Saturday 10 February 2018

வாழ்க்கைத்தரம் என்பது பணம் சார்ந்த விஷயமல்ல

நச்சுனு ஒரு பேச்சு!
~~~~~~~~~~~~~
உலகின் பந்தங்கள் நிலையில்லாதவை. இன்று அவையே சாரமும் பயனும் என்று தோன்றும். ஆனால் நாளை மறைந்து விடும். இறைவனுடன் உள்ள தொடா்பே உண்மையானது. பகவான் இருக்கும்போது, எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. முழுமனதுடன் அவரது நாமத்தை ஜபம் செய்ய வேண்டும்.

உபவாசம் என்றால் "பட்டினி' என்பது மட்டுமல்ல. "கூட வசிப்பது' என்ற பொருளும் உண்டு. அதாவது கடவுளுக்குப் பக்கத்தில் ஒட்டிக் கொண்டு வசிப்பது உபவாசமே. எல்லாம் அறிந்த அருட்சக்தியான கடவுளிடம் கஷ்டங்களைச் சொல்லி முறையிட்டால் மன சாந்தியும், பக்குவமும் உண்டாகும்.

மனிதனைப் பாவத்தில் தள்ளுபவை காமம், கோபம் இரண்டும் தான். ஆசையில் இருந்தே இவை பிறக்கின்றன. ஆசையால் உலக இன்பத்தை அடைய முயல்கிறோம். எண்ணம் நிறைவேறியதும், மனதில் ஆசை அற்றுப் போவதில்லை. மற்றொன்று முளைவிடத் தொடங்குகிறது.  தீயில் விட்ட நெருப்பு கொழுந்து விட்டு எரிவது போல, ஆசையின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க பாவமும் கொழுந்து விட்டு எரியத் தொடங்குகிறது.

உயிர்கள் அனைத்தும் கடவுளே என்ற ஞானம் வந்து விட்டால் ஆசை, கோபம், பாவம், கவலை, பிறவித்துன்பம் ஆகியவை நம்மை விட்டு நீங்கி விடும்.

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவரை அனுபவிக்க வேண்டும் என்ற தாகத்துடன் பக்தி செய்பவர் மீது கருணை கொண்டு கடவுள் அருள்புரிவார். ஆசை என்பதே இல்லாமல் அல்லும் பகலும் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்ள நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

வாழ்க்கை என்னும் வியாபாரத்திற்கு இடையே சிறிது நேரமாவது கடவுளின் திருநாமங்களைச் பக்தியோடு சொல்லுங்கள். இது மனதிற்கு நிம்மதி தரவல்ல பெரிய நிதி. அன்றாட வீட்டுப் பணிகளோடு குடும்பத்தோடு கூட்டாக சேர்ந்து பக்தி பாவனையோடு வழிபடுவது இன்னும் சிறப்பு.

வாழ்க்கைத்தரம் என்பது பணம் சார்ந்த விஷயமல்ல. நல்ல குணம், கடவுள் பக்தியுடன் வாழும் வாழ்வே தரமான வாழ்வு.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing