Saturday 7 February 2015

பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமா?....சுகன்யா சம்ரிதி திட்டம்


மோடி அரசு ஆட்சிக்கு வந்தபின் அடிக்கடி புதிய திட்டங்கள் அறிமுகமாகி வருகிறது. ஜன் தன் திட்டத்தின் மூலம் இந்தியாவில் வசிக்கும் எல்லோருக்கும் வங்கிக் கணக்கு என்கிற திட்டத்தை ஆர்வத்துடன் அமல்படுத்தியது. தற்போது, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் மகிழ்ச்சியான எதிர்காலத்துக்காக புதிதாக ஒரு வங்கிக் கணக்கை அறிமுகம் செய்துள்ளது.

யார் தொடங்க முடியும்?
பிறந்த பெண் குழந்தை முதல் 10 வயது வரையிலான பெண் குழந்தைகள் வரை யார் வேண்டுமானாலும் வங்கி அல்லது அஞ்சலகத்தில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் துவங்கி 1.5 லட்சம் ரூபாய் வரை அந்தக் குழந்தையின் பெயரில் சேமிக்கலாம். இப்படி 14 ஆண்டுகள் வரை இந்தக் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும்.
இந்தக் கணக்கை துவங்கியபின் அந்தக் குழந்தையின் 18வது வயது வரை கணக்கில் செலுத்தியுள்ள பணத்தை எடுக்க முடியாது. அதன்பின் 50 சதவிகிதம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும். இந்தக் கணக்கு 21 வருடங்கள் வரை செயல்பாட்டில் இருக்கும். ஒருவேளை இடையே திருமணம் நடந்தால், அந்த வருடத்தோடு இந்தக் கணக்கு முடிந்துவிடும்.அதற்குப்பின் இந்தக் கணக்கைத் தொடர முடியாது. 21 வருடங்கள் கழித்து மீதமுள்ள தொகையையும் அதற்கான ஆண்டுக் கூட்டு வட்டியையும் பெறலாம்.

ஒரு பெண் குழந்தைக்கு அதிகபட்சமாக 10 வயதில் இந்தக் கணக்கைத் துவங்கினால் 31 வயது வரை அதன் கல்வி, திருமணம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் உதவும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதிக்கு அரசு 9.1 சதவிகித கூட்டு வட்டியை யும், முதலீட்டில் வருமான வரி விலக்கும் அளித்துள்ளது.

இதனால் இனி பெண் குழந்தைகள் கல்விக்கும், திருமணத்துக்கும் பணம் ஒரு தடையாக இருக்காது என்று அரசு கூறியுள்ளது. உதாரணமாக, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் இந்தத் திட்டத்தில் கணக்கைத் துவங்கி, ஆண்டுக்கு 50,000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால், வருடத்துக்கு 9.1 சதவிகிதம் வட்டி என்ற கணக்கின்படி 21 வருடங் கள் கழித்து, சுமார் 28.3 லட்சம் ரூபாய் கிடைக்கும். இது அந்தக் குழந்தையின் திருமணத்துக்கு உதவியாக இருக்கும். ஒருவேளை 18வது வயதில் எடுத்தால், ரூ.20 லட்சம் கிடைக்கும். இதில் பாதி தொகை அந்தக் குழந்தையின் கல்விக்குப் பயன்படும்விதமாக அமையும். மீதித் தொகை கணக்கு ஆரம்பித்து 21 வருடம் முடியும்போது கொடுக்கப்படும்.  

சாத்தியமாகுமா?
இந்தத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள 9.1 சதவிகித வட்டி என்பது, ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். இந்த நிலையில் 9.1 சதவிகிதத்துக்கும் குறைவான வட்டி விகிதம் கிடைத்தால் இது பயனளிக்குமா என்பது முக்கியமான கேள்வி.
10 வயது பெண் குழந்தை இந்தக் கணக்கை துவங்கினால், 26 வயதில் திருமணம் செய்ய நினைக்கும்போது வெறும் 16 வருடத்தில்
50 சதவிகித பணம்தான் கிடைக்கும் எனில், அதை வைத்து எப்படி திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியும்? 10 வயதில் துவங்கினால் 14 வருடங்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற கணக்கின்படி பார்த்தால், 24 வயது வரை பணம் செலுத்த வேண்டும். ஒருவேளை அடிப்படைத் திருமண வயது 21 எனக் கொண்டால், இது முழுமையான பலனை அளிக்குமா என்கிற கேள்விகள் எழவே செய்கின்றன. மேலும் இந்தத் திட்டம் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு மட்டுமே உதவக்கூடியதாக இருக்கும். ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் போடுவதன் மூலம் அதிக வருமானம் பெற முடியும்.


எப்படியோ இந்தத் திட்டம் பெண் கல்விக்கும், பெண்கள் மேம்பாட்டுக்கும் ஓர் ஆரம்பமாக இருக்கும் என்பதால், தாராளமாக வரவேற்கலாம்!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing