Tuesday, 16 May 2017

ஓஷோவின் பாதை – ஒரு விளக்கம்

ஓஷோவின் பாதை – ஒரு விளக்கம்
“ஞானமடைய புதுப் பாதை” என்ற என் விளக்கத்தில் ஓஷோவின் பாதை பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சிலர் என்னிடம் கூறினார்கள். ஆகவே அது பற்றி விளக்கமாக இப்போது எழுதுகிறேன்.
ஓஷோ தனது பேச்சுகளில், “ஜோர்பா என்கிற புத்தா’, “கரைந்து அனுபவி”, “கணத்திற்கு கணம் வாழு”, “விழிப்புணர்வோடு வாழு” “இந்த உடலே புத்தர் இந்த பூமியே சொர்க்கம்”, “கிழக்கும் மேற்கும் இணைந்த வழி என் வழி”, “பொருளுலகோடு கூடிய ஆன்மீகமே என் வழி”, என்று பலவிதமாக தனது வழியைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது ஓஷோ வரையிலிருந்த மதங்களும் ஆன்மீக இயக்கங்களும் ஒருதலைபட்சமான போக்கைக் கடைபிடித்தன. அவை உலகியலுக்கும், சந்தோஷமான வாழ்விற்கும், புலனின்பங்களுக்கும், பெண்களுக்கும், செல்வத்திற்கும் எதிராக இருந்தன. இதனால் ஒருபுறம் உலகமும், மனமும் துண்டிக்கப்பட்டு மக்கள் இயல்பிழந்து வறுமையடைய நேர்ந்தது. மற்றொரு புறம் உலகியலில் ஈடுபட்டவர்கள் உள்உணர்விழந்தவர்களாய் மாற நேர்ந்தது. இப்படி வெறும் மனதில் மட்டுமே வாழ்கையில், திசை தெரியாத பயணமாய், மனதின் முடிவற்ற ஓட்டத்தில் மக்களிடையே போலித்தனமும், குற்றவுணர்வும் மிகுந்ததால் உணர்வுமயமான வாழ்க்கை போய் இயந்திரத்தனமான, பரபரப்பான, வேகமான,  வியாபாரத்தனமான, படபடப்பான வாழ்க்கையில் எல்லோரும் சிக்கிவிட்டனர்.
இதையெல்லாம் பார்த்த ஓஷோ, தான் ஞானமடைந்ததோடு நில்லாமல் அதன்பின்னர் இன்றைய மனிதனின் சிக்கல்களை, மன நோய்களைப் புரிந்து கொள்ள, அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளைத் தெரிந்துகொள்ள, கல்லூரி சென்று தத்துவப்படிப்பு படிக்கிறார். ஓயாத ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். மனிதர்களை சோதிக்கிறார்.
ஓஷோவின் புத்தக அறையில் அவர் படித்து குறிப்பெடுத்து கையொப்பமிட்டு வைத்துள்ள புத்தகங்கள் மட்டும் 96000த்துக்கு மேல் உள்ளன. ஆகவே இன்றைய மனிதன் குறித்து ஏராளமாகத் தெரிந்து கொண்டார்.
அதோடு அவர்காலத்தின் அரசியல்வாதிகள், மதவாதிகள், கம்யூனிஸ்டுகள், காந்தீயவாதிகள் இப்படி எல்லா தரப்பினரோடும் விவாதத்தில் கலந்துகொண்டார். ஏராளமான கூட்டங்கள், மாநாடுகளில் பங்கேற்றார்.
சூபி, ஸென், தாவோ, ஹசிட், பவுல், தந்த்ரா, யோகா, புத்தா, ஜெயின், பார்சி, கிறித்துவம், உபநிஷத் இப்படி உலகின் எல்லா ஆன்மீக வழிகளையும் பயின்று பார்த்து அவைகளின் குறை, நிறைகளை அறிந்தார்.
லாவோட் ஸூ, சாங் டஸூ போன்ற தாவோ ஞானிகள், நான்சென், பாஷோ, ரின்சாய், ஈசான், யாகூசான் போன்ற ஏராளமான ஜென் ஞானிகள், ஹெராக்ளடீஸ், சாக்ரடீஸ், பித்தகோரஸ், டயோஜினிஸ், சனாய், ரூமி, ஜரதூஸ்ட்ரா, கலீல் கிப்ரான், ஜார்ஜ் குருட்ஜிப், சோஸன் போன்ற பல மக்கள் அறியாத ஞானிகள், மீரா, கபீர், நானக், சரஹா, சங்கரர், சிவா, கிருஷ்ணா, பதஞ்சலி, நாரதர், தயா, கோரக், சகஜா, மகாவீரர், கெளதமபுத்தர், ராமகிருஷ்ணா, ரமணா, ஜெ. கிருஷ்ணமூர்த்தி போன்ற இந்திய ஞானிகள் கூறிய முறைகளையெல்லாம் ஆராய்ந்தார்.
டெசிடெரட்டா, பதஞ்சலி யோக சூத்திரம், செயிண்ட் தாமஸின் டெஸ்டமெண்ட், பைபிள், விஞ்ஞான பைரவ் தந்த்ரா, பஜ கோவிந்தம், நாரதரின் பக்தி சூத்திரம், உபநிஷத்துக்கள், நானக்கின் கிரந்த் சாகிப், கிருஷ்ணரின் பகவத் கீதை, மகாவீரரின் ஜின் சூத்ரா, கெளதமபுத்தரின் தம்மபதம், சூபி மொழிகள், குரான் போன்ற எல்லா நூல்களையும் கற்றார்.
மேற்கத்திய தத்துவமேதைகளான கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் பிராய்ட், கார்ல் குஸ்தாத் ஜங், பெர்ணான்ட் ரசல், பிரடரிக் நீட்சே, ஆர்தர் கோய்ஸ்லர், ஹீகல், எஞ்சின் ஹரிகள், இம்மானுவேல் காண்ட், மார்ட்டின் ஹெய்டிகர் போன்றவர்களின் புத்தகங்களையும் ஆராய்ந்தார்.
இலக்கிய மேதைகளான கலீல் கிப்ரான், மைக்கேல் மெய்மி, லியோ டால்ஸ்டாய், இரவீந்தரநாத் தாகூர், ரிச்சர்ட் பக், மார்க்சிம் கார்க்கி, தாஸ்தோவஸ்கி, போன்ற பல்வேறு இலக்கியவாதிகளின் புத்தகங்களையும் பயின்றார்.
பின்னர் இன்றைய மனிதனின் நிலையை நன்கு உணர்ந்து இந்த உலகத்தின், மனிதனின் பிளவை, பாகுபாட்டை போக்கினால்தான், போக்கும் வழியாக ஆன்மீகம் இருந்தால்தான், மனிதனுக்கும், உலகிற்கும் எதிர்காலம் இருக்கிறது என்று கண்டுணர்ந்தார்.
ஆகவே அவருடைய வழியை வாழ்க்கைக்கு எதிராக இல்லாததாக உருவாக்க முயன்றார்.
எல்லா ஞானிகள், எல்லா சிறந்த மதநூல்கள் சொல்வதையும் புதிய அணுகுமுறையோடு, புதிய வழியில் பயன்படுத்த வேண்டும் என திட்டமிட்டார்.
நான் முன்கூறியுள்ள எல்லா ஞானிகள், எல்லா புத்தகங்கள் பேரிலும் ஓஷோ பேசியுள்ளார். அவைகளை எவ்வாறு புது முறையில் அணுக வேண்டும் என்று தெளிவுபடுத்தினார். 30000 கேள்விகளுக்கு மேல் பதில் கூறியுள்ளார். அவரது பல்லாயிரம் சொற்பொழிவுகள் இன்று கேசட்டுகள், சிடி க்கள், வீடியோக்கள் என கிடைக்கின்றன. 650 க்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளியிடப் பட்டுள்ளன.
அவரது முறையை இப்போது ஆழமாகப் பார்க்கலாம்.
அதற்கு முதலில் மனிதனின் இயல்பு நிலையையும், இன்றைய நிலையையும் புரிந்துகொள்வோம்.
மனிதன் மிருகத்திடமிருந்து வளர்ந்து வந்தவன். அவன் பிறக்கையில் உள்ள உணர்வுகள் மிருக உணர்வுகளே. ஆனால் மனிதனை மிருகத்திலிருந்து வேறு படுத்துவது அவனது தன்னைத்தானே உணரக்கூடிய உணர்வு. இந்த தன்னுணர்வு மிருகங்களிடம் இல்லை. மிருகங்கள் வரை மனம் உள்பட எல்லாம் இருக்கிறது. தன்னுணர்வு மனிதனின் தனிச்சிறப்பாக உள்ளது. இந்த தன்னுணர்வோடு சாத்தியத்தோடு பிறக்கும் மனிதக் குழந்தை மிருக உணர்வுகளோடு பிறந்தாலும், பிறந்த கணத்திலிருந்தே மனித உணர்வு என்ற ஒன்றை பெற ஆரம்பிக்கிறது. தன்னுணர்வின் விளைவு இந்த மனித குணங்கள். அன்பு, இரக்கம், கருணை, படைப்பாற்றல், நிறைவு, ஆனந்தம், இசை, கலை போன்ற உணர்வுகள், பகுத்தறிவு, விஞ்ஞானம், திட்டமிடல், மொழி, கற்பனை போன்ற வல்லமைகள், மனிதனின் தனிச்சொத்து. அவனது தன்ணுணர்வின் விளைவு.
அதே சமயம் தன்னுணர்வின் விளைவாக ஒவ்வொரு மனிதனுக்கும் தனித் தனி மனம் உருவாகி விடுகிறது. இதனால் நான் என்ற  மனதின் எண்ண ஓட்டமும், அதையொட்டி மற்ற பிடிப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன.
இந்த “மனம்” என்பது “நான்” எனும் கற்பனையைச் சார்ந்தெழுந்துள்ள பல்வேறு விதமான (உள், வெளி) பிடிப்புகளைச் சுற்றியெழும் உணர்ச்சிகளும்(Emotion) எண்ணங்களும் (Thoughts) ஆன சுழலாக நடக்கும் இயக்கமே. ஆகவே மனம் என தனியாக ஒன்று இல்லை. அது ஒரு இயக்கம்தான்.
மனிதனின் சிறிதளவே உள்ள தன்னுணர்வும், அதனால் அவனுக்கு மட்டுமே சாத்தியப்பட்ட பகுத்தறிவு, புத்திசாலித்தனம், அன்பு, படைப்பு, தியானம் போன்ற உயரிய குணங்களும் இந்த மனச் சுழலில் சிக்கி சிதறுண்டு போகின்றன. மேலும் பதிலாக தவறான குணங்களாக – வியாபாரம், அரசியல், அடிமைப்படுத்தல், சுரண்டல், துரோகம் போன்று — மனித நிலை விலங்கினும் கீழாய் மாறியுள்ளது.
விலங்கு குணங்களான பொறாமை, கோபம், பேராசை, காமம், பாதுகாப்பு, தந்திரம் போன்றவற்றிலிருந்து மனித குணங்களுக்கு உயரும் சாத்தியம் மனிதனுக்கு அவனது தன்னுணர்வால் இருக்கிறது. ஆனால் மனிதன் மனத்தின் சுழலில் மேலும், மேலும் சிக்குண்டு அந்த சுழலையே வேகப்படுத்தி வருகிறான். அதனால் ஏற்பட்ட தவறான குணங்களின் ஆளுமையிலேயே ஆழ்ந்து அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறான். படைப்பாற்றலும், விஞ்ஞானமும், கலையும் இன்று தவறாகவே பயன்படுத்தப் படுகின்றன.
மனதை வளர்க்காமல், பிடிப்புகளைக் கொடுக்காமல் நிகழ்காலத்தை உணர்ந்து கொண்டாட குழந்தைகளை நாம் அனுமதித்தால், அதற்கு நாம் உதவி செய்தால், இயற்கையிருப்பிலேயே தனது தன்னுணர்வுடன் ஒரு குழந்தை வாழ ஆரம்பிக்கும். அப்படி வாழும்போது அதன் தொடர்ச்சியாய் பகுத்தறிவும், புத்திசாலித்தனமும், அன்பும், படைப்பாற்றலும், விஞ்ஞானமும், தியானமும் பெருகி ஜோர்புத்தாக்களாக அவர்கள் மலர்வர். உள்உணர்வும் பகுத்தறிவும் இணைந்தவர்களாக அவர்கள் மலர்வர். ஆன்மாவும் அறிவும் உள்ளவர்களாய் திகழ்வர். மனமற்று கரைந்து வாழ்வை அனுபவிப்பர். இப்படி வாழ்தலின் வெளிப்பாடாக ஞான அனுபவம் தானே கிட்டும்.
சரி, ஆனால் இன்று தவறாக வளர்ந்து நிற்கும், பிளவுபட்டு, இயந்திரமாகி, மனதின் சூழலில் சிக்கித் தடுமாறும் மனிதனுக்கு என்ன வழி என்று ஓஷோ ஆராய்ந்து கொடுக்கிறார். அவரது வழிக்கு இரண்டு பரிமாணங்கள் உள்ளன.
1. தன்னுணர்வோடு வாழ்தல்
2. ஏதாவது ஒரு தியான யுக்தியை கடைபிடித்தல்
இதில் “தன்னுணர்வோடு வாழ்தல்” என்பதை ஓஷோ
சொல்லும்போது “கிடைக்கும் வாழ்க்கையை, வாய்ப்பை, தன்னுணர்வோடு, மனித குணங்களோடு, முழுமையாக வாழு” என்று சொல்கிறார். “இதயத்திலிருந்து வாழு” “கணத்திற்குக் கணம் வாழு” “கரைந்து அனுபவி” “சுய மரியாதையோடு வாழு” “உன்னை முழுமையாக ஏற்றுக்கொள்” “உனக்கு உண்மையாக இரு” “மிருக குணங்களை அழுத்தி வைக்காதே, வாழ்ந்து கடந்துசெல்” “எந்த செயலையும் உணர்வின்றி செய்யாதே” “குற்ற உணர்வு கொள்ளாதே” “தவறு செய்வதே வளரும் வழி” “வாழ்வே இருக்கும் ஒரே கடவுள்” “உனக்காக வாழு” “உன் தனித்தன்மைப் படி வாழு” “எல்லாவற்றையும் கொண்டாடு” “இறப்பு என்பது வாழ்வின் உச்சக் கட்ட அனுபவமே” “நம்பிக்கையில் வாழாமல் நடைமுறையில் வாழு” “கேள்வி கேள்” “அடிமையாய் இருக்காதே” “எதையும் நம்பாதே என்னையும் சேர்த்து” “குழந்தையாக அல்ல, குழந்தை போல மாறு” “எதையும் அமுக்கி வைக்காதே” “தனி மனித சுதந்திரமே வளர்ச்சிக்கு வழி” “தன்னுணர்வோடு அனுபவி” இப்படிப் பலவாறாக தன்னுணர்வோடு கணத்துக்குக் கணம் வாழ்வதை வலியுறுத்துகிறார்.
அடுத்து அப்படி வாழ, வாழ்வு மாற, மலர, உதவியாக ஏதாவது ஒரு தியான யுக்தியை கடைபிடிக்கச் சொல்கிறார்.
ஏனெனில் தியானம் யுக்தியை செய்கையில் மனம் கடந்து செல்லும் நிலை, ‘தியான நிலை’ அல்லது ‘தன்னுணர்வாய் இருக்கும் நிலை’ அனுபவம் கணநேரமாவது நிகழ வாய்ப்புள்ளது. அந்த தன்னுணர்வு நிலையின் மற்றொரு பரிமாணம்தான் “சாட்சி பாவம்”. ஆகவே தன்னுணர்வு நிலையை “சாட்சிபாவ நிலை” என்றும் சொல்லலாம். இந்த அனுபவம் கண்டிப்பாக பெறக்கூடிய தியான யுக்திகளை வடிவமைத்து வழங்கியிருப்பது அவரது தனிச்சிறப்பாகும்.
இந்த அனுபவம் நமது மனதின் ஓட்டத்தை குறைக்கும். உணர்வை அதிகரிக்கும். ஆகவே வாழ்வு ஜோர்புத்தாவாக மலர ஆரம்பிக்கும். நீ இயல்பான மனிதனாக, தன்ணுணர்வை இழக்காமல் வாழ்பவனாக, தன்ணுணர்வால் பிறந்த உயர்ந்த மனித குணங்களோடு வாழ்பவனாக மாற ஆரம்பிப்பாய். உனது வியாபாரத்தனமும், போலித்தனமும், அடிமைத்தனமும் குறைய ஆரம்பிக்கும். மேலும் தியான யுக்திகள் மருந்து போன்றவை. உனது நோய் குணமானவுடன், நீ உனது வாழ்வை முழு தன்னுணர்வோடு வாழ ஆரம்பித்துவிட்டால் தியான யுக்திகள் தேவையில்லை. தியான நிலைக்குள் நழுவிச் செல்வதற்கு நீ தெரிந்து கொண்டு விடுவாய். ஒவ்வொருவரும் அவரவருக்கான வழியை கண்டுபிடித்துக் கொள்வர். வாழ்வும் தியானமும் ஒன்றாகி விடும். தனியாக தியான யுக்தியை பயிற்சி செய்வது நின்றுவிடும் என்கிறார்.
ஓஷோவை எல்லோரும் புரிந்து, அவரது யுக்திகளைப் பயின்று பயனுற வேண்டும், அதற்கு எளிய வழியில் உதவ வேண்டும், என்பதற்காக எழுதும் இது, எனது நன்றிணர்விலிருந்தும், ஆனந்தத்திலிருந்தும் வெளிப்பட்டதேயன்றி  வேறேதுவும் அல்ல.via bsenthilkumar fb

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing