Thursday 18 August 2016

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை



சொன்னதும் சொல்லாததும்
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை, முந்தைய இரண்டு ஆண்டின் உரைகளையும்போல உணர்ச்சிகரமாகவும், கவர்ச்சிகரமாகவும் இல்லாதது போன்ற ஒரு தோற்றம் காணப்பட்டால், அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன என்பது உரையைப் படித்துப் பார்த்தால்தான் புலப்படும்.
கடந்த ஆட்சிக்கும், கடந்த இரண்டு ஆண்டுகளே அதிகாரத்தில் இருக்கும் தனது அரசுக்கும் இடையிலான செயல்பாடு மாற்றத்தைப் புள்ளிவிவரங்களுடன் பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். கடந்த 60 ஆண்டுகளில் வெறும் 14 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே எரிவாயு இணைப்பு உருளை வழங்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அறுபதே வாரங்களில் நான்கு கோடி பேருக்கு எரியாவு இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்கிற சாதனை பாராட்டுக்குரியது.

கடந்த ஆட்சியில் நாளென்றுக்கு 70 முதல் 75 கி.மீ. மட்டுமே கிராமப்புறச் சாலைகள் அமைக்கப்பட்ட நிலைமை மாறி இப்போது நாளொன்றுக்கு 100 கி.மீ. என்று முடுக்கிவிடப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரிய செயல்பாடு. மின்சார இணைப்பில்லாத 18,000 இந்திய கிராமங்களில் 10,000 கிராமங்கள் கடந்த இரண்டாண்டுகளில் மின்சார வசதி பெற்றிருப்பதும் சாதனைதான். இதுபோல, தனது அரசின் இரண்டாண்டு சாதனைகள் பலவற்றை நரேந்திர மோடி பட்டியலிட்டது அலுப்புத் தட்டுவதுபோல இருந்தாலும், அவற்றைப் புறந்தள்ளிவிட முடியாது.
பிரதமரது சுதந்திர தின உரையில், கடந்த சில மாதங்களாக நாடு தழுவிய அளவில் ஆங்காங்கே வெடித்துக் கிளம்பும் சமூகக் கலவரங்கள் குறித்தும், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக முடுக்கிவிடப்படும் வன்முறைகள் குறித்தும் கவலை தெரிவித்தது, எதிர்பார்த்ததுதான். "வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் மிகப்பெரிய பலம். இதை அடைய சமூக நீதிதான் அடிப்படையாக இருக்க முடியும். பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய ஒற்றுமையும் மிக மிக அவசியம். இந்தியாவில் 127 கோடி மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்' என்று செங்கோட்டையிலிருந்து பாரதப் பிரதமர் முழங்கியபோது, அது வழக்கமான கைதட்டல் பேச்சாகத்தான் தோன்றியது.
"அண்ணல் காந்தியடிகள், பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வலி
யுறுத்தியிருப்பதை உணர்ந்து நாம் நடந்து கொள்ள வேண்டும்' என்று கூறிய பிரதமர், காலகாலமாக நிலவிவரும் ஜாதியத்தையும், தீண்டாமையையும் எதிர்கொள்ளக் கடுமையான, அதே நேரத்தில் உளப்பூர்வமான நடவடிக்கைகள் தேவை என்பதை வலியுறுத்தினார். ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி கொண்டாடப்படும் நேரத்தில், பிரதமர் அவரை நினைவுகூர்ந்ததும், ஸ்ரீ ராமானுஜர் எப்படி சமூக நல்லிணக்கத்திற்கு வழிகோலினார் என்பதைச் சுட்டிக்காட்டியதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
சிறிது நாள்களுக்கு முன்னால் தான், பசு நேசர்கள் தேசத்துரோகிகள் என்று குற்றம்சாட்டியிருந்ததாலோ என்னவோ, பட்டியலின மக்களுக்கு எதிரானத் தாக்குதல் குறித்தும், மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சை குறித்தும் பிரதமர் எதுவும் பேசாமல் விட்டுவிட்டார். நியாயமாகப் பார்த்தால், அந்தப் பிரச்னைகள் குறித்த தனது கருத்துகளைப் பிரதமர் நரேந்திர மோடி இந்த சுதந்திர தின உரையிலல்லவா அதிகாரபூர்வமாக அறிவித்திருக்க வேண்டும்?
பிரதமர் நரேந்திர மோடி 70-ஆவது இந்திய சுதந்திர தினத்தின்போது ஆற்றியிருக்கும் உரை, அதில் ராஜதந்திரத்துடன் பூடகமாக வெளிப்படுத்தி இருக்கும் கருத்துகளுக்காக நினைவுகூரப்படும். தனது உரையின் இறுதியில், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் குழந்தைகள் பலியானபோது கண்ணீர் வடித்த இந்தியாவுக்கும், இந்தியாவில் உள்ள பயங்கரவாதிகளை விடுதலைப் போராளிகளாக சித்தரிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான வேறுபாட்டை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு பிரதமர் ஆற்றிய உரையில் மிக முக்கியமான இரண்டு கருத்துகள், பலூசிஸ்தான் பற்றியதும், பாகிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்கிற உரிமைக் குரலும். அதேபோல, லடாக்கை ஒட்டியுள்ள, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஜில்கிட், பால்டிஸ்தான் பகுதிகள் இந்தியாவுக்கு சொந்தமானவை என்பதையும் சற்று ஆணித்தரமாகவே பாகிஸ்தானுக்கு உணர்த்த முற்பட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இது, இதற்கு முன்னால் எந்தப் பிரதமரும் துணிந்து வெளிப்படையாக தனது சுதந்திர தின உரையில் சொல்லாத உரிமை கோஷங்கள்.
1947-இல் பலூசிஸ்தான் அரசரான கலாத்கான், பாகிஸ்தானுடன் இணைய மறுத்தார். பலவந்தமாக ராணுவ ஆக்கிரமிப்பு நடத்தி பலூசிஸ்தானைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது பாகிஸ்தான். 1973-இல் பலூச்சி மாணவர் அமைப்பும், மார்க்சிஸ்ட் பலூச்சி விடுதலை முன்னணியும் கொரில்லா யுத்தம் நடத்தி பலூசிஸ்தானின் விடுதலைக்கு முயன்றபோது, பாகிஸ்தான் ராணுவம் ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்து அந்தப் புரட்சியை அடக்கியது. இப்போதும் பலூசிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கின்றன. காஷ்மீரில் பாகிஸ்தான் செய்வதுபோல, இந்தியா அந்தப் புரட்சியாளர்களுக்கு உதவுவதில்லை. இதேதான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் நிலைமை.
காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்குத் தொடர்ந்து உதவினால், ஆக்கிரமிப்புக் காஷ்மீரை மீட்கவும், பலூசிஸ்தான் பிரிவினைவாதிகளை ஆதரிக்கவும் இந்தியா தயங்காது என்பதுதான், பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை பாகிஸ்தானுக்கு மறைமுகமாக விடுத்திருக்கும் எச்சரிக்கை.
-நன்றி தினமணி...

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing