Tuesday, 22 July 2014

Tamil - பதனீர் இருதய நோய் வராமல் தடுக்கிறது' - About Palm Tree Beinifits

'பதனீர் இருதய நோய் வராமல் தடுக்கிறது'
பனை தரும் பதனீர், இருதய நோய் வராமல் தடுக்கிறது. குளுக்கோமா என்ற கண் நோய் வராமல் பாதுகாக்கிறது. எனவே முதல்வர் ஜெயலலிதா, பனைமரம் மூலம் தமிழ்நாடு பலன் பெற ஆவன செய்ய வேண்டும் என்று குமரி அனந்தன் கூறினார்.
திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் காந்தி பேரவை சார்பில் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவர் குமரி அனந்தன், "பனை தரும் பதனீர், இருதய நோய் வராமல் தடுக்கிறது. குளுக்கோமா என்ற கண் நோய் வராமல் பாதுகாக்கிறது. எலும்பையும் பல்லையும் உறுதிப் படுத்துகிறது. உடலுக்கும் மூளைக்கும் நலன்தரும் பதனீரை பல நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க, காகிதக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் வேதிப் பொருள் கலந்து வெளிநாட்டார் கண்டு பிடித்த கோலா போன்றவற்றிற்குப்பதிலாக பதனீர் குடிக்குமாறு மக்களை பழக்கப்படுத்த வேண்டும். ரெயில் மற்றும் வாகனங்களிலும், அதற்காக மக்கள் கூடும் இடங்களிலும் சுக்கு மல்லி, கருப்புக்கட்டி காபி விற்பனை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள 5 கோடி பனை மரங்களில் 4 கோடி மரங்களில் பதனீர் எடுத்தால் பருவ காலத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 200 கோடி கிடைக்கும். ஒரு பனை ஒரு நாளைக்கு 5 லிட்டர் பதனீர் தந்தால், லிட்டர் 10 ரூபாய் வீதம் 200 கோடி ரூபாய் வரும்.
அதேபோல 1 ஏக்கரில் 400 பனைகள் வளர்க்கலாம். ஊடுபயிராக தட்டாம் பயிறு பயிரிடலாம். வரப்பு எல்லைகளில் முருங்கை நடலாம். ஒரு பனை மரத்துக்கு 5 லிட்டர் பதனீர் என்று கணக்கிட்டால் பருவ காலத்தில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். பனை ஓலைகளில் விசிட் டிங் கார்டு, திருமண மற்றும் விழா அழைப்பிதழ்கள் அச்சிடும் பழக்கம் வந்து விட்டால் பருவமல்லாத காலங்களிலும் பனை மரங்கள் பண மரங்களாகி விடும்.
பனையில் இருந்து பெறும் உணவு பண்டங்களை வழங்கும் உணவு விடுதி வர வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. நுங்கு ஜாம் போன்றவை மட்டுமல்ல பனங்கிழங்கு மாவில் இருந்து தோசை, இட்லி, உப்புமா செய்யலாம். இனிப்பு சேர்த்து லட்டு, கேசரி போன்றவை செய்யலாம்.
கற்பகத் தருவின் அற்புத உணவகம் என்ற பெயரில் ஏற்கனவே பெரிய அளவில் உணவு விடுகள் நடத்துவோர் அல்லது நண்பர்கள் சேர்ந்து சென்னையில் பனை பொருள் உணவு விடுதி நடத்தலாம். காந்தி அடிகள் 20.9.1921 ல் ஸ்ரீரங்கம் வந்த போது, நகரசபை, பனை ஓலையில் எழுதி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை பெரிதும் மகிழ்ந்து காந்தி பாராட்டினார். அந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் காந்தியை மகிழ செய்த பனைமரம் மூலம் தமிழ்நாடு பலன் பெற ஆவன செய்ய வேண்டும்" என்று கூறினார்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing