Wednesday, 1 February 2017

முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்

ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.

அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.

“இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார்.

மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.

“இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றாள்.

கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.

அதே பையில் போட்டுக் குலுக்கினார்.

அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.

ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.

“இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?” கேட்டாள் மனைவி.

கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.

பையை மேலும் குலுக்கினார்.

கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.

“இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?
என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.

“வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை.

வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.

கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.

முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்.

அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.

ஆனால், உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.

நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்...

நல்லதையே செய்வோம்... நல்லோராய் வாழ்வோம்...!!!

*நல்லனவற்றை பகிர்வோம்!*

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing