மந்திரங்களுக்கு எல்லாம் தாய் என்று சொல்லப்படுவது காயத்ரி மந்திரம். இந்த மந்திரத்திற்குரிய தேவி ஸ்ரீ காயத்ரி தேவி. கிருஷ்ண பரமாத்மா கூட 'மந்திரங்களில் நான் காயத்ரியாவேன்' என்கிறார்.
இந்த மந்திரத்தை நெஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து, காலையில் கிழக்கு முகமாகவும், நண்பகலில் வடக்கு அல்லது கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி ஜெபிக்க வேண்டும்.
பிரணவ வேதத்தின்படி, இந்த பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த பரப்பிரம்மத்தின் தேவியே காயத்ரி. அவளுக்கு அகிலாண்டேசுவரி என்ற பெயரும் உண்டு.
காயத்ரி எப்படிப்பட்ட உருவ அமைப்பு கொண்டவள்?
முத்து, பவளம், தங்கம், கறுப்பு, வெண்மை ஆகிய 5 வண்ணங்களில் 5 திருமுகங்களை கொண்டவள்… ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களை பெற்றவள்… சந்திரக் கலையை நவரத்தினத் திருமுடியில் அணிந்தவள். தத்துவார்த்தமான 24 எழுத்து வடிவானவள். வரதம், அபயம், கபாலம், அங்குசம், பாசம், சங்கு, சக்கரம், இரு செந்தாமரை, கதாயுதம் போன்றவற்றைக் கரங்களில் ஏந்தியவள். ஒளிமிக்க மகர குண்டலங்களை அணிந்தவள்… ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய 5 சக்திகளைக் கொண்டவள் என்று காயத்ரிதேவியைப் பற்றி அழகாக குறிப்பிடுகிறது வேதம்.
காயத்ரி மந்திரம்
ஓம் பூர் புவஸ்வ:
தத் ஸ விதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி:
தியோயோந: பிரசோதயாத்
"யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானம் செய்வோமாக'' என்பது இதன் பொருள்.
"ஓம்" என்கிற பிரணவ ஒலிதான் உலகில் முதலில் தோன்றியது. அந்த பிரணவ ஒலியுடன் தோன்றிய ஒளியே சூரியன்.
உலகில் அணுசக்தி முதலான அனைத்திற்கும் மூல சக்தி சூரியனே ஆகும். காயத்ரிதேவிதான் சூரியனுக்கு அந்த சக்தியை தந்தவள். எனவே தான் சூரியனை மூலப்படுத்தி காயத்ரி மந்திரம் சொல்லப்பட்டுள்ளது.
இந்த மந்திரத்தை தினமும் சொல்வதால் இறை சிந்தனையோடு நம் நினைவாற்றலும் பெருகுகிறது. அத்துடன் ஆன்மிக ரீதியாக கலைமகள் அருளும், திருமகள் அருளும் நமக்கு ஒருசேரக் கிடைக்கிறது. மொத்தத்தில் மனம் ஒரு கோவிலாகி பேரின்ப பெருவாழ்வை அடையலாம்.
No comments:
Post a Comment