Friday, 4 November 2016

தெய்வங்களுக்கு ஏன் இரண்டு மனைவியர்?



காலம் செய்த திருக்கூத்துக்கள் பல. அவற்றைத் தெருக்கூத்துக்கள் என்றே சொல்லலாம். அந்த தெருக்கூத்து ஒன்றை... மன்னிக்கவும்... தெருப்பெயரில் அமைந்த ஒரு கூத்தைப் பார்க்கலாம். ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில், பெரிய அதிகாரி ஒருவர் சென்னையில் வாழ்ந்தார். அவர் பெயர் க்ரீன்வே (GREEN WAY). அவர் இருந்த தெரு ‘க்ரீன்வேஸ் ரோட்’ என்று அவர் பெயராலேயே அழைக்கப்பட்டது. அது ஒரு மனிதனின் பெயர் என்பதையே உணராமல் மிகுந்த புத்திசாலித்தனத்தோடு ‘க்ரீன்வேஸ் ரோட்’ என்பதைப் பசுமை வழிச்சாலை என மொழி பெயர்ப்பே செய்யப்பட்டிருக்கிறது! ஆங்கிலத்தில்தான் இப்படியெனால், தமிழில், கேட்கவே வேண்டாம். போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறோம். குழம்பிக் கொண்டும் இருக்கிறோம்! அந்தக் குழப்பத்தில் ஒன்றுதான் கோயில் என்பதும் ஆலயம் என்பதும். கோயில்-ஆலயம் என்னும் இரண்டு சொற்களுக்குமே பொருள் ஒன்றுதான் என்றே நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், கோயில் வேறு; ஆலயம் வேறு. இறைவன் (மூலவர்) குடி கொண்டிருக்கும் இடம், அதாவது கருவறையே - கோயில். கருவறையும் அதைச் சார்ந்த பிராகாரங்களும் கோபுரமும் இவை அனைத்தும் சேர்ந்ததுதான் ஆலயம் என்று சொல்லப்படுகின்றது.

இத்தகவலை திருமூலர், தன் திருமந்திரத்தில் குழப்பமில்லாமல் தெளிவாகக் கூறுகிறார். உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் வள்ளல் பிரானாற்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கே இப்பாடலில் உள்ளத்தைக் கோயில் என்றும், அதைத் தாங்கிச் சுற்றிச் சூழ்ந்துள்ள உடம்பை ஆலயம் என்றும் சொல்கிறார் திருமூலர். இதன் மூலம் கோயிலுக்கும் ஆலயத்திற்கும் உள்ள வித்தியாசத்தை சுலபமாக அறியலாம். அடுத்து, இப்பாடலில் மனித உடம்பையே இப்படிச் சொல்லி இருக்கிறாரே என்ற எண்ணமும் வரலாம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நமது உடம்பும் ஆலயமும் ஒன்று. ஓர் உத்தமமான துறவியைப் படுக்க வைத்தாற்போலத்தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
வழிபாட்டு முறைகளைச் சொல்லும் ஆகமநூல்கள், இத் தகவலைத் தெரிவிக்கின்றன. விரிவாக உள்ள அத்தகவல்களை சுருக்கமாகப் பார்க்கலாம். கோயிலுக்கு உள்ளே போவதற்காக முதலில் கோபுரத்தின் வழியாகப் போகிறோம் அல்லவா? அந்தக் கோபுரம் பாதங்கள் (கால்கள்), அடுத்து பிராகாரங்கள் - தொடை, முழங்கால்கள்; கொடிமரம் - முதுகுத்தண்டு. கோயிலின் முக்கியமான பகுதிகளில் ஒன்று இது. இதை மட்டுமாவது கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். கோயிலில் உற்சவத்தை முன்னிட்டும் கொடி ஏற்றும்போது ‘‘கோயில்ல கொடி ஏத்தறாங்களா? எதுக்குக் கொடி ஏத்தறாங்க? சாமி எந்தக் கட்சி? தேர்தல், ஊர்வலம் எதுனாச்சும் உண்டா?’’ என்றெல்லாம் சிலர் கேலி பேசுவது உண்டு. முன்னோர்கள் கொட்டிக் கொடுத்த சொத்துக்களின் அருமை தெரியாமல் பேசும் பேச்சு அது.
கொடிமரம் என்பது நம் முதுகுத்தண்டு என்று பார்த்தோம், அல்லவா? அது வீணைத் தண்டு போல, முதுகுத் தண்டில் மூலாதாரத்தில் தொடங்கி மேல் நோக்கிப் போகும் பிரம்மநாடி என்றும் சொல்லப்படும். இடைகலை-பிங்கலை என்னும் பிராணவாயுவை நடு நாடியில் நிறுத்தி, அசையாமல் தியானம் செய்தால், பிராணவாயு நிற்கும்;
பிராணவாயு நின்றால் மனம் நிற்கும். மனம் நின்றால் ஐம்பொறிகளும் அடங்கும். ஐம்பொறிகளும் அடங்கினால், விஷயங்கள் (கண்டவற்றில் உள்ள ஆர்வம்) அடங்கும். அவை அடங்கினால், வேண்டியது-வேண்டாதது என்னும் வேறுபாடுகள் நீங்கும். ஆத்மாவை உணர்ந்து அனுபவிப்போம். அப்போது அனுபவிக்கும் ஆனந்தத்தைத்தான் பிரம்மானந்தம் என்பார்கள். இப்படிப்பட்ட உயர்ந்த நிலையை, நமக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே, கோயிலில் மூலஸ்தானத்திற்கு நேராகக் கொடி மரத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். கொடி ஏற்றி, சுவாமி வெளிப்பட்டதும் ஊரே சொல்ல முடியாத ஆனந்தத்தில் திளைக்கிறது அல்லவா? அதுபோல, ஆத்மாவை உணர்ந்து பிரம்மானந்தத்தை அனுபவிக்கும்போது, சொல்லமுடியாத ஒரு நிலை உண்டாகும். இனி மற்றவற்றையும் பார்ப்போம். அடுத்து, மகாமண்டபம் - மார்பும் தோள்களும்; அர்த்த மண்டபம் - கழுத்து; அந்தராளம் - முகம். அதை அடுத்து இருப்பதே கருவறை - மூலஸ்தானம். அது தலை. கோயிலில் நடக்கும் வாத்திய ஓசைகள் எதற்காக? சுவாமியைத் தரிசிப்பதற்காக. நாம் வரிசையில் நிற்கும்போது, பொதுவாக கும்பலில் எல்லோருடைய சிந்தனைகளும் கண்களும் பலவிதமான திசைகளில் இருக்கும். மணி ஓசை கேட்ட அதே விநாடியில் அனைவருடைய பார்வையும் ஆண்டவன் பக்கம் திரும்பிவிடும். அந்த ஓசை, ஆண்டவன் பக்கம் நம்மைத் திருப்பி விடுகிறதல்லவா? இதையே ‘‘ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே’’ எனத் திருமுறைகள் கூறுகின்றன. இது மேலோட்டமான தகவல்.
அழுத்தமான, ஆழமான தகவல் - கோயில்களில் நாம் கேட்கும் வாத்திய ஓசைகள் அனைத்தும் நம் உடலில் எழும் ஓசைகள்; அவற்றை நாம் கேட்கலாம். கேட்க வேண்டும். முறையுடன் ஆன்மிகத்தில் ஈடுபட்டு, அதில் முன்னேறும்போது, அதாவது குண்டலினி சக்தியை எழுப்பி, மூலாதாரம் - சுவாதிஷ்டானம் என்று படிப்படியாக முன்னேறும்போது, சில மங்கல நாதங்கள் (ஓசைகள்) எழும்; அவற்றைக் கேட்கவும் முடியும்.‘‘அடப் போங்கய்யா! என்னமோ மங்கல சத்தமாம்! அதுவும் நம்ம உடம்புல அந்த சத்தங்கள் தானாக் கேட்குமாம்...’’ என்று கேலி பேசி, சந்தேகப்படவேண்டாம்.நம்மில் பலர், ‘‘என்னமோ தெரியலப்பா! காதுல அப்பப்ப ‘கொய்’யினு ஒரு சத்தம் கேக்குது’’ என்று சொல்லி இருப்போம். சாதாரண நிலையிலேயே இப்படி என்றால், குண்டலினியை முறையாக எழுப்பி, மூலாதாரம் முதலானவற்றின் மூலம் முன்னேறி மேலே போகும்போது எப்படி இருக்கும்? அனுபவத்தில் உணர வேண்டிய அந்த ஓசைகளைத்தான், வெளிப்படையாகக் கோயிலில் மங்கல வாத்திய ஓசைகளாக, நமக்கு அறிவுறுத்தினார்கள். அடுத்து, கோயில்களில் பல வகையான தீபாராதனை செய்யப்படுவதைப் பார்த்திருக்கலாம். முதலில் ஒரு தீபம், பிறகு இரண்டு தீபங்கள், அடுத்து மூன்று தீபங்கள் எனப் பலவகையான தீபங்களை ஏற்றி, நிறைவாக, ஆரம்பித்த அந்த ஒரு தீபத்திலேயே கொண்டு வந்து முடிப்பார்கள். அதாவது, ஒரே சக்தியில் இருந்துதான், ஓரறிவு உள்ள செடி-கொடியில் இருந்து ஆறறிவு படைத்த மனிதன்வரை அனைத்து ஜீவராசிகளும் தோன்றுகின்றன. முடிவில் அந்த ஒரே சக்தியிலேயே அவையெல்லாம் ஒடுங்குகின்றன. இதை நமக்கு அறிவுறுத்தவே, தீபங்களை வரிசையாக ஏற்றுகிறார்கள்.
இதுவரை கோயில், அதன் அமைப்பு, தேர், கொடிமரம், வாத்தியங்கள், தீபங்கள் ஆகியவைகளைப் பற்றிப் பார்த்தோம். இனி, சுவாமியைப் பார்க்கலாம். மன்னிக்கவும், தரிசிக்கலாம். சிவன் - பார்வதி. அவர்களின் பிள்ளைகள்தான் விநாயகர், முருகர். பார்வதியின் அண்ணன் மகாவிஷ்ணு, விநாயகரும் முருகரும் மகாவிஷ்ணுவின் மருமகன்கள். என்ன அழகு! என்ன அற்புதமான உறவுமுறைகள்! உலகத்தில் வேறு எங்காவது இப்படி தெய்வங்களுக்குள் உறவு முறைகள் சொல்லி, இன்றளவும் அவை நிலைத்து நிற்பதைப் பார்க்க முடியுமா? உறவுமுறைகள் இப்படி ஒன்றாக இருப்பதைவிட வேறு என்ன தெய்வீகம் வேண்டும்? கோயில் என்பதும் ஆலயமே! குடும்பம் என்பதும் ஆலயமே! என்று பழங்காலத் திரைப்படப் பாடல் இதைத்தான் சொல்கிறது. ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான இறைவனுக்கு, இப்படி உறவு முறைகளைச் சொல்லி நமக்குத் தெய்வீகத்தை உணர்த்திய முன்னோர்கள், கூடவே இன்னொன்றையும் சொல்லி வைத்தார்கள். அதாவது, ‘‘இறைவனுக்கு மனைவியர் இருவர்’’ என்றார்கள். ‘‘ஹூக்கும்! அங்கதான இடிக்குது’’ என்ற வாதத்தில் இறங்க வேண்டாம். ஒரு பிரபலமான நடிகர். அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘ஏன்? முருகன் ரெண்டு கல்யாணம் செஞ்சிக்கலயா? நான் செஞ்சிக்கிட்டா என்ன தப்பு?’’ எனக் கேட்டார்.
நியாயம்தான். முருகன் இரண்டு கல்யாணங்கள் செய்து கொண்டார். நாமும் இரண்டு கல்யாணங்கள் செய்து கொள்ள வேண்டியதுதான். பிரச்னை எங்கு வருகிறது என்றால், முருகனின் முதல் மனைவி தேவயானை என்பவள் தேவலோகத்தைச் சேர்ந்தவள். அதன்படி முருகனுக்கு மாமியார் வீடு - தேவலோகம். அதன்படி நாமும் முதல் கல்யாணம் செய்து கொண்டு தேவலோகம் போய்விட்டு (முடிந்தால்) மறுபடியும் பூமிக்கு வரவேண்டும். அதன்பிறகு இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளலாம். அதுவும் நகரத்தில் இருக்கும் பெண்ணாகப் பார்த்து, நல்ல பணக்காரப் பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஊருக்கு ஒதுக்குப் புறமாக, குடிசை போட்டுத் தங்கி இருக்கும் குறவர் குடிசையில் இருந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். வள்ளியை அப்படித்தானே முருகன் திருமணம் செய்து கொண்டார்!? இதைவிடப் பெரிய பிரச்னை, முருகனைப் போல் என்று சொல்லி, இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டால், அதன்பிறகு கார் முதலான வாகனங்களில் எல்லாம் பிரயாணம் செய்யக் கூடாது. முருகன் மயில் மேல் ஏறிப் போனாரல்லவா? அது போல, மயில் மேல் ஏறித்தான் போக வேண்டும். செய்வோமா? என்ன விதண்டாவாதம்! இப்படிப்பட்ட வாதங்கள் பொழுதைப் போக்கிப் பிரச்னைகளை உருவாக்குமே தவிர, வாழ்க்கைக்கு உதவாது. உதவுவதை உண்மையைச் சரியாகத் தெரிந்து கொள்வோம்.
இரண்டு மனைவியர் என்பது முருகனுக்கு மட்டுமல்ல! எல்லா சாமிக்கும் உண்டு. 
சிவபெருமானுக்கு உடம்பில் பாதி ஒரு மனைவி; மற்றொருத்தி தலையில் என்பார்கள்.
விநாயகருக்கு சித்தி-புத்தி என இரு மனைவியர்.
மகாவிஷ்ணுவிற்கு ஸ்ரீதேவி-பூதேவி என இருவர்.
சாஸ்தாவிற்கு பூர்ணா-புஷ்கலா என இரு மனைவியர்.
இவையெல்லாம் எதற்காக? இரண்டு மனைவிகள் என்பது என்ன?
தெய்வத்தைத் தேடி அலைவதில் - அடைவதில் இரண்டு வழிகள் உண்டு. அவை குரங்குக் குட்டி பக்தி, பூ¬னைக்குட்டி பக்தி என்று சொல்லப்படும்.

குரங்குக்குட்டி இருக்கிறதே, அது தாயின் அடி வயிற்றைப் பற்றி - இறுகப் பிடித்திருக்கும். தாய்க் குரங்கு குட்டியைப் பிடித்திருக்காது. அது பாட்டுக்கு மரத்திற்கு மரம் தாவி ஓடிக் கொண்டிருக்கும். ஏதாவது ஒரு அசம்பாவிதம் நேர்ந்து, அல்லது நழுவி குட்டி கீழே விழுந்து விட்டால், அது சுலபத்தில் தாயிடம் போய்ச் சேரமுடியாது; தாயும் குட்டியைச் சேர்த்துக் கொள்ளாது. இது ஒரு வித பக்தி. தெய்வத்தைத் தேடிப் போய் நாமே பிடிப்பது. அதாவது குரங்குக் குட்டி, தானே தன் தாயைப் பற்றிப் பிடித்திருப்பதைப்போல, இது சுலபத்தில் நடக்காது. உதாரணம் - விசுவாமித்திரர் முதலான முனிவர்கள், எத்தனையோ கடுந்தவம் செய்து தெய்வ அருளைப் பெற நினைத்தார்கள். நடந்ததா? எவ்வளவு கஷ்டங்கள்! கடுந்தவம் செய்து பேர் பெற்ற துர்வாசர், காட்டில் இருந்த பஞ்சபாண்டவர்களிடம் உணவுக்காகப் போய் அல்லல்படவில்லையா?
ஆகவே, நாமாக தெய்வத்தைத் தேடிப்போய் அடைவது என்பது சுலபத்தில் நடக்காது. இதைத்தான், தெய்வத்தைத் தேடிப் போய் மணந்ததாக, இறைவனுக்கு முதல் கல்யாணம் என்று குறித்தார்கள். பக்தியில் இரண்டாவது வகை பூனைக்குட்டி பக்தி. பூனைக்குட்டி தன் தாயைத் தேடிப் போய் பிடித்துக் கொள்ளாது. இருந்த இடத்தில் இருந்தபடியே ‘மியாவ்’ என்று குரல் கொடுக்கும். தாய்ப்பூனை எங்கு இருந்தாலும், உடனே ஓடிவந்து குட்டியைப் பற்றிக் கொள்ளும். அதுபோல அடியார்கள் இருந்த இடத்தில் இருந்தே இறைவனின் திருநாமத்தைச் சொல்வார்கள். தேடிப் போய், ஒற்றைக்காலில் நின்று தவம் செய்வது, மூச்சை அடக்குவது என்பதெல்லாம் கிடையாது. இறைவனின் திருநாமத்தைச் சொல்வார்கள்; அவ்வளவுதான். இறைவன்தானே தேடிப்போய், அவர்களுக்கு அருள் செய்வான். உதாரணம், பிரகலாதன். பக்தி உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்த பிரகலாதன் என்ன தவமா செய்தான்? இருந்த இடத்தில் இருந்தபடியே ‘ஓம் நமோ நாராயணாய’ என்று சுவாமியின் திருநாமத்தைச் சொன்னான். அவன் இருந்த இடம் தேடி, அங்கிருந்த தூணில் இருந்து சுவாமி வெளிப்படவில்லையா? கஜேந்திரமோட்சம் என்ற ஸ்ரீமத் பாகவத வரலாற்றில் கஜேந்திரன் என்ற அந்த யானை குளத்தில் இருந்து ‘ஆதிமூலமே’ என அழைத்தது; சுவாமி ஓடிவந்து காப்பாற்றவில்லையா? இவ்வாறு தெய்வமே தேடி வந்து அருள் செய்வதைத்தான், சுவாமிக்கு இரண்டாவது திருமணம் என்று சொன்னார்கள். ஆக, தெய்வத்தைத் தேடிப் போய் அருள் பெறுவது, எல்லா பாரத்தையும் சுவாமியிடம் சமர்ப்பித்தவர்களைத் தேடி, தெய்வமே போய் அருள் செய்வது என்ற சூட்சுமமான தகவலையே, தெய்வத்திற்கு இரு மனைவியர் எனக்கூறினார்கள்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing