Tuesday 28 January 2020

பத்மஸ்ரீ விருது பெற்ற ராமகிருஷ்ணன்

பத்மஸ்ரீ விருது பெற்ற ராமகிருஷ்ணன்

இவர் மட்டும் இந்தியாவில் , அதுவும் தமிழ்நாட்டில், அதுவும் தென்கோடி தென்காசிக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமமான ஆயக்குடியில் செய்துள்ள/ செய்து வருகின்ற சாதனையை அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் செய்திருப்பாரேயானால் உலகத்தில் உள்ள மொத்த உயரிய விருதுகளையும் பெற்றிருப்பார். 

Youtube ல் Morris Goodman என்பவரது வீடியோவைப் பாருங்கள்.Miracle Man என்று ஒரு படமே எடுத்து வெளியிட்டிருப்பார்கள். அவர் Miracle Man தான். அதில் சந்தேகமில்லை. அவர் என்ன செய்தார், ஒரு விமான விபத்தில் சின்னாபின்னமாக கிடந்தார். கடும் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்து தான் இருந்த, ஆஸ்பத்திரியை விட்டு உயிருடன் மீண்டு வருவார். இதுதான் Miracle Man-ன் கதைச்சுருக்கம். 

இப்பொழுது பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன் விஷயத்திற்கு வருவோம். இவர் ஆயக்குடியைச் சேர்ந்தவர். கோயம்புத்தூரில் இன்ஜினியரிங் படித்தவர். ராணுவ பணியில் இணைய விரும்பி பயிற்சியில் ஈடுபட்டபோது, உயரத்திலிருந்து கீழே விழுந்தார். விழுந்தவர் எழ முடியவில்லை. கழுத்துக்குக் கீழ் 100 சதவிகிதம் செயலற்று, படுத்த படுக்கையாகிப் போனார். தன் அனைத்துத் தேவைகளுக்கும் அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டியவரானார். குடிப்பதற்க்குத் தண்ணீர் வெறும் ஒரு இன்ச் அருகில் இருந்தால் கூட அதை அவரால் எடுத்துப் பருக முடியாது. யாராவது ஒருவர் வந்து உதவினால்தான் உண்டு. அப்படியொரு கையறு நிலை. 

இந்த நிலையில் ஒருவரால் என்ன செய்ய முடியும். என்னத்தைத் தான் சாதிக்க முடியும். சாதித்தார். தன் எண்ணத்தால் சாதித்தார். 

தனக்கு சிகிச்சை அளித்து நம்பிக்கையும் அளித்த டாக்டர் அமர்சிங்கின் பெயரில் அமர் சேவா சங்கம் என்கிற அமைப்பைத் துவங்கினார். குழந்தைகளுக்குப் பாடம் நடத்தினார். தென்காசி சுற்று வட்டாரங்களில் மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்த குழந்தைகளுக்கான மறு சீரமைப்பு (Rehabilitation) சேவையைத் துவங்கினார். பணத்திற்கு எங்கு செல்வது. சுற்றுவட்டார ஊர்களில் வீதி வீதியாக வீல்சேரில் சென்று நிதி சேகரித்தார். தெரிந்தவர்கள் கொஞ்சம் உதவினர். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சற்று மாற்றம் ஏற்பட்டது. ஆனந்த விகடனில் 1980களின் முற்பகுதியில் திருமதி சிவசங்கரி அவர்கள் இவரைப்பற்றி அறிந்து ஒரு கட்டுரை எழுதினார். கொஞ்சம் வெளிச்சம் பட்டது. உதவிகள் கொஞ்சம் கொஞ்சமாக நல்லவர்கள் மூலம் வரத் துவங்கின. 

Special Children, Differently abled Children, Accident Victims என்று தன் சேவை எல்லைகளை விரித்துக்கொண்டே போனார். Cerebral Palsy & Mental Retardation CPMR என்று சொல்லப்படக்கூடிய நிலையிலிருக்கும் குழந்தைகளைக் கூட அவர்கள் தன்னைத்தானே பார்த்துக் கொள்ளச் செய்தார். இது எழுதுவதற்கு எளிது. செயல்படும் பொழுதுதான் அவரது செயலின் வீரியம் புரியும். Toilet Training, தானே நடத்தல் அல்லது ஒரு Walker-ன் உதவியுடன் நடத்தல் அதுவும் முடியாத பட்சத்தில் தானே ஒரு வீல் சேரில் நகர்தல், தானே உணவு உண்பது, இது எலக்ட்ரிக் ஸ்விட்ச், இது உயரம், இது தண்ணீர், இதனருகில் எல்லாம் செல்லக்கூடாது என்கிற Safety Training, Good Touch Bad Touch பற்றி அவர்களுக்குப் புரியவைத்து அவர்களை தற்காத்துக் கொள்ளச் செய்தல் அவையெல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிரிண்டிங், கம்ப்யூட்டர், மெக்கானிக் வேலைகள் போன்று கற்றுக்கொடுத்து அவர்களை பணியில் அமர்த்துதல் கூட நடக்கிறது. இது எவ்வளவு கடுமையான வேலை என்பது புரிய ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். இந்த மாதிரி நபர்களுக்கு ஒரே ஒரு கலரை அவர்கள் மனதில் பதியச் செய்ய குறைந்தது மூன்று மாதங்கள் கூட ஆகலாம். பொறுமையாக Professional ஆக பயிற்சி பெற்ற ஒருவரால் மட்டுமே அது சாத்தியம். இவை தவிர Physiotherapy மூலமும் Rehabilitation நடக்கும். விபத்தில் அடிபட்டு கை கால் ஸ்பைனல் கார்டில் அடிபட்டு மீள முடியாதவர்கள் இங்கே வந்து முடிந்த அளவு மீண்டு செல்கிறார்கள். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் உள்ளன. அதில் படித்து இன்று பல பள்ளிகளிலும் பலர் ஆசிரியர்களாக உள்ளனர். 

இதுவரை இந்த 40 ஆண்டு காலத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல ஏறத்தாழ முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்தக் குழந்தைகளின்/இளைஞர் இளைஞிகளின் வாழ்விலும் அவர்கள் பெற்றோர் குடும்பத்தினர் வாழ்விலும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். 

இந்தப்பணி இன்றும் தொடர்கிறது. மேலும் வளரும்.

இப்படி நேரடியாக பயன்பெற்றவர் ஏராளமாக இருக்க என்னைப் போன்ற Indirect Beneficiaries இன்னும் ஏராளம். எப்பொழுதெல்லாம் மனத்தளர்ச்சி உற்சாகக் குறைவு நம்பிக்கை குறைவு ஏற்படுகிறதோ பத்மஸ்ரீ ராமகிருஷ்ணனை நினைத்தால் போதும். அவர் செய்துள்ள சாதனைகளைச் சிந்தித்தால் போதும்.. உள்ளுக்குள் பெரும் நம்பிக்கை ஊற்றெடுக்கும். எதையும் எதிர்கொண்டு விட முடியும் என்கிற தைரியம் வரும். வெற்றி நிச்சயம் என்கிற எண்ணம் வரும். 

அவரது குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு பக்கபலமாக அன்றுமுதல் நிற்கின்றனர். அவரைப் பார்த்துக்கொண்டதற்காக அவர்கள் குடும்பம் வாழையடி வாழையாக நன்றாக வாழட்டும். தியாகத்திற்கு இலக்கணமாக அவரது திருமதியாக பெருமிதம் கொண்டு துணை நின்று களத்தில் இயங்கும் அவர் மனைவி திருமதி.லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பெயரோடும் புகழோடும் என்றென்றும் நிலைத்து நிற்கட்டும். 

பத்மஸ்ரீ ராமகிருஷ்ணணது சேவையைப் புரிந்து அவருடன் அமர் சேவா சங்கத்தில் இணைந்து அதன் செயலாளராக சிறப்பாக வழிநடத்திக் கொண்டு இருக்கும் திரு.சங்கரராமன் அவர்கள் புகழ் ஓங்கி வளரட்டும். திரு.சங்கரராமன் அவர்களும் வீல் சேரிலிருந்துகொண்டே சாதிக்கும் சாதனையாளர். CA படித்து Chartered Accountant ஆகவும் இயங்குகிறார். இவரைப் பற்றியும் பின்னர் ஒரு கட்டுரை விரிவாக எழுதவேண்டும்.

நீங்கள் குற்றாலம் செல்லும்போது மறக்காமல் ஒன்பது கிமீ தூரத்தில் உள்ள ஆயக்குடிக்குச் சென்று அமர் சேவா சங்கத்தைப் பாருங்கள்.அது மட்டுமல்ல, இன்று பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான Ramp வசதிகள், கழிப்பறை வசதிகள் போன்றவை அமர்சேவா சங்கத்தின் முன்னெடுப்பிலேயே அரசாங்கத்தின் துணையுடன் செயல்வடிவம் பெற்றுள்ளன.

நான் 2011 ஆம் நடத்திய வானம் உங்கள் வசப்படும் நம்பிக்கைத் திருவிழாவில் MIRACLE MAN OF INDIA என்று அவரைப் பதிவு செய்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல ,தான் நலம்பெற்று மருத்துவமனையை விட்டு நடந்து வெளியேறிய Morris Goodman மிராக்கிள் மேன் என்பது உண்மையே. அப்படி இருக்கும்போது தானும் ஒரு மேலான வாழ்வு வாழ்ந்துகொண்டு , முப்பதாயிரம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விபத்தில் அடிபட்டவர்களின் வாழ்வில் நேரடியாகவும் என்போல் பலருக்கு மறைமுகமாகவும் நம்பிக்கை கொடுத்து செயல்பட வைத்துள்ளாரே , இவரை என்னவென்று சொல்வது. உலகின் சிறந்த மனிதர் என்பது உண்மைதானே. He is the biggest positive influence on the people around him. 

மேலை நாட்டினர் Morris Goodman போன்றவர்களை கொண்டாடுகிறார்கள். நாம் இப்பொழுதுதான் பத்மஸ்ரீ விருதையே கொடுக்கிறோம். நாம் வெளிநாட்டினரை விட எதிலும் குறைந்தவர்களில்லை. ஆயினும் நாம் அவர்களையே அண்ணாந்து பார்த்துக்கொண்டு உள்ளோம். அவர்கள் செய்யும் சிறு செயலும் சாதனை. நாம் செய்யும் பெரும் செயல்களைப் பற்றி கண்டுகொள்வது கூட கிடையாது.இந்த மனநிலை மாறவேண்டும். இவரைப் போன்ற விளம்பர வெளிச்சம் விழாத Silent Achievers ஒவ்வொரு துறையிலும் நம்நாட்டில் உண்டு. அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும், உதவியையும் வழங்கி அவர்களை நாம் கொண்டாட வேண்டும். வாழும் காலத்திலேயே அவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும். 

Anyhow , இப்பொழுதாவது இந்த விருது வந்ததே என்று சந்தோஷப் படுவோம். பத்மஸ்ரீ ராமகிருஷ்ணனை கொண்டாடுவோம். அவரைப் பற்றிய புத்தகங்கள் எழுதுவோம். நானே என் புத்தகம் ஒன்றில் அவரைப் பற்றிக் குறிப்பிட உள்ளேன். முடிந்தால் அவரைப் பற்றிய ஒரு Documentary யையும் நானே எடுத்து ஆவணப்படுத்துகிறேன். பெரியோர்கள் பலர் உள்ளனர். அவர்கள் சிறப்பாக ஏதாவது செய்வார்கள் என்று நம்புகிறேன். 

எத்தனை தடவையடா பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன் என்று எழுதுவாய், ஒரு முறை எழுதினால் போதாதா என்று சிலர் கூறுவது மைண்ட் வாய்ஸில் கேட்கிறதய்யா. பல நாள் ஏக்கம் மட்டுமல்ல பலநாள் ஆதங்கமுமய்யா. அதனால் சொல்கிறேன். பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன் , பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன்... எப்போது வரை இப்படிச் சொல்வாய், பத்மபூஷண் ராமகிருஷ்ணன் ஆகும் வரை. 

அவரது பணி தொடர்கிறது. நாம் நம் பணியைத் துவங்குவோம். 

விஸ்வம் நடராஜ்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing