☆சபலம் சபலம் சபலம் சபலம் சபலம்☆
மதிய வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்த பிரபல நிறுவனத்தின் உள்ளே இன்டர்வியூக்காக நடந்தேன். அந்த நிறுவனத்தின் ‘HR’ இளைஞனாய் இருந்தான்.
“என்ன மிஸ்டர் கோபால், உங்க
வயசு 35-னு உங்க பயோடேட்டால இருக்கே. நிஜமாவா.?
“உண்மைதான் சார்.”
“இவ்வளவு வயசாகியும் நீங்க இன்னும் வேலை தேடிட்டு தான் இருக்கிங்களா.? எனக்கு வியப்பா இருக்கு.”
“அப்படி இல்ல. இதுக்கு முன்னாடி வேலை பார்த்த கம்பெனில பத்து வருசமா வேலைப் பார்த்துட்டு இருந்தேன். கம்பெனி திடீர்னு நஷ்டமடைஞ்சதால மூடிட்டாங்க. அதனால தான் வேற வேலை தேட வேண்டியதானது.”
“ஓ.. அப்படியா.? எங்க கம்பெனில பொதுவா யங்ஸ்டரா தான் வேலைக்கு எடுப்போம். உங்களுக்கு 35 வயசுங்குறீங்க அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு."
“பரவாயில்லை சார். நான் வேலை செய்ய தயாரா தான் இருக்கேன்.”
அந்த HR வாலிபன் ஆழ்ந்து யோசிப்பது போல பாவனை செய்தான்.
“ஓகே கோபால், நீங்க பயோடேட்டா தந்துட்டு போங்க நாங்க தேவைப்படும் போது கால் பண்றோம்..”
“ஓகே. தேங்க் யூ..”
“ம்ம்ம்.. வெல்கம்.”
எனது பைலை எடுத்துக்கொண்டு நடந்தேன். என் தலை விண் விண்ணென்று வலித்துக் கொண்டிருந்தது. நான் கடந்த சிலமாதங்களாகவே வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். வயதைக் காரணம் காட்டி பெரும்பால இடங்களில் தவிர்த்து விடுகின்றனர்.
எல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது முன்பு வேலை செய்த இடம் நஷ்டமாகி மூடப்படும் வரை. அந்த வேலையை நம்பி வாங்கிய லோன்கள் இப்போது என் கழுத்தை நெறிக்க துவங்கியிருந்தன. வங்கியில் இருந்து அடிக்கடி லோனை கட்டச் சொல்லி நோட்டிஸ் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. போதாத குறைக்கு கடன்கள் வேறு. கையிலிருந்த கொஞ்சுண்டு சேமிப்பும் வீட்டு செலவுகளில் கரைந்து கொண்டிருக்க, நாளைகள் என்னை திகிலூட்டிக்கொண்டிருந்தன.
ஒரே மகனின் டியூசன் செலவு, பள்ளிச் செலவுகள், மேலும்... மேலும்... கடவுளே.. எப்படி சமாளிக்க போகிறேன்...?
தலைவலி இன்னும் கூடியது. காப்பி சாப்பிடலாம் போல இருந்தது. பேருந்து செலவுக்கு போக மீதி இருக்கும் தொகையில் ஒரு காப்பி குடித்து விட்டு பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்க்கத் துவங்கினேன். பெட்ரோல் விற்கும் விலைக்கு லோன் போட்டு வாங்கிருந்த இருசக்கர வாகனம் பயன்படுத்தப்படாமல் வீட்டில் சும்மாவே கிடக்கிறது. பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. பேருந்து ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியதில் என் காலை எதுவோ உரசியது. குனிந்து பார்த்தேன். தோளில் மாட்டிக்கொள்ளும்படியான ஒரு பை கிடந்தது. எனக்கு முந்தின இருக்கையும், பிந்தின இருக்கையும் காலியாக கிடந்தது. நடத்துனர் ஓட்டுனருடன் பேசிக்கொண்டிருக்க, பேருந்தில் இருந்த மிகச் சில பயணிகளும் வெளியே வேடிக்கை பார்த்தப்படி இருக்க. எனக்கு சபலம் தட்டியது. மெதுவாக குனிந்து எடுத்து திறந்து பார்த்தேன்.
எனக்கு குப்பென வியர்த்தது...! பையில் 2000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் மூன்று கிடந்தன. நான் சட்டெனப் பையினை மூடினேன். சுற்றிலும் நோட்டமிட்டு யாரும் கவனிக்கவில்லை என உறுதிசெய்து கொண்டு, எனது பையில் மறைத்துக் கொண்டேன். எனக்குப் படபடப்பாக இருந்தது. இது தவறு என மனம் எச்சரித்தது. காவல் நிலையம் போய் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் கட்ட வேண்டிய லோன்களும், வட்டிகளும், இத்யாதி செலவினங்களும் என்னை பயமுறுத்தின.
வீடு வந்து சேரும் வரை மனதில் ஆயிரம் ‘காச்மூச்’ கத்தல்கள். வியர்வை வேறு ஆறாகச் சொட்டியது. வீட்டுக்குள் நுழைந்து பணத்தை பீரோவில் பத்திரமான இடத்தில் வைத்தேன்.
“ஏங்க வந்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்கீங்க.? என்றாள் சுபா என் இல்லத்தின் அரசி.
'சொல்லிவிடலாமா இவளிடம்.?'
“சுபா, ஒரு நிமிஷம் அந்த கதவை சாத்திட்டு வா.”
“எதுக்கு.?"
“சொல்றேன். போ.. சாத்திட்டு வா”
'என்னாச்சு இவருக்கு.?' அவள் திரும்பிப் பார்த்தபடி போய், கதவைச் சாத்திவிட்டு வந்தாள்.
"ம்ம்.. சொல்லுங்க.”
“இப்படி உக்காரு." என்று பீரோவைத் திறந்து பணத்தை எடுத்து வந்து கொடுத்தேன். பணத்தைக் கண்டு விழி விரித்து.
“ஏதுங்க இது.? கடன் வாங்கினிங்களா,.?"
நான் நடந்ததெல்லாம் சொல்லி முடித்தேன்.
“யாரு தவற விட்ட பணம் இது.?"
“எனக்கு தெரியல. நான் யாரவது தேடி வருவாங்கன்னு பஸ் ஸ்டாப் வரும்வரை காத்திருந்தேன். வந்தா கொடுக்கலாம்னு. ஆனா யாரும் வரல.” எனப் பொய் சொன்னேன். சொல்லிவிட்டு பணத்தை எண்ண துவங்கினேன். மூன்று லட்சம் 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.
“சுபா இன்னும் சில மாசத்துக்கு நமக்கு கவலையே இல்ல. செலவுக்கெல்லாம் இது போதும்.”
அவள் அமைதியாக இருந்தாள்.
“சுபா ஏதாவது பேசேன்.”
“நமக்கு இந்த பணம் வேணாம்ங்க.”
“சுபா என்ன சொல்ற.? கடவுளா பார்த்து தான் நம்ம கஷ்டம் தீர இந்த பணத்தை தந்துருக்காரு.”
“உங்க சபல புத்திக்கு கடவுள பழி சொல்லாதிங்க.” சுபா சீறினாள்.
“சுபா இங்க பாரு. எனக்கு இன்னும் வேல கிடைக்கல. கட்டவேண்டிய லோன்களும், கடன்களும், செலவுகளும் நம்ம கழுத்த நெறிக்க ஆரம்பிச்சுருச்சு. அப்படி இருக்கயில இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியா இருக்கும் பாரு.”
“அதுக்காக இன்னொருத்தர் பணத்துல நாம சொகுசா இருக்குறதா.?” அது தப்பு. அதுக்கு பதிலா நாம கஷ்டப்படலாம்.”
“அப்போ செலவுகளுக்கு என்ன தாண்டி பண்ணுறது.?" என நான் குரலை உயர்த்த...
சுபா படக்கென எழுந்து தன் ‘தாலியை’ கழட்டி “இந்தாங்க. இதை அடகுல வைங்க. எனக்கு மஞ்சளும், கயிரும் போதும்.
“சுபா என்ன காரியம் பண்ண.” என நான் அதிர்ந்தேன்.
“அடுத்தவங்க பணத்துல வயுறு நிறைக்கிறத விட இது எவ்வளவோ மேலங்க. போங்க. இந்த பணம் யாருக்கு சேரணுமோ அவங்க கிட்ட கொடுத்துட்டு வந்துருங்க.. அப்படி கொடுத்துட்டு வந்து தான் நீங்க மறுபடி இந்த வீட்டுல நுழையணும். என ஓடி கதவைச் சாத்திக் கொண்டாள். உள்ளே அவள் குமுறும் சத்தம் கேட்டது. என் கையில் அவள் கழற்றிக் கொடுத்த தாலி கனத்தது. நான் தொய்வுடன் அந்த பையினை எடுத்து ஆராய்ந்தேன். ஒரு விசிட்டிங் கார்டு கிடந்தது நான் அந்த முகவரியை நோக்கி நடந்தேன்.
நான் அந்த பங்களாவுக்குள் நுழைந்தேன். அழைப்பு மணியை அழுத்த ஒரு பெரியவர் வந்து கதவைத்திறந்தார். விஷயத்தை அவரிடம் சொல்லி
பணப்பையை அவரிடம் கொடுக்க. அவர் ஆச்சரியமடைந்து என்னை உள்ளே அழைத்து காப்பி கொடுத்து உபச்சரித்தார்.
“எனக்கு கொஞ்சம் மறதி தம்பி. வழக்கமா போற என்னோட கார் ரிப்பேர் ஆகிடுச்சு. அதான் பஸ்ல வந்தேன். வரும்போது பணத்த அங்கயே போட்டுட்டேன். வீட்டுக்கு வந்த பின்னாடி தான் நினைவுக்கு வந்தது. திருப்பி கிடைக்காதுன்னு தான் நெனைச்சுட்டு இருந்தேன். உங்களை போல நல்லவங்களும் இருக்காங்க. அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்துருக்கு.” என்றபடியே என்னைப் பற்றி விசாரித்தார். நான் என்னைப் பற்றி சொன்னேன்.
“அப்படியா..?" என்று யோசித்தவர்
“தம்பி, என்னோட நிறுவனத்துல வேலை செய்ய விருப்பமா...? ஒரு வாரத்துக்கு முன்னாடிதான், எங்க நிறுவனத்து மேனேஜர் ரீடைர் ஆனார். அவரோட இடத்துக்கு யாரைப் போடலாம்னு நெனைச்சுட்டு இருந்தேன். நீங்க ஏன் அந்த வேலைல சேரக்கூடாது.? நீங்க நாளைல இருந்து அங்க ஜாயின் பண்ணிக்கோங்க... இது என் நிறுவனத்தோட விசிட்டிங் கார்டு... வேற யாராவது உங்க சூழ்நிலைல இருந்திருந்தா இந்த பணம் திரும்ப வந்திருக்காது. இந்த வேலை உங்க நேர்மைக்கு தர்ற பரிசு..." என்று புன்னகைத்து விசிட்டிங் கார்டினை நீட்ட...
என் கண்ணில் கண்ணீர் வந்தது...
அந்த கண்ணீரில் என் ‘சுபாவுக்கு’ ஆயிரம் முத்தங்களும், நன்றிகளும் இருந்தது.
திருக்குறள் :
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவ தெவன்
விளக்கம் :
அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட முடியுமோ?....
No comments:
Post a Comment