📖வாசித்தல் (படித்தல்)- ஒரு உன்னதமான செயல். ஒரு அழகான பதிவு📖
"தொழிலதிபரான அம்மாவுக்கும், பத்தாம் வகுப்பு படிக்கும் அவரின் மகளுக்கும் காரில் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.
மகள் சொன்னாள். ‘‘அம்மா, நான் பாடப் புத்தகம் படிக்கிறேன். நல்ல மார்க் வாங்குகிறேன். நல்ல மனிதப் பண்புகளை நீங்கள் சொல்லித் தருகிறீர்கள். பிறகு ஏன் வேறு கதை புத்தகமோ. கட்டுரை புத்தகமோ வாசிக்க வேண்டும்?’’
வேறு புத்தகங்களையும் படிக்க வேண்டிய அவசியத்தை தன் மகளுக்கு அந்த கார் பயணத்தில் எவ்வளவோ சொல்லிப் புரிய வைக்க முயன்றார் அம்மா. ஆனால் முடியவில்லை. வேறு வழியின்றி விவாதத்தை விட்டுவிட்டார்.
அம்மாவும் மகளும் ஆபீஸில் இறங்கி அம்மாவின் கேபினுக்குள் நுழைந்தார்கள். அங்கே வயதான பெண்மணி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
‘‘என்ன சரஸ்வதி அக்கா, ரொம்ப நேரம் நிக்கிறீங்களோ?’’ அம்மா வரவேற்றார்.
‘‘ஆமாம்மா, எனக்கு 500 ரூபாய் வேணும்!’’
‘‘இதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க? மேனேஜர்கிட்ட கேட்டு வாங்கிக்க வேண்டியதுதானே?’’
சரஸ்வதி அமைதியாக இருந்தார். அம்மா ஆயிரம் ரூபாயாகக் கொடுத்து அனுப்பினார்.
மகள் மறுபடியும் ஆரம்பித்தார். ‘‘அம்மா, இவங்க யாரு? சும்மா காசு வாங்கிட்டுப் போறாங்க. ஆபீஸ்ல கூட்டி பெருக்கிறவங்களுக்கெல்லாம் இவ்ளோ காசு ஏன் கொடுக்குறீங்க?’’
‘‘அவங்க யாருன்னா...’’
‘‘போதும்... போதும்... அவங்களைப் பத்தி ஒண்ணும் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியவும் வேண்டாம்.’’ மகள் சீறினாள்.
மற்றவர்களிடம் ஒரு தொழிலதிபராக கறாராக நடக்கும் அம்மா, இந்தப் பெண்ணிடம் மட்டும் ‘சரஸ்வதி அக்கா... சரஸ்வதி அக்கா...’ என்று கொஞ்சுவது அவளுக்குப் பிடிக்கவே இல்லை. சரஸ்வதியை அவள் வெறுக்க ஆரம்பித்தாள்.
அப்போது அவர்கள் அலுவலகத்தின் பக்கத்தில் ஒரு பாலம் கட்ட ஆரம்பித்தார்கள். அவள் பதினொன்றாம் வகுப்பு படித்து முடிக்கும்போது பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இவளுக்கு பாலத்தின் மேலே ஏற வேண்டும் என்று ஆசை வந்தது. காரிலிருந்து இறங்கி நடந்து சென்றாள்.
அப்படி ஏறும்போது, அவர்கள் அலுவலகத்தின் மொட்டை மாடி தெரிந்தது. ‘‘ஓஹோ, இதுதான் நம்ம ஆபீஸ் மொட்டை மாடியா?’’ என்று ஆச்சர்யப்பட்டவள், அதிர்ச்சியாக ஒன்றைப் பார்த்தாள். அங்கே பழைய ஷீட் போட்ட ஓர் அறை இருந்தது. அந்த அறையில் ஏழ்மை அதிகம் தெரிந்தது. அந்த அறைக்கு வெளியே சரஸ்வதி அக்கா உட்கார்ந்து கொண்டிருந்தார்.
‘சரஸ்வதி அக்கா இவ்வளவு சின்ன குடிசையிலா வாழ்றாங்க’ என்று அனுதாபம் கொண்டபடி கூர்ந்த பார்த்தாள். அங்கே சரஸ்வதி அக்கா இரண்டு சிறுமிகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார். ‘‘இதுக்குதான் அப்போ அப்போ அம்மாகிட்ட வந்து ரூபா கேப்பாங்களா’’ என்று வியக்கிறாள்.
அம்மாவைத் தேடி போகிறாள். அம்மா அங்கே ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.
‘‘அம்மா, சரஸ்வதி அக்கா நல்லவங்கம்மா!’’
‘‘அடடே, எப்படி செல்லம் கண்டுபிடிச்சே?’’
‘‘புதுசா பாலம் கட்டினாங்கல்ல. அதுல ஏறி பாக்கும்போதுதான் அவங்க ஏழ்மை தெரிஞ்சது. அந்த நிலையிலும் மத்தவங்களுக்கு உதவி செய்றது எல்லாம் தெரியுதும்மா. நான்தான் சரஸ்வதி அக்காவை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.’’
அம்மா உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு மகளைப் பார்த்தார்.
‘‘நீ பெரிய பெண்ணாகிவிட்டாய்தானே. உன்னிடம் சொல்லலாம். இளம் வயதில் காதல் வலையில் விழுந்து, திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி, அம்மா வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு தற்கொலை செய்துகொள்ளப் போனபோது என்னைக் காப்பாற்றியவர் அவர்தான்.
தன் வீட்டில் ஆறு மாதம் வைத்து பாதுகாப்பளித்து, உணவிட்டு, நீ பிறக்கும்போது உன்னையும் என்னையும் கவனித்துக் கொண்டது சரஸ்வதி அக்காதான்.
அதன்பிறகுதான் ஏற்றுமதி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து, பிறகு அதை சிறு தொழிலாகச் செய்ய ஆரம்பித்து இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறேன். நீயும் நானும் உயிரோடு இருப்பதற்குக் காரணமே சரஸ்வதி அக்காதான் செல்லம்.’’
மகள் திகைத்தாள். ‘‘சரஸ்வதி அக்காகிட்ட மன்னிப்பு கேக்கவா அம்மா?’’
‘‘வேண்டாம். அவங்களுக்கு நீ மன்னிப்பு கேட்டாலும் கேக்கலன்னாலும் ஒண்ணுதான். நான் வசதியா வாழக் கூப்பிட்டப்பவே வரலை. நம்மள மாதிரி இன்னும் பலருக்கு தொடர்ச்சியா உதவி செய்றதுதான் அவங்க இயல்பு.’’
இருவருமே நெகிழ்ந்திருந்தார்கள். காரில் அமைதியாக வீடு திரும்பினார்கள். பயணம் முடிந்து இறங்கும்போது அம்மா சொன்னார்
‘‘நீ சரஸ்வதி அக்காவை புரிஞ்சிக்கிறதுக்கு அரசாங்கம் ஒரு பாலம் கட்டித் தரவேண்டியதாப் போச்சு பாத்தியா. ஆனா எல்லா மனிதர்களும் எல்லாரையும் புரிஞ்சிக்க பாலம் கட்டிட்டே இருக்க முடியாது.
அதனாலதான் கதை, கட்டுரைன்னு புத்தகம் படிக்கணும்னு சொல்றது. புத்தகம் மூலமா சக மனிதர்களை இன்னும் ஆழமா புரிஞ்சிக்கிலாம். அன்பா பழகலாம். அதனாலதான் படிக்கணும்னு சொல்றது.’’
‘‘இனிமே படிக்கிறேன்மா’’ என்றாள் மகள்....
இந்த அவசர உலகில் வாசிப்பு எனும் உன்னதமான செயல் குறைந்து கொண்டே வருகிறது ... எந்த ஒரு நாட்டில் வாசிக்கும் பழக்கம் குறைகிறதோ அது சரிவையும் சமுதாய சீர்கேட்டையும் விரைவில் சந்திக்கும் .. இந்த சூழ்நிலையில் வாழும் நாம் யாரிடமும் எந்த ஒரு நல்ல கருத்தையும் கேட்பதற்கு கூட தயாரில்லை ..
குறைந்த பட்சம் Whatsapp பார்க்கும் போதாவது இம்மாதிரியான பதிவுகளை படித்து நம் பிள்ளைகளுக்கு நல்லனவற்றை போதிப்போம்.
No comments:
Post a Comment