இருவரும் உடனே கூறுகின்றனர். இதற்கு கண்டிப்பாக முன்னேற்பாடுகள், முன் தயாரிப்புகள் இல்லாமல் பேசவே முடியாது. ஏற்கனவே இதுபற்றி நிகழ்ச்சியினர் "கமல்ஹாசன் இப்படி கேட்பார், அதற்காக நீங்கள் தயார் செய்துகொள்ளுங்கள், அதன்படி அவர் அகம் டிவி வழியே பேசும்போது கூறுங்கள்" என கூறியிருக்கலாம் என்பதே எனது அனுமானம்.
பிக்பாசில் இயல்பாக நடப்பதாக நாம் பார்ப்பதில் 40 சதவிகிதம் உண்மை, மீதி எல்லாம் முன் கூட்டியே பேசி செட்டப் செய்து அதன்படி நடப்பதைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நான் முடிவுக்கு வந்ததால், பிக்பாசை தொடர்ந்து பார்க்கப்போவது இல்லை என்றும் எப்போதாவது பார்ப்பேன் என்றும் முடிவெடுத்துள்ளேன். இதனால் அவர்களிடன் டிஆர்பிக்கு ஒன்றும் பங்கம் வராது என்பதையும் நான் அறிவேன்.
அங்கே என்ன நடக்குது? இங்கே என்ன நடக்குது? என மக்கள் மனங்கள் தினமும் ஆலாகப்பறப்பதால்தான் தமிழகத்தில் அதிகமாக செய்திச்சேனல்கள் 24 மணிநேரமும் செய்திகளை ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன. பிரேக்கிங் நியூஸ் என்ற ஒன்று இல்லாத நாளே இல்லை. அப்படி இருக்கும்போது பெரிய திரை, சின்னத்திரை பிரபலங்களை ஒரே வீட்டில் அடைத்து வைத்து அவர்கள் அடிக்கும் லூட்டிகளைப்பார்க்காமலிருக்க மக்கள் தவறவிடுவார்களா? என்ன? பிக்பாஸ் வீட்டில் சண்டை அதிகரிக்க அதிகரிக்க..கண்ணீர் கடல் அதிகரிக்க அதிகரிக்க டிஆர்பி ஏறும். முடிவில் நம் பொன்னான நேரம்தான் வீணாகியிருக்கும்..!
(இவை எனக்குத்தோன்றியவை; உங்கள் கருத்துகளை முன்வைக்கலாம்.)
No comments:
Post a Comment