Thursday 29 January 2015

திருஷ்டி பரிகாரங்கள்


கல்லடி - கண்ணடி “கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. திருஷ்டி, மனிதர்களுக்கு மட்டும் அல்ல செடி, கொடி மரங்களுக்கும் உண்டு. 
ஒரு மாந்தோப்பில் ஒரு மரத்தில் மாங்காய் கொத்து கொத்தாக காய்த்து தொங்கியது. அந்த வழியாக சென்ற ஒருவனின் பொறாமை பார்வை அதன்மீது பட்டது. ஒரு சில தினங்களிலே நன்றாக இருந்த மரம் அதன் செழிப்பை இழந்து, காய்களில் ஒருவித நோய் தாக்கி கீழே உதிர்ந்து விழுந்தன. அதே நேரத்தில் தோப்பிற்குள் இருந்த மற்ற மரங்கள் நன்றாக இருந்தன. இதைத்தான் கண் பார்வை தோஷம் என்பார்கள். கல்லால் அடித்து இருந்தால் இரண்டு, மூன்று மாங்காய்கள்தான் சேதமடைந்து இருக்கும். ஆனால் கண்ணடி பட்டதால் முழு மரத்துக்கும் சேதாரமாகி விட்டது.
ஆரத்தி, திலகம்: விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.
வாழை மரம்: விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்: வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.
உப்புக்குளியல்: வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
எலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.
கடல் நீர்: வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
திதிகள்: அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing