Saturday, 7 February 2015

அலைபேசி நாகரிகத்தை அறிந்துகொள்ளுங்கள்

டேய் எங்க இருக்குற?”- இன்றைய தினங்களில் மிக அதிகமான அலைபேசி அழைப்புகளில் கேட்கப்படுகின்ற கேள்வி இதுதான்!

ஹலோ! நான் இன்னார், இங்கிருந்து பேசுகிறேன், இன்னாருடன் பேச வேண்டும், நலமா? என்பது போன்ற வார்த்தைகள் (சம்பிரதாயத்துக்குக்கூட) அரிதாகிவிட்டது. முந்தைய தலைமுறையின் தொலைபேசி நாகரிகம், இந்த தலைமுறையின் அலைபேசியில் இருகிறதா என்றால் சந்தேகமே...

அலைபேசி எண், உங்கள் நண்பருடயதுதான். ஆனால், அழைப்பைப் பெறுபவர் உங்கள் நண்பராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக நான் எப்போது யாரிடம் அலைபேசினாலும், என் பெயரைச் சொல்வதுண்டு (பெற்றவர்களிடம் கொஞ்சம் குறும்புடன்...) “அதான் போன்லயே காட்டுதே, சொல்லுங்க” என்பார்கள். அழைப்பைப் பெறுபவரை உறுதி செய்ய வேண்டாமா?. அப்போதும் சில கேரக்டர்கள் தங்கள் பெயரைச் சொல்வதில்லை, குரலை வைத்து அடையாளம் கண்டால்தான் உண்டு. இன்னும் சிலர், நான் என் பெயரைச் சொன்னாலும் அதை சட்டை செய்வதில்லை.

எனக்கும் என் அப்பாவுக்கும் ஒரே குரலமைப்பு. பல சமயங்களில் நான் அலைபேசியை எடுத்து பதில் சொல்ல நேரிடும். அப்போதுகூட நான் அவரது மகன் பேசுகிறேன் என்பேன். ஆனால், கடைசியில்தான் என்னை சொல்லவிடுவார்கள். (அது வரையில் நாம் காத்திருக்க வேண்டும்).

பல சமயங்களில், “எங்க இருக்குற?” என்ற கேள்வி என்னை எரிச்சலூட்டும். பொதுவாகவே, நான் எல்லா அழைப்பையும் பேச நினைப்பவன். தவறுவது நம்முடைய வாய்ப்பாகக்கூட இருக்கலாம். தவறினாலும் மீண்டும் அழைத்து கேட்டுவிடுவேன். அழைப்பை எப்போதும் தவறவிடாது எடுப்பவனை, வேலை இல்லாதவன், இளிச்சவாயன் மற்றும் சில பல நல்ல பட்டங்களை தருவதேன்? என்னுடைய தேவைக்காக மட்டுமல்லாமல், உங்களுடைய வேலைகளுக்கும் நான் தேவையாக இருந்திருக்கலாம். அதை எல்லாம் வேலை பளுவாக கருதாமல், உதவி செய்ய வாய்ப்பு என்று நினைத்ததால் கிடைத்த பட்டமா?

இரண்டு அல்லது மூன்று முறை அழைப்பை எடுக்காமல் விட்டு (சும்மாவே வேலை இல்லாமல் இருக்கும் கேரக்டர்கள் மட்டுமே...) பின்னர் பேசுவதால் நீங்கள் என்றும் உயர்ந்தவராகி விட முடியாது. மற்றவர்களுக்காக வாழும் வாழ்வே உங்களை உயர்த்துமே தவிர, அலைபேசியில் காட்டும் பகட்டால் அல்ல.

பலமுறை என்னை “எங்க இருக்குற?” என்று கேட்டுவிட்டு, ''அங்கேயே இரு... ரெண்டே நிமிஷத்துல அங்கே இருப்பேன்” என்று சொல்லி, இரண்டு மணி நேரம் கழித்து, ஏதோ ஒரு நொண்டி சாக்கு சொல்பவர்களை என்ன சொல்வது? நானாகவே நடந்தே சென்று வேலையை முடித்திருப்பேன். இன்னொரு நண்பர் 50 கி.மீ முன்பிருந்தே “இதோ அஞ்சே நிமிசம்” என்பர், அது எந்த அஞ்சு நிமிசம் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

என்னை போலவே பல நல்ல கேரக்டர்களால் எரிச்சலுற்ற, என் நண்பரிடம் அலைபேசிய இன்னொருவர் “எங்கிருக்குற?” என கேட்க, இரண்டு காதிலும் ரத்தம் வருமளவுக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டார். 'மந்திரப் புன்னகை' படத்தில், டைரக்டர் கரு.பழனியப்பன் சொல்வாரே... மியூட் செய்யப்பட்ட வார்த்தைகள் அதேதான்...
எனக்கு நீண்ட நாட்களாகவே சந்தேகம். என் நண்பர் அந்தப் படம் வெளிவருவதற்கு சுமார் ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே அந்த கெட்ட வார்த்தையைச் சொல்லி வந்தார். பின்னர், படத்திலும் அதே வார்த்தை, மாற்றமே இல்லை. ஆச்சர்யம். ஒருவேளை கரு.பழனியப்பனுக்கும் இதேபோல நண்பர்களால் பி.பி. எகிறி இருக்கலாம்!

பல நேரங்களில் என்னுடைய அழைப்பை எடுக்காதவர்களின் (தோழிகளுடன் கடலை) அழைப்பைக்கூட, சில டிராஃபிக் போலீஸைத் தாண்டி, வண்டியை ஓரங்கட்டி, 'ஏதோ அவசரம் போல' என்று நினைத்து எடுத்தால், ''மச்சி... அரை பாக்கெட் சிகரெட்” என்பார்கள். அப்போது வரும் கோவத்துக்கு...

எதிர்முனையில் இருப்பவர், எங்கே, எப்படி, எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை பற்றி எல்லாம் சிறிதும் யோசிக்காமல் அலைபேசும் நண்பர்களே, எதிராளியின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பேசுங்கள். இல்லையேல், கரு.பழனியப்பனின் மியூட் செய்யப்பட்ட வார்த்தைகள் லவுடு ஸ்பீக்கரில் ஒலிக்கும்!    
 
via:http://news.vikatan.com  

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing