இந்த பட்ஜெட் பற்றி இதுவே முத்தாய்ப்பு கருத்து..ஷியாம் சேகர்
--------------------------------------------------------------------
“தேர்தல் பயமில்லாமல் ஒரு பட்ஜெட்!”
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், எதிர்பாராத ஒன்றாகவே அமைந்துள்ளது. இந்த ஆட்சியின் இறுதி முழு பட்ஜெட் என்பதால், அரசியல் தாக்கம் அதிகமாகவும், பொருளாதார தாக்கம் குறைவாகவும் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
அரசு, வாக்காளர்களை மீண்டும் சந்திக்கும் முன், அவர்கள் விரும்பக்கூடிய சலுகைகளை கொடுத்து, ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் அமையும் என, பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
பட்ஜெட்டில் எடுக்கப்படும் முடிவுகள், மக்கள் மத்தியில், ஆளும் தரப்பிற்கு சாதகமான மன ஓட்டத்தை ஏற்படுத்த முற்படும் என்பதே பரவலான கருத்து.
வரிச் சலுகைகள், வளர்ச்சி திட்ட ஒதுக்கீடுகள் மற்றும் வாக்காளரை கவரும் அம்சங்கள் நிறைந்தே, கடந்த காலத்தில் தேர்தலை ஒட்டிய பட்ஜெட்டுகள் அமைந்தன.
இந்த பட்ஜெட் குறித்தும் இத்தகைய எதிர்பார்ப்பே வலுவாக இருந்தது.
ஆனால், எந்தவித தேர்தல் பதற்றமும் இன்றி அமைந்ததுதான் இந்த பட்ஜெட்டின் முக்கிய சிறப்பு.
மக்கள் நலனை தொலைநோக்கோடு அணுகி, திட்டங்களை சீராக வடிவமைத்து, வரி சீரமைப்பை நேர்த்தியாக எதிர்கொண்ட விதம், அரசின் தன்னம்பிக்கையை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
மக்கள் குறுகிய நோக்குள்ள அணுகுமுறையை எதிர்பார்க்கவில்லை என்பதே அரசின் கணிப்பு.
இந்த கணிப்பு சரியா என்பதை காலம் தான் தீர்மானிக்கும் என்றாலும், இத்தகைய நிலையை அரசு எடுத்ததே ஒரு சாதனை தான். கடந்த ஆண்டில் எடுத்த கடுமையான பொருளாதார முடிவுகளை மக்கள் ஏற்றுள்ளனர் என, அரசு தீர்மானமாக நம்புகிறது.
'தொடர்ந்து நீண்டகால நோக்கோடு எடுக்கப்படும் பொருளாதார முடிவுகளை மக்கள் ஏற்பர். அத்தகைய முடிவுகள் ஏற்படுத்தும் குறுகியகால தாக்கத்தை பொறுத்துக்கொள்வர்; நெடுங்கால நன்மைகளை உணர்ந்து, முதிர்ச்சியுடன் வாக்களிப்பர்' என்ற நம்பிக்கை அசாதாரணமான அரசியல் துணிச்சல்ஆகும்.
இந்த துணிச்சல்தான் இந்த பட்ஜெட்டின் சிறப்பம்சம். மக்கள் நலனை தொலைநோக்கோடு எதிர்நோக்கும் அரசியல் பொருளாதாரம் ஜெயிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பட்ஜெட்டின் அம்சங்களுக்கு வருவோம். மக்கள் நலனுக்கு செலவிடும் பணத்தை, சீரான வகையில் பிரித்து, சாமானியனுக்கு கொண்டு செல்லும் முயற்சி தொடர்கிறது.
சாமானியர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு, நேரடி மானிய திட்டம், சுகாதார பாதுகாப்பு திட்டம், மின் இணைப்பு, அனைவருக்கும் எரிவாயு இணைப்பு, அனைவருக்கும் விபத்துக் காப்பீடு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், அனைவருக்கும் ஓய்வுதிய திட்டம் என, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அரசு அடுக்கியுள்ளது.
அடிப்படைத் தேவைகளைமக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஒருபுறம் அதிக கவனம் இருந்தாலும், பொருளாதார நகர்வில் அடுத்த கட்டத்திற்கு மக்களை கொண்டு செல்வதிலும் முக்கியத்துவம்காட்டியுள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை, கிராமச் சந்தை, மீனவர்களுக்கும், கால்நடைகள் வளர்ப்போருக்கும் கிசான் அட்டை.
மேலும் மூன்று கோடி பேருக்கு முத்ரா கடன் வசதி, மேற்படிப்பிற்கு கடன் தரும் நிறுவன முறை, அதி வேகமாக நிறுவப்பட உள்ள சாலை உட்கட்டமைப்பு பணிகள், உணவு உற்பத்திக்கான பூங்காக்கள் என, அடுத்தகட்ட திட்டப்பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
வளர்ச்சியின் மீது கவனம் ஒரு புறம் இருந்தாலும், அதற்கு தேவையான வருவாயை ஈட்டுவதிலும் அரசு வெற்றிபெற வேண்டும்.
வருவாயை ஈட்ட மறைமுக வரிகளை சீராக வசூல் செய்ய வேண்டும். அரசின் நேரடி வரிவசூல் மேலும் பெருக வேண்டும். ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்து ஓராண்டு காலம் கூட நிறைவு அடையாத நிலையில், அதன் சீரான இயக்கத்திற்கு முழுபலம் சேர்த்து, வெற்றி அடையச் செய்வதில் அரசு முழு நம்பிக்கை காட்டுகிறது.
மேலும் நேரடி வரி வருவாய் அதிகரிப்புக்கு தேவையான கடினமான முடிவுகளை எடுத்து வெற்றியும் கண்டுள்ளது.
கடந்த, 1997ல் கொடுக்கப்பட்ட வரி விதிவிலக்கை மாற்றியமைக்க, தொடர்ந்து வந்த அரசுகள் காட்டிய தயக்கத்தை, இந்த அரசு தகர்த்து எறிந்துள்ளது.
இத்தகைய கடினமான முடிவுகளை எடுத்து, மக்களின் ஆதரவை தன்னால் பெறமுடியும் என்று நாட்டின் தலைமை நம்புவது, நம் வருங்காலத்திற்கு ஒரு பெரிய பலம்.
அந்த பலம் தொடர்ந்து நம் வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
- ஷியாம் சேகர் -
செல்லும்பாதை தீர்மானமானது.நாமும் நம்பிக்கை கொள்வோம்
No comments:
Post a Comment